Header Ads



​தேசிய அடையாள அட்டைகளை வாங்கி வட்டிக்கு பணம் கொடுத்த நபர்



ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் இன்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளையே சந்தேகநபர் , தம்வசம் வைத்திருந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், வங்கி அட்டைகளை ஆகியவற்றை பிணையாக வைத்துக்கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என கூறப்படுகின்றது.


அத்துடன், பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெருவிரல் அடையாளம் வைக்கப்பட்டுள்ள வெற்றுக்கடதாசிகள் சில, அது மட்டுமன்றி, கையொப்பம் இடப்பட்டுள்ள கடதாசிகள் உள்ளிட்டஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


தேசிய அடையாள அட்டை காணாமல் போவது தொடர்பிலான ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு நாளாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளின் போதே, இந்த விடயம் அம்பலமானது.


ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய, சந்தேக நபரின் வீட்டை சோ​தனைக்கு உட்படுத்திய போதே அடையாள அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. JV

No comments

Powered by Blogger.