மன்னாரில் சிக்கியுள்ள கப்பலையும், கொள்கலனையும் மீட்க இந்திய கப்பல் அவசரமாக வருகிறது
குறித்த கப்பல் இன்று மாலை 5 மணியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவிலிருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கிப் கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு பயணித்த கப்பல் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மன்னார், பேசாலை – நடுக்குடா பகுதியில் நேற்று கரைதட்டியது. அந்தக் கப்பலில், 11 பணியாளர்கள் உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த நிறுவனமும் கடற்படையும், சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்பு பணியகமும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தியாவிலிருந்து மாலைதீவுக்கு பொருட்களைக் கொண்டு சென்ற, குறித்த கொள்கலன் தாங்கி, அங்கிருந்து மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட வழியில், இலங்கை கடற்பரப்பில் கரைத் தட்டியுள்ளது. 87 மீற்றர் நீளமான குறித்த கொள்கலன் தாங்கி, எந்தவித பொருட்களும் அற்ற நிலையிலேயே கொண்டு செல்லப்பட்டுள்ளது. கப்பல் மூலம் குறித்த கொள்கலன் தாங்கி இழுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், கடற்பிராந்தியத்தில் வீசிய கடும் காற்று மற்றும் அலையின் சீற்றம் காரணமாக, குறித்த கப்பலும், கொள்கலன் தாங்கியும் இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்பதற்காக, இந்தியக் கப்பல் ஒன்று இன்று மாலை இலங்கையை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னரே, எவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கலாம் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடலின் சீற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளதுடன், குறித்த கொள்கலன் தாங்கி எந்தளவு ஆழத்திற்கு கரைதட்டியுள்ளது என்பதை ஆராய வேண்டும். எவ்வாறாயினும், மீட்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment