Header Ads



நீர்கொழும்பு பள்ளிவாசலில் பொலிஸ், அதிகாரியின் அதிரடி உரை


- Ismathul Rahuman -


சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் பொலிஸாரிலும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் உரையாற்றும்போது கூறினார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


நான் நீர்கொழும்பு பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளேன். பொலிஸார் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் இல்லை.


அவர்களும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதனால் தவறுகள் இடம்பெறலாம். ஒருசில பொலிஸார் பணம் எடுப்பதாக கூறுகிறார்கள். அதில் இருபக்கமும் உள்ளன. பணம் கொடுப்பவர்களும் இருப்பதனால்தான் பணம் எடுக்கிறார்கள்.


  சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால் பொலிஸாரிலும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். 


அதனை ஏற்படுத்துவதற்காக எனது பிரதேசத்தில் பொலிஸார் மத்தியில் மறுசீரமைப்பை செய்து கொண்டிருக்கிறேன். மைதானம் சீராக இருந்தால் தான் ஒழுங்காக விளையாடமுடியும்.  


  சரியான தலைமைத்துவமும் உரிய திட்டமிடலுமே  25-30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள ஏதுவானது.  அதேபோல் பொலிஸாரை சீர் செய்து கொண்டு சமூகத்தில் நுளைவேன்.


பள்ளிவாசலுக்கு நல்லவர்களும் வருவார்கள் கெட்டவர்களும் வருவார்கள். எமக்கும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டறிவது கடிணம்.  


போதைப் பொருள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பது   ஊரிலுள்ள உங்களுக்குத்தான் தெரியும். ஆனாலும் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறீர்கள். சொற்ப தொகையினருக்காக அஞ்சி முழு சமூகமும் வாய்மூடி இருக்கின்றது.  


    பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால் போதைப் பொருள் வியாபாரிகளின் வீட்டிற்கு முன்னால்   யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதுமில்லை. கல் அடிப்பதுமில்லை.


  இங்கு இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன். இங்கு வாலிபர்களை காணமுடியவில்லை. அவர்களுக்கு எனது செய்தியை சொல்லவேண்டும். அடுத்த முறை வாலிபர்கள் மத்தியில் உரையாற்ற வருவேன் என கூறினார்.

No comments

Powered by Blogger.