கனடா தூதுவரை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு வீரசேகர கோரிக்கை
மேலும் அதிகாரப்பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.07.2023) இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,“நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர், கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
குருந்தூர் மலை விவகாரத்தில் தலையிட்டு கனேடிய உயர்ஸ்தானிகர் சிங்களவர்களை அவமதித்துள்ளார். ஆகவே அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாட்டின் உள்ளக விவகாரங்களில் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தலையிடுகின்றன.
2000 வருட காலம் தொன்மையுடைய குருந்தூர் மலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலவந்தமான முறையில் திரிசூலத்தை வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறான பின்னணியில் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் அரசியல்வாதியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் அவர் தலையிட்டு சிங்கள மக்களை அவமதித்துள்ளார். ஆகவே கனேடிய உயர்ஸ்தானிகரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வடக்குக்குச் சென்று பிரிவினைவாதக் கொள்கையுடைய அரசியல்வாதிகளை சந்திக்கிறார். அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார்கள்.
அமெரிக்கா எவ்வாறு எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியும்? அமெரிக்க தூதுவர் சிறந்தவர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நாட்டின் உள்ளக விவகாரத்தில் தலையிடுமாறு சர்வதேச கொள்கை வலியுறுத்தவில்லை.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சங் 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக இவர் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
ஆகவே எமது நாட்டின் உள்ளக விவகாரத்தில் தலையிடுவதை இவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
Post a Comment