ரணிலின் விஜயத்தினால் லாபமடைந்த இந்திய பணக்காரர்
''இந்த விஜயத்தை பாசிடிவாக நான் பார்க்கவில்லை. நாங்கள் பல காலமாக 13வது திருத்தச் சட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கனவே இருக்கின்றது. அதை நடைமுறைப்படுத்துங்கள் என ராஜீவ் காந்தி சமயத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஒரு காலத்திலும் இதற்கு இலங்கை செவி சாய்க்கவில்லை. இதனை பெரிய நகைச்சுவையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசியல் சாசன சட்டத்தில் இருக்கின்ற ஒரு விடயத்தை மறுபடியும் ஒரு அயல் நாடு வலியுறுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இலங்கைக்கு இருக்கின்றது. அதை வாயை கூசாமல் இந்தியாவிலிருந்த அனைத்து பிரதமர்களும் செய்து வந்திருக்கின்றார்கள். அதையே இன்றும் நரேந்திர மோடி செய்திருக்கின்றார்." என அவர் பதிலளித்தார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல தொடர்புகள் குறித்து பேசப்பட்டுள்ளன. மின்சக்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. இது தொடர்பில் உங்களின் பார்வை என்ன?
''இதுவொரு தனியாருக்கான விடயமாகவே நான் பார்க்கின்றேன். நரேந்திர மோடி, அதானிக்காக பேசுகின்ற விடயமாகவே பார்க்கின்றேன். அவருக்கான பேச்சாளராகவே ஒரு பிரதமர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் உள்ளிட்ட திட்டங்களை நரேந்திர மோடி, அதானிக்காக பேசுகின்ற விடயமாக தான் பார்க்க வேண்டியுள்ளது." என அவர் கூறினார்.
''சென்னை மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான படகு சேவை மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த சேவையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆட்கள் இல்லை. ஒரு காலத்தில் விமான சேவைகளில் பயணிப்பது செலவு அதிகமாக காணப்பட்டது. அதனால், மக்கள் அந்த காலத்தில் படகு சேவையை பயன்படுத்தினார்கள். இன்றைக்கு அந்த சூழ்நிலை கிடையாது. இலங்கையிலிருந்து சிங்கள மக்களே அதிகமாக இந்தியாவிற்கு வருகின்றார்கள். புத்தகய போன்ற இடங்களுக்கே அவர்கள் செல்கின்றார்கள்.
சென்னைக்கு பொருட்களை வாங்கி இலங்கையில் விற்பது அல்லது தன்னுடைய உறவினர்களுக்காக வருகின்றார்கள். சரக்குகள் அதிகளவில் வருமா என்று தெரியவில்லை. ஏனென்றால், சீன பொருட்களின் ஆதிக்கம் இலங்கையில் மாத்திரம் அல்ல, இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய தொலைநோக்கு பார்வையில் என்ன சொல்ல முடியும் என்றால், இந்த படகு சேவையானது, முன்னர் ஆரம்பிக்கப்பட்ட படகு சேவையை போன்றே இருக்கும்."
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இதன்படி, நரேந்திர மோடி, அதானி மற்றும் ரணில் ஆகியோர் தொடர்பில் உங்களின் பார்வை எவ்வாறு உள்ளது என பிபிசி தமிழ், அவரிடம் வினவியது.
''ஆம். இந்தியாவிற்கு பெரிய நபர் ஒருவர் விஜயம் செய்து விட்டால், அவர் பிரதமரை பார்க்கின்றாரோ, இல்லையோ... அதானியை பார்க்க வேண்டிய நிலைமை வந்துள்ளது. அதானி தனது வர்த்தக திட்டத்தை கூறியிருப்பார். அவரும் பிரதமரும் ஒன்றையே கூறியிருப்பார்கள். இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும், நேற்றைய சந்திப்புகள் ஏறத்தாழ உண்மை என்று உணர்த்தியிருக்கின்றன. அவர் கூறிய கருத்துக்கள் ஏறத்தாழ உறுதிப்படுத்தும் வகையிலேயே அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கின்றன. இதில் இலங்கைக்கு ஒரு நட்டம் கிடையாது. சிங்கள இனவாத பிரச்னையோ அல்லது தமிழர் இனப் பிரச்னை தீர்வோ கிடையாது. இதுவொரு வர்த்தகத்தை நோக்காக கொண்ட திட்டம். இந்த திட்டத்தில் அனைவரும் நன்மை பெறுவார்கள் என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்கின்றார்கள்." என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஜனாதிபதியாக பதவியேற்கும் ஒருவர் இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதை கொள்கை ரீதியாக வழமையாக வைத்திருந்தார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆகின்ற நிலையிலேயே அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
''நிச்சயமாக. இலங்கை எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்து என்பது இலங்கை இந்தியாவிற்கு எந்தளவு முதன்மை அளிக்கின்றது என்ற விடயமாக இருந்தது. சீனாவின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒரு விடயத்தை பார்க்க வேண்டும். பெரிய திட்டங்கள் எதுவும் கிடையாது. 75 கோடி என்பது இந்தியாவை பொருத்தவரை மிக சிறியதொரு தொகையாகும். இலங்கை தமிழர்களுக்கு இந்த சிறிய அளவிலேயே செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வேண்டுமென்றால், அரசாங்கம் கூறிக்கொள்ளலாம் ரூ.3,500 கோடிக்கு நாங்கள் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளலாம். அது எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் ஆரம்பித்த திட்டங்கள். 2011ல் ஆரம்பித்த திட்டங்கள். ஏறத்தாழ 13 வருடங்கள் ஆகின்றன. என்னை பொருத்த வரை இது அதானிக்கு இலாபத்தை கொடுக்கும் விஜயமாகவே நான் இதனை பார்க்கின்றேன்." என ஆர்.கே.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.
Post a Comment