Header Ads



கொடுங்கோலன் சிசியும், றபா படுகொலைகளும்..!!


- லத்தீப் பாரூக் -


எகிப்தியர்கள் கெய்ரோவின் றபா அல் அதவியா சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் பத்தாவது ஆண்டை நினவு கூறவுள்ளனர். 2013 ஆகஸ்ட் 14ல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த 1100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.


மிக நீண்ட காலத்தின் பின் எகிப்திய மக்களால் முதல் தடவையாக ஜனநாயக அடிப்படையிலான தேர்தலின் மூலம் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரும், சுதந்திர மற்றும் நீதிக் கட்சியின் தலைவருமான மொஹமட் முர்ஷி எகிப்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவரின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தான் அப்துல்லா அல் சிசி. சிசி நாட்டின் அரசியல் யாப்பை இடை நிறுத்திவிட்டு தன்னைத் தானே இராணுவ ஆட்சியாளராகப் பிரகடனம் செய்து கொண்டார்.


எகிப்தின் முன்னாள் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி தான் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மற்றும் அரசியல் அரங்கில் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்த தரப்பாகும் என்றே பல அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1928ல் ஒரு பாடசாலை ஆசிரியராக இருந்த ஹஸன் அல் பன்னாஹ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட 'இஸ்லாம் தான் தீர்வு' எனும் தொனிப் பொருளில் உருவாக்கப்பட்ட கட்சி தான் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியாகும். தமது நாட்டை படிப்படியாக இஸ்லாமிய மயப்படுத்துவது எப்படி என்பதை ஹஸன் அல் பன்னாஹ்வும் அவரது குழுவினரும் போதித்தனர். மிகவும் வலுவானதோர் காலணித்துவ எதிர்ப்பு பின்புலத்தில் இடம்பெற்ற இந்தப் போதனைகள் மூலம் மிக விரைவாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான உறுதியானதோர் அடித்தளத்தைக் கட்டி எழுப்ப முடிந்தது.


1948ல் சகோதரத்துவக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எகிப்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் கட்சிக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின. ஒரு குறுகிய கால ஒத்தழைப்புக்களும் இதில் அடங்கும் இருந்தாலும் துன்புறுத்தல்களே அதிகம் இருந்தன. இந்த அடக்குமுறைகளை எல்லாம் மீறி எகிப்தில் மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசியல் இயக்கமாகவும், மிகவும் பிரதானமான சிவில் சமூக செயறபாடடு பிரிவாகவும் கடந்த தசாப்தங்களில் சகோதரத்துவ இயக்கம் வலுவடைந்தது.


மக்கள் எழுச்சி போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமையில் சற்று தயக்கம் இருந்தமை ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. இருந்தாலும் 2011 மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் வெற்றியின் பின்னணியில் முக்கிய செயற்பாட்டாளர்களாக சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் இருந்தார்கள் என்பதும் தெளிவானது. ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்ட பின் ஏற்பட்ட அந்த அரசியல் இடைவெளியை தனக்கான ஒரு வாய்ப்பாக இந்த இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.


2011 ஏப்பிரலில் சகோதரத்துவ இயக்கம் தனது சொந்த அரசியல் கட்சியை ஸ்தாபித்தது. சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி என அதற்கு பெயரிடப்பட்டது. அதற்கு அடுத்த வருடம் எகிப்தின் நவீன வலவாற்றில் மிக நீண்ட நாட்களுக்கு பின் சுதந்திரமாகவும் நியாயமாகவும் ஜனநாயக அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சியைச் சேர்ந்த மொஹமட் முர்ஷியை மக்கள் தமது விருப்புக்கு உரிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். 


றபா படுகொலைகள் தான் எகிப்தின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மனிதப் படுகொலைகள் என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களே கொல்லப்பட்டனர். 1989ல் சீனாவின் தியான்மின் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் 2005ல் உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்ற அந்திஜான் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிககையை விட இது அதிகமானதாகும் என்று மேற்குலக ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.


இந்தப் படுகொலையில் அப்பாவி ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் எகிப்திலும் பொதுவாக மத்திய கிழக்கிலும்; அரபு வசன்தத்தின் மற்றும் ஜனநாயகத்தின் முடிவுக்கும் வழியமைத்தன.


ஹொஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் எகிப்திய மக்கள் மீது அநியாயம் இழைக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டனர். இருப்பினும் அந்த ஆட்சிக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் பூரண பாதுகாப்பு வழங்கியது. பலஸ்தீன மக்களின் மேலும் பல காணிகளை இஸ்ரேல் சூறையாட வழங்கப்பட்ட கால அவகாசமே ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கான பாதுகாப்பு. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி தான் இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் மேலும் பல காணிகளை சுவீகரித்து குடியிருப்புக்கள் பலவற்றையும் நிர்மாணித்துக் கொண்டது.


2011 அரபு வசன்த போராட்டத்தின் போது ஹொஸ்னி முபாரக்கை பதவியில் இருந்து வீழ்த்தும் நோக்கில் இலட்சக்கணக்கான எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


அந்தப் போராட்டங்களின் பின் எகிப்திய வரலாற்றில் சுமார் 61 வருடங்களின் பின் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொஹமட் முர்ஸி தெரிவு செய்யப்பட்டார். அந்தப் பிராந்திய கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தெரிவு அபாய மணியாக ஒலித்தது. விஷேடமாக வளைகுடாவில் உள்ள எண்ணெய் ஷேக்மார் விழித்துக் கொண்டனர். அமெரிக்காவும் ஐரோப்பாவும் இஸ்ரேலையும் பாதகாத்து, அரபுலக சர்வாதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் திட்டங்களை வகுத்தன.


எகிப்தில் முர்ஷியை பதவியில் இருந்து கவிழ்த்து, அங்கு துளிர்விட்ட ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்க அவர்கள் எல்லோரும் அவசர அவசரமாக ஒன்று திரண்டனர். அந்த இலக்கை அடைந்து கொள்வதற்கான பிரதான பொறுப்பு சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய முக்கியமான நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சதித் திட்டங்களின் பிரதான ஒத்துழைப்பாளர்களாக இன்று அவர்கள் தான் இருந்து வருகின்றனர்.


இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து எகிப்தில் ஆட்சிக் கவிழ்ப்பை இலக்காகக் கொண்டு அங்கு செயற்கையான உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களால் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் ஒரு இராணுவ சதிப் புரட்சி எகிப்தில் அரங்கேற்றப்பட்டது. அதன் மூலம் தான் எகிப்தின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அப்துல் பத்தாஹ் அல் சிசி அங்கு ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டார்.


எகிப்திய மக்கள் மீண்டும் மிகப் பெரிய அளவில் வீதிகளில் இறங்கி பேராடினர். நூட்டின் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும், சட்ட ரீதியான ஆட்சி நிறுவப்பட வேண்டும், முர்ஷி மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கோஷங்களை எழுப்பினர்.


ஆனால் சிசியும் அவரது இராணுவமும் இந்த மக்களை மிகவும் கொடூரமான முறையில் கையாண்டனர். 2013 ஆகஸ்ட் 14ம் திகதி அதிகாலை வேளையில் கெய்ரோவின் றபா சதுக்கத்தை எகிப்திய இராணுவம் சுற்றி வளைத்தது. ஜனநாயத்தை வேண்டிநின்ற செயற்பாட்டாளாகள் மீது மிகக் கடுமையான வன்முறைத் தாக்குதல் கட்டவிழத்து விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றிலும் சமாதானமான வழிமுறைகளைப் பின்பற்றி சதுக்கத்தில் அமர்ந்திருந்தனர். அன்றைக்கு சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கு எதிரான பதாதைகளை அவர்கள் தாங்கி இருந்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அங்கிருந்து நகரப் போவதில்லை என அவர்கள் கோஷமிட்டனர். சதுக்கத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலுக்குள்ளும் மக்கள் திரண்டிருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே சிசியின் படைகளால் கொல்லப்பட்டனர்.


ஜனவரி 25 புரட்சி எகிப்து பற்றிய புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால்; மக்களால் தூக்கி எறியப்பட்ட முன்னாள் அரசை விட மிக மோசமான கொடுங்கோலும் அரச வன்முறைகளும் தலைதூக்க அது வழியமைத்தது. சிசியின் சதிப் புரட்சியின் வெற்றியோடு எகிப்திய மக்கள் அதற்கு முன்னர் கண்டிராத புத்துயிர் பெற்ற வலுவானதோர் இராணுவ பொறிமுறையைக் காண நேர்ந்தது. சட்ட விடுபாட்டு உரிமையுடன் தனது சொந்த மக்களுக்கு எதிராகவே அந்த இராணுவப் பொறிமுறையின் கொடூரங்கள் கட்டவிழத்து விடப்பட்டன.


நவீன உலக வரலாற்றில் காணொளிகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட மிகவும் மோசமான ஒரு படுகொலைச் சம்பவமாகவும் றபா படுகொலைகள் அமைந்தன. இநதப் படுகொலைகள் இயலுமானவரை மிக அருகில் இருந்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளதையும் காணொளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அது சம்பந்தமான ஒலி ஒளி ஊடகங்கள் வாயிலாகக் காண முடிகின்றது. இறந்தவர்களின் உடல்கள் பள்ளிவாசலுக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை இரத்தம் வழிய வழிய வெளியே இழுத்துச் செல்ல முயன்றவர்கள் வெளியே கூரைகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறிபார்த்து சுடுபவர்களால் இலக்கு வைக்கப்பட்டனர். அவர்கள் குறிபார்த்து சுடுவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் தங்களை மறைத்துக் கொள்ளக் கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஸ்மா அல் பெல்டகி. குறிபார்த்து சுடுபவர்களால் இலக்கு வைக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களில் அவரும் ஒருவர்.

 

இவர் துடிதுடித்து உயிர் தறந்த போது அவரது கண்களில் தெரிந்த அச்சம் துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டு உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான நிக்கி போல்ஸ்டரின் 'ஒரு படுகொலையின் நினைவுகள'; என்ற பதிப்பில் வெளியாகி இருந்தது


இன்னும் பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். மேலும் பலர் கட்டிடங்களுக்குள் சிக்குண்டு இருக்கையில் புல்டோஸர்கள் கொண்டு அந்தக் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளே நசுக்கப்பட்டனர். இந்தக் கொடூரங்கள் அணைத்தும் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி அதிகாலை வேளையில் எகிப்திய பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்டன.


இந்தப் படுகொலைகள் பற்றி எழுதி ஆவணப்படுத்திய இன்னொரு பத்தி எழுத்தாளர் ஷபீக் மன்தாஹி 'அஸ்மாவின் நண்பர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு வண்ணத்திப் பூச்சி 'குட்பை' என்று சொல்லிக் கொள்ளாமல் பறந்து சென்றது போல் அஸ்மாவின் உயிர் பிரிந்தது' என்று கூறினார் அஸ்மாவின் கடைசி நேர துடிதுடிப்புக்கு இது சாலச் சிறந்த உவமையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சம்பவத்தில் உயிர் நீத்த மற்றொரு யுவதி ஹபீபா. மார்பில் சுடப்பட்டு உயிர் நீத்திருந்தார்.


இது தவிர நிக்கி போலஸ்டர் தனது ஆங்கில மொழி மூலமான ஆவணப் படத்தில் படுகொலைக்கான பல சான்றுகளை முன்வைத்திருந்தார். நூண் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆவணப் படத்தை தயாரித்திருந்தது.


பிபிஸி, ஐடிஎன், நெட்பிலிக்ஸ், எப்பிள் டிவி உட்பட இன்னும் பல உலகப் பகழ் பெற்ற தொலைக்காட்சிகளில் இந்த ஆவணப் படத்தை அவர் பதிவு செய்தார். றபா படுகொலைகள் என்பது புரட்சிக்கு எதிரான செயற்பாடுகளின் இறுதி அத்தியாயம் என்று மிகவும் துணிச்சலாக அவர் அந்தக் கதையை முன்வைத்திருந்தார்.


ஆனால் உண்மையில் றபா சம்பவத்தோடு சிசியன் விடுபாட்டு உரிமைகளுடன் கூடிய படுகொலைகளின் உணர்வுகள் மங்கிப் போகவில்லை. ஒரு தசாப்தம் கழிந்துள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் எகிப்திய சிறைகளில் வாடுகின்றனர். எந்தவிதமான குற்றப்பத்திரங்களும் தாக்கல் செய்யப்படாமல், எவ்வித நியாயமான விசாரணைகளும் இன்றி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போல் முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமட் முர்ஷியும். உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்டிருந்த நிலையில் 2019 ஜுன் 17ல் சிறையில் அவர் உயிர் பிரிந்தது.


றபா திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் அல்ல. புரட்சிக்கு எதிரான அரசாங்க செயற்பாடுகளின் உச்ச கட்டமே அதுவாகும்


No comments

Powered by Blogger.