Header Ads



சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண மக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர்


பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என மீண்டும் வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தினால் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் பேசிய அவர், தற்போதுள்ள சட்டங்களான பொதுச் சொத்துச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்களே பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க போதுமானவை எனவும் தெரிவித்துள்ளார்.


சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண குடிமக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர் என்றும், அதேசமயம் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் அதிகாரத்தின் காரணமாக விடுதலையாகி விடுவதாகவும் தெரிவித்தார்.


“தேங்காய் திருடியதற்காக ஒருவர் பிடிபட்டார், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அது எப்படி வரும்? நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரமே தவிர, சட்டத்தில் பிரச்சினை இல்லை. இது பெரும்பான்மையான அரசியல் அதிகாரம், ஒரு சில உயர் அதிகாரிகள், பல பொலிஸ் அதிகாரிகள், பல தொழில் அதிபர்கள் மற்றும் ஊடக அதிபர்களை உள்ளடக்கிய ஒரு தீய வட்டம். இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தீய வட்டம். வலுவான அரசியல் அமைப்பினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும், சட்டங்களால் மட்டும் அல்ல,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.