அஹ்னாப் வழக்கில், சாகிர் நாயக் விவகாரம் (அரச சட்டவாதியால் தொடுக்கப்பட்ட கேள்விகள்)
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் நடந்து 2 வருடங்களின் பின்னர், ‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டார். பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஹ்னாப் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக நிரூபிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்லது அரச தரப்பு நீதிமன்றம் முன்னிலையில் கொண்டுவந்த முதல் இரண்டு சாட்சியங்களும் அரச தரப்பு எதிர்பார்க்காத நிலைப்பாட்டினை மன்றில் வெளிப்படுத்தி, கவிஞர் அஹ்னாப் ஜஸீம் அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு அற்றவர் என மன்றில் உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ள நிலையில், 3 ஆவது சாட்சியாளராக மாணவன் ஒருவரின் சாட்சியம் கடந்த வாரம் (ஜூன் 28) பதிவு செய்யப்பட்டது.
புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் இந்த சாட்சி விசாரணை நடாத்தப்பட்டது.
இதன்போது சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
வழக்கின் அனைத்து விடயங்களும் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ஊடாக குற்றம் சாட்டப்பட்ட அஹ்னாப் ஜஸீமுக்கு, நீதிபதியின் உத்தரவின் பேரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இறுதியாக கடந்த ஜூன் 28 ஆம் திகதி புதனன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக்க மன்றில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான சஞ்சய் வில்சன் ஜயசேகர, ஹுஸ்னி ராஜித் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் -மதுரங்குளி பகுதியில் உள்ள எக்ஸலென்ஸி எனும் பெயரை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன, மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஒரே ஒரு குற்றச்சாட்டே சுமத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி (சுற்றவாளி) என அஹ்னாப் ஜஸீம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே சாட்சி விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் புத்தளம், ஸ்கூல் ஒப் எக்சலன்ஸி எனும் ஆங்கில மொழி மூல பாடசாலையின் அதிபர் ஹிதாயதுல்லாஹ் அஜ்மல் , அப்பாடசாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனான தற்போது 21 வயதுடைய அபூ தாஹிர் மொஹம்மட் அசிராஜ் எனும் இளைஞன் ஆகியோர் சாட்சியமளித்து முடித்திருந்தனர்.
இந்த பின்னணியுடனேயே கடந்த ஜூன் 28 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது மொஹம்மட் பெளஸி மொஹம்மட் பசாரத் எனும் 21 வயது இளைஞனின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலகவின் நெறிப்படுத்தலில் இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
சாட்சியம் நெறிப்படுத்தப்படும் போது, அரச சட்டவாதி, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பதிவான ஹிஜாப் பிரச்சினை, சர்வதேச அளவில் இஸ்லாமிய மத போதகராக அறியப்படும் சாகிர் நாயக்கை மையப்படுத்தியும் கேள்விகளை தொடுத்து சாட்சியத்தை நெறிப்படுத்தியிருந்தார். இதனைவிட அளுத்கம, திகன வன்முறைகள் தொடர்பிலும் கேள்விகள் தொடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை உள்ளது என்பதற்கு உதாரணமாக கர்நாடகா மாநிலத்தில் பதிவான ஹிஜாப் பிரச்சினையையும், பிரதிவாதி அடிப்படைவாத உரைகளை இணையம் ஊடாக காண்பித்தாரா என்பதற்கு உதாரணமாக சாகிர் நாயக்கின் பெயரையும் அரச சட்டவாதி பயன்படுத்தியிருந்தார்.
கே: அஹ்னாப் சேர் அவர் எழுதிய புத்தகங்கள் தொடர்பில் கூறியிருக்கின்றாரா?
ப: ஆம்
கே: அது என்ன புத்தகம்?
ப: கவிதை புத்தகம்
கே: புத்தகத்தின் பெயர் என்ன?
ப: நவரசம்
கே: அதனை வாசித்துள்ளீரா ?
ப: நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஓரிரு கவிதைகள் வாசித்துள்ளேன்.
கே: விடுதியில் தொலைக்காட்சி இருந்ததா?
ப: இல்லை.
கே:உங்களிடம் நவீன கையடக்கத் தொலைபேசி இருந்ததா?
ப: அப்போது இருக்கவில்லை.
கே: அஹ்னாப் சேரிடம் இலத்திரனியல் உபகரணங்கள் இருந்தனவா?
ப: ஆம், மடிக்கணினி, தொலைபேசி இருந்தன.
கே: அஹ்னாப் சேருடன் நீங்கள் கதைக்கும் போது அவர் உங்களுக்கு காணொளிகள் காண்பிப்பாரா?
ப: ஆம்
கே: அந்த காணொளிகளில் பிரசார உரைகள் இருந்தனவா? அதாவது சாகிர் நாயக் போன்றவர்களின் உரைகளை காண்பித்துள்ளாரா?
ப: ஆம்
கே: வேறு யாரின் உரைகளை காண்பித்துள்ளார்?
ப: பாடங்களுடன் தொடர்புடைய விடயங்களை காண்பித்து விளக்குவார். பிரச்சாரகர்கள் பெயர் தெரியாது.
கே: உலகில் நடக்கும் விடயங்கள் தொடர்பில் யூ ரியூப்பில் காணொளிகளை காட்டுவாரா?
ப: இல்லை
கே; 2019 இல் சிரியா, ஈராக்கில் பிரச்சினை நடந்தது தெரியுமா ?
ப: ஆம்
கே: அந்த நாடுகளில் மோதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்படுத்தியது அல்லவே?
ப: அதன் உருவாக்கம் தொடர்பில் எனக்கு தெரியாது.
கே: அந்த போரினால் முஸ்லிம்களுக்கு கடும் அழிவு அந்த நாடுகளில் ஏற்பட்டதை அறிவீரா ?
ப: போர் நடந்தது தெரியும். அழிவுகள் தொடர்பில் தெரியாது.
கே: அந்த போர் காட்சிகளை அஹ்னாப் சேரின் மடிக்கணினியில் பார்த்தீரா?
ப: இல்லை.
கே: முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பது குறித்து தெரியுமா ?
ப: தெரியாது.
கே: இந்தியாவில் ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை உள்ளமை தெரியுமா ?
ப: அவ்வளவாக தெரியாது.
கே: இந்தியாவில் முஸ்லிம் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றதால் ஏற்பட்ட பிரச்சினை தெரியுமா?
ப: ஆம்.
கே: எதற்காக ஹிஜாப் அணிந்தமையை ஹிந்துக் குழு எதிர்த்தது?
ப: அது குறித்து தெரியாது.
கே: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தது தெரியுமா?
பதில் : ஆம்.
கே: எவ்வாறான வன்முறைகள் அல்லது பிரச்சினைகள் நடந்தன ?
பதில் : பெண்கள் முகத்தை மூடுவதற்கு எதிராக …..
கே: அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடந்தது…அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பிரச்சினைகள் தொடர்பிலேயே நான் கேட்கின்றேன்..?
ப: அதற்கு முன்னர் தெரியாது.
கே: அளுத்கம – தர்கா நகர் பிரச்சினை தெரியுமா?
ப: தெரியாது
கே: கண்டி – திகன பிரச்சினை தெரியுமா? சிங்களவர்கள் முஸ்லிம்களை தாக்கினார்கள் என தெரியுமா?
ப: திகன பிரச்சினை கேள்விப்பட்டுள்ளேன்.. அவ்வளவாக தெரியாது.
கே: அங்கு முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் உடைத்து எரிக்கப்பட்டது தெரியுமா?
ப: தெரியாது.
கே: தர்கா நகரில் தேரர் ஒருவர் சென்று பிரசாரம் செய்தமையால் முஸ்லிம்கள் மீது வன்முறை வெடித்தது தெரியுமா?
ப: தெரியாது.
இதன்போது நீதிபதி சாட்சியாளரை நோக்கி உங்கள் வயது என்ன? என கேள்வி எழுப்பினார். சாட்சியாளர் அதற்கு 21 என பதிலளித்தார்.
இதன்போது பிரதிவாதி அஹ்னாப் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தர்கா நகர் பிரச்சினையின் போது சாட்சியாளருக்கு வெறும் 10 வயது மட்டுமே என்பதை சுட்டிக்காட்டியதுடன், அதனை அறியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிட்டார்.
இதனையடுத்து சாட்சியம் தொடர்ந்தும் பதிவு செய்யப்பட்டது.
கே: அஹ்னாப் சேர் காணொளிகளை காட்டி உங்களுக்கு விளக்கமளிப்பாரா?
ப: ஆம்… பாடங்களில் சந்தேகங்களை நாம் அவரிடமே கேட்போம். தமிழ், வரலாறு போன்ற பாடங்கள் குறித்த சந்தேகங்களை கேட்போம். அப்போது அவர் மடிக்கனிணியில் வீடியோக்களையும் காட்டி விளக்கமளிப்பார். முதலாம் உலகப் போர், 2 ஆம் உலகப் போர் தொடர்பில் அவர் அவ்வாறு விளக்கமளித்தார்.
கே: முப்தி மாலிக் என்ற ஒருவரின் உரையை பார்த்துள்ளீர்களா?
ப: இல்லை.
கே: அந்த உரைகளை பார்த்துவிட்டு, அதில் நீங்கள் அறிந்த இஸ்லாத்துக்கு மாற்றமான விடயங்கள் கூறப்பட்டால் அஹ்னாப் சேரிடம் கலந்துரையாடுவீர்களா?
ப: ஆம்.
கே: ஜிஹாத் தொடர்பில் அவ்வாறு பேசியுள்ளீர்களா?
ப: இல்லை.
கே: ஜிஹாத் என்றால் என்ன?
ப: இஸ்லாத்தின் பாதையில் போரிடுவது
கே: முஸ்லிம்களுக்கு எதிரான உலகளவிலான வன்முறைகள் தொடர்பில் எடுக்க முடியுமான எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுமா?
ப: அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
கே: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கேள்விப்படும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும் ?
ப: கவலைப்படுவோம். அவ்வளவு தான்…என சாட்சியமளித்தார்
எவ்வாறாயினும் பிரதிவாதியின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணை செய்யும் போது, சாட்சியாளர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் போது சாகிர் நாயக் தொடர்பில் எதனையும் கூறியிருக்கவில்லை என்பதை அவரது வாக்கு மூலத்தின் மூலப் பிரதி கொண்டு மன்றுக்கு நிரூபித்தார்.
அத்துடன் சாகிர் நாயக்கின் உரைகளை கேட்டதாக வழங்கப்பட்ட சாட்சியம் தொடர்பிலும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதுடன், சாகிர் நாயக்கின் உரைகள் ஒன்றும் தவறானது அல்ல என்பதை சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் பதிவு செய்தார்.
இதன்போது சட்டத்தரணி ருஷ்தி, சாட்சியாளரிடம் ஜிஹாத் தொடர்பில் குறுக்கு விசாரணை செய்தார்.
கே: ஜிஹாத் தொடர்பில் எப்போது அறிந்து கொண்டீர்?விடுதியில் இருக்கும்போதா? அதன் பின்னரா?
ப: விடுதியில் இருக்கும்போது அல்ல. அதன் பின்னரே அறிந்து கொண்டேன்.
கே: எப்படி அறிந்தீர் ?
ப: வெள்ளிக்கிழமை பயான் ஊடாக அறிந்தேன்.
கே: எங்கு வைத்து அறிந்தீர் ?
ப: எமது ஊர் பள்ளிவாசல், தில்லையடி.
கே: அந்த பயான் ஊடாக எதிர்பார்க்கப்பட்டது என்ன?
ப: தெரியாது.
கே: அந்த பயானில் ஜிஹாத் செய்யுமாறு கூறினார்களா?
ப: இல்லை. இல்லை. ஜிஹாத் நபிமார்கள் செய்தது. நம் நல்ல செயல்கள் தான தர்மங்களை செய்தால் அந்த நன்மையைப் பெறலாம் என கூறினார்கள்.
அத்துடன், குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஏனைய மதத்தினருக்கு எதிராக பகைமையை பிரதிவாதி தூண்டினார் ‘ என்பதை மையப்படுத்தி சாட்சியாளர் பசாரத்திடம் குறுக்கு விசாரணை சட்டத்தரணி ருஷ்தி ஹபீபால் செய்யப்பட்டது. தனக்கு பிரதிவாதியின் செயற்பாடு ஊடாக எந்த பகைமையும் ஏனைய மதத்தவர்கள் தொடர்பில் ஏற்படவில்லை எனவும், தான் சொல்லாத விடயத்தை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தனது வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார். அதனை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.
இந்த விடயத்தை பதிவு செய்த நீதிமன்றம், இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்தி வைத்துள்ளது.- Vidivelli
Post a Comment