Header Ads



ஸுபஹ் தொழுகையில், ஸுஜூத்தில் நிகழ்ந்த இர்பான் மௌலவியின் மரணம் (பாடமும், படிப்பினையும் பெறுவோம்)


சில மனிதர்களை நாமும் அவர்கள் வாழும் போதே அடையாளம் கண்டு எடை போடுவோம். சிலரை மரணத்தின் போது தான் எடை போடுவோம். அப்போது கைசேதப்படுவோம். அவர்களுடன் இன்னும் பேசி இருக்கலாமே கதைத்திருக்கலாமே என்று,  அப்படிப்பட்ட சிறப்பான பாக்கியம் பெற்ற ஜனாஸா தான் இது. இறுதி கடமைகளுக்காக ஊரே திரண்டு வந்த ஜனாஸா. சகலரும் கண்ணீர் விட்டு உள்ளம் உருகிய ஜனாஸா. தனக்கும் இப்படி ஒரு மரண பாக்கியம் வேண்டுமென மனதால் எண்ணிய ஜனாஸா. அந்த ஜனாஸாவை பார்க்க வந்த மக்கள் வெள்ளம் ஒருபுறம். ஜனாஸா தொழுகைக்கு வந்த பெருஞ்சனத்திரள் மெய்சிலிர்க்க வைத்தது.


சில ஜனாஸாவை நபியவர்கள் சிலாகித்து பேசியது நினைவு, அப்படிப்பட்ட ஒரு ஜனாஸா இது. பார்ப்பதையும் கூட பாக்கியமாக கருத வேண்டிய ஜனாஸா.


மௌலவி இர்பான் சன்மார்க்க பணி புரியும் ஒருவர். இறை பாதையில் தன் வாழ்வை கழித்தவர். ஆன்மீக ஈடுபாடுள்ள நல்ல மனிதர்களை உருவாக்கும் ஒருவர். உஸ்தாத் ஆக பணியாற்றி மாணவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். பள்ளிவாயில் இமாம். கடந்த வாரம் மல்வானை பூந்தோட்டம் பள்ளியில் ஒழுக்கம் தொடர்பில் அழகிய வெள்ளி பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தியதாக அல்ஹாஜ் கபூர் இன்று குறிப்பிட்டார். இப்படி ஒரு ஜனாஸா பற்றி தன் வாழ்வில் எந்த தகவலும் இங்கில்லை. இலங்கையில் கூட இருக்குமா என்பது கூட தெரியாது என்றார். இர்பான் மௌலவி ஆரப்பாட்டமிலைலாத, தனது முச்சக்கர வண்டியில் செல்லும் போது கூட பலரையும் ஏற்றி செல்லும் நபர். புன்னகை அவரது மனித மூலதனம்பாடசாலை வழியில் கண்டாலும் சிரிக்க தவற மாட்டார். தன்னை popular ஆளாக காட்டிக்கொள்ளாத அடக்கமான ஆள்.


 அல்லாஹ்விடம் இவ்வளவு அந்தஸ்துள்ள ஆள் என்பதை மரணத்தின் பின்னர் தான் அறிய முடிந்தது அனைவருக்கும். அல்லாஹ் அவறை பொருந்திக்கொண்டு நிறைவான சுவனத்தையும் வழங்கட்டும். குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதலை பொறுமையை வழங்கட்டும். அவரது அந்தஸ்தை உயர்த்தி நபிமார்களுடனும் சித்தீக்கீன்களுடனும் ஷுஹதாக்களுடனும் இணைத்து வைக்கட்டும்.  


மல்வானை இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக மிகவுமே அறியப்பட்ட ஊர். மல்வானை ஒப்பந்தம் இதற்கு தக்க சான்று. அதே போல மல்வானையின் ஆன்மீக வரலாறும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தவறிக்க முடியாத தனித்துவ இடத்தை பிடித்துள்ளது. இங்கு சமய சன்மார்க்க பணிகளில் முழுமொசாக ஈடுபட்ட ஆத்மீக மனிதர்களான முபாரக் மௌலானா, அஹ்மத் ரிபாய் பாம்பு மௌலானா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மல்வானையில் இன்னும் ஆன்மீக மணங்கமழும் வணக்க வழிபாடுகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.


மல்வானை வரலாற்றில் இன்று நிகழ்ந்த அதிசய மரணம் இதற்கு முன்னர் தம் பரம்பரை வழியாகவேனும் கேட்டே இல்லாத ஒன்று என்று நான் தனிப்பட்ட வகையில் விசாரித்த போது மூத்த பலரும் உறுதிபட  உறுதிபட கூறினர். பள்ளிவாயில் வளாகத்தில் வைத்து உரையாற்றிய முன்னாள் மேன்முறையீற்று நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் கபூர் அவர்களும் ‘நினைவுக்கெட்டிய காலம் முதல் மள்வானையிலோ இலங்கையிலோ இப்படி ஒன்றை கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்.


மல்வானையில் நானறிந்த வகையில் கடந்த பத்தாண்டுகளுள் அண்மையில் மூன்று மரணங்கள் (சகோதரர் ஜெஸ்மில், அஸ்வர் ஹாஜியார், நிதாம் ஹாஜியார்) இப்படி பெருந்திரளான மனிதர்களின் கண்ணீருடனும் துஆஉடனும் நிகழ்ந்தன.


அல்லாஹ் யாரை நேசிக்கின்றானோ அவர்களை அவனும் நேசிக்கின்றான். அல்லாஹ் நேசிக்கின்றவர்களுக்கு பரம்பரையோ நிறமோ அந்தஸ்தோ சமூக அங்கீகாரமோ அவசியமில்லை. நபியவர்கள் சொன்னது போல “யார் அல்லாஹ்வுக்கு பணிந்து நடக்கின்றார்களோ அல்லாஹ் அவர்களை உயர்த்தி விடுவான்” அது உலகத்திலும் உயர்த்துவான், மறுமையிலும் உயர்த்துவான் என்பது தான் அர்த்தம்.


அந்த வகையில் தான் இன்று நிகழ்ந்த அதிசய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரணம் இங்கு பதியப்படுகிறது. மௌலவி இர்பான் ஆர்ப்பாட்டமெதுவுமில்லாத மெல்லிய மனிதர். அவரது முகமெங்கும் புது மலர் போல பூத்திருக்கும்  அப்பழுக்கற்ற புன்னகை தான் அவரது மனித உறவுகளின் முதலீடு. மிகப்பெரும் பிரபல்யமோ பண பலமோ அவரிடம் இருந்ததில்லை. காட்டியதுமில்லை. நாமும் அப்படி அவரை கண்டதுமில்லை.


தான் கற்ற சமய சன்மார்க்க அறிவைக்கொண்டு அவரது பாட்டில் அமைதியாக அமல்களில் ஈடுபட்டு வந்தவர். தனது வட்டத்தில் மாத்திரம் மிகப்பெரும்பாலும் நன்கு அறிமுகமானவர். தனக்கென்ற ஒரு வாரிசுக்கூட்டத்தை சமயம் சார்ந்து உருவாக்கிய உஸ்தாத். அவர் திருமணம் முடித்ததும் கூட சாதாரண ஏழ்மைக்குடும்பம் ஒன்றில் தான்.


அல்லாஹ் வெளிதோற்றங்களையோ உடல் அடையாளங்களையோ பார்ப்பதில்லை. மாற்றமாக உள்ளங்களையும் அதன் வழியாக வரும் உயர்ந்த எண்ணங்களையும் செயல்களையுமே பார்க்கிறான். கூலி வழங்குகின்றான். எண்ணத்தளவில் அவர் அல்லாஹ்விடம் எந்தளவு உயர்ந்து விட்டார் என்றால் அது மிகையாகாது.


 நபியவர்களது மிக அழகிய உருக்கமான  பிரார்த்தனை போல “ இறைவா எனது வாழ்வின் இறுதிக்காலத்தை சிறந்ததாக ஆக்கிவை, எனது அமல்களில் கடைசி அமலை சிறந்ததாக ஆக்கி வை, உன்னை சந்திக்கும் நாளை மிகச்சிறந்த நாளாக ஆக்கி வை” சகோதரர் இர்பான் ஆலிமின் வாழ்வு அமைந்தது எல்லோருக்கும் மகத்தான படிப்பினை.


நபியவர்கள் ஹுஸ்னுல் காதிமா எனும் அழகிய இறுதி முடிவுக்காக அடிக்கடி பிரார்த்திப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் போராளியான காலித் இப்னு வலீத் அவர்களுக்கு யுத்தத்தில் கலந்துகொண்டு ஷஹீத் எனும் உயர் அந்தஸ்து கிடைக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதே நேரம் ஒரு ஸுஜூத் கூட செய்யாத  புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் அந்த பாக்கியத்தை பெற்றார் என்பதை படித்திருப்போம். 2ம் கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு கூட தொழுகையில் ஸுஜூதில் இருக்கும் நிலையில் உயிர் பிரிய வேண்டும் என்று ஆசை வைத்தார்.  


இர்பான் ஆலிமும்  கூட அவரது அந்திம நாளை மிகச்சிறந்த முறையில் கழித்தவர். வசிப்பிடத்திலிருந்து எட்டிப்பார்த்தால் தென்படும் பள்ளியில் இருந்து சற்று தொலைவில் உள்ள ( சுமார் 2km) பள்ளிக்கு உடனடியாக சென்று கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்றும் வெள்ளி இரவின் வாராந்த ஆன்மிகம் சார்ந்த ஓதல்களை திக்ர் மஜ்லிஸ்களை நடாத்த உடனே புறப்பட்டு தமது ஆன்மீக தலமைகளுக்கு கட்டுப்பட்டு  பணியாற்றி கூட்டான அமல்களில் ஈடுபட்டு இரவை கழித்துள்ளார்.


அடுத்த  நாள் அதாவது இன்று வெள்ளிக்கிழமை (  14/07/2023) காலை அதிகாலை ஸுபஹ் தொழுகையை முன்னின்று இமாமாக நடாத்த சென்று முதல் ரகாஅத்தில் நபியவர்கள் ஓதிவந்த ஸுன்னத்தான ஸூரா ஸஜ்தாவை ஓதி ஸஜ்தா செய்யும் இடம் வந்த போது ஸுஜூதுக்கு சென்றுள்ளார். ஸுப்ஹானகலிமா 3 விடுத்தம் ஓதும் கால அளவும் முடிந்து இமாம் எழும்பாமை  மற்றும் ஹ்ம்ஹ்ம் என இறுமுவது போன்ற  மூன்று சத்தங்கள் கேட்டு  முதல் ஸப்பில் இருந்த ஒருவர் (மாமா என நினைக்கிறேன்) தலையை தூக்கி பார்க்க இமாம் ஸுஜூத் நிலையில் இருந்து சற்று சரிந்து        அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையை விட்டு எழுந்துள்ளார். அந்த நிமிடமே உயிர் பிரிந்துள்ளது 


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன். 


புனித மாதம் துள் ஹிஜ்ஜாவின் இறுதி நாட்கள், புனித நாள், புனித இடமான பள்ளி புனித கடமையான அதிகாலை தொழுகை அதிலும் மனனத்துடன் அல் குர்ஆன் ஓதி இமாமத் செய்யும் நிலை, அதிலும் முக்கியமாக ஸுன்னத்தான ஓதலான ஸூரா ஸஜ்தாவை ஓதி ஸஜ்தா வருமிடத்தில் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஸுப்ஹான கலிமா ஒதும் நிலையில் உயிர் பிரிந்துள்ளது பெரும் பாக்கியம் தான்.

முதல் 14  முன்னைய வசனங்கள் எவ்வளவு ஆழமான உண்மைய உணர்த்துகின்றன பாருங்கள்.

இது அவர் மரணிக்க முன் ஓதிய 15 ம் வசனம்

إِنَّمَا يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْ سُجَّدًا وَسَبَّحُواْ بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்


அல்லாஹ்விடத்தில் கண்ணியமான மனிதர்களின் இறுதி மூச்சை அல்லாஹ் இப்படித்தான் எடுப்பான்.     

சின்னச்சின்ன விடயங்களுக்காக மனிதர்களை பிழையாக எடை போட்டு வாழும் சூழலில் இப்படியான மெல்லிய மனிதர்களின் மரணங்கள் மூலம் நாம் பாடமும் படிப்பினையும் பெற வேண்டும். அல்லாஹ் இத்தகைய உயர்ந்த பாக்கியத்தை எம் அனைவருக்கும் அருள வேண்டும்.


எம் பாவங்களையும் மன்னித்து உள்ளங்களை பரிசுத்தமாக்கி வைக்கட்டும். சகலருடனும் பாரபட்சம் காட்டாது எமது உலகியல் அந்தஸ்துக்களை வைத்து பெருமை காட்டாது இருப்போம். எமது செயல்களை தூய்மையாக்குவோம். மனித மாணிக்கங்களாக வாழ்ந்து சுவன பாக்கியம் பெற்ற மரணத்தை அடைந்துகொள்ள பிரார்த்திப்போம்.


 *Ash: M. M. A. Bisthamy (Naleemi)*  14/07/2023





No comments

Powered by Blogger.