Header Ads



ரஷ்யா நாட்டவருக்காக தன்னுயிரை தியாகம் செய்த இலங்கையர்


வஸ்கடுவ கடலில் நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியரை காப்பாற்ற கடலில் குதித்த விடுதி உயிர்காப்பாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


எனினும், கடலில் மூழ்கிய ரஷ்ய தம்பதி உட்பட நால்வரை பிரதேச இளைஞர்கள் குழுவொன்று காப்பாற்றியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் இன்று -23- இடம்பெற்றுள்ளது.


களுத்துறை வடக்கு சுமங்கல வீதியில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜி.தனுஷ்க பிரியதர்ஷன பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் வஸ்கடுவ பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் உயிர்காக்கும் காவலராக பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இன்று மதியம் கடலில் நீந்திக் கொண்டிருந்த ரஷ்ய தம்பதி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ரஷ்ய பெண் உதவி கோரி கூச்சலிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் நீந்திக் கொண்டிருந்த போது திடீரென அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து விடுதியின் மேலும் இரண்டு ஊழியர்கள் கடலில் குதித்த போது அவர்களும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.


எவ்வாறாயினும் அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் இணைந்து நீண்ட கயிற்றைப் பயன்படுத்தி ரஷ்ய தம்பதிகள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவரை மீட்டனர்.


ஆபத்தான நிலையில் இருந்த உயிரிழந்த நபர், முச்சக்கர வண்டியில் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


oruvan.

No comments

Powered by Blogger.