ஹம்தியின் மரண விசாரணை ஒத்திவைப்பு, மக்களை மூடர்களாக்க கீழ்த்தரமான முயற்சி
இன்று -28- காலை முதல் ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்யும் விடயத்தில் ஹம்தியின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து மும்முரமாக இயங்கிய போதும் ஜனாஸா தொடர்பான விசாரணைகள் முற்றுப்பெறாத காரணத்தால் நாளைய(29) தினத்திற்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
நாளைய தினம் (29) ஹம்தியின் ஜனாஸா தொடர்பான விசாரணையை சட்ட வைத்திய அதிகாரியால் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டு, அதனூடாக நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நகர்வு ஹம்திக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்ட ரீதியாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹம்திக்கு ஏற்பட்ட அநீதி பற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்ததன் பின்னரே, கடந்த ஆறு மாதங்களாக மௌனம் காத்து வந்த லேடி றிஜ்வே மருத்துவமனை நிர்வாகம் தடுமாற ஆரம்பித்திருக்கிறது. இன்று இலங்கையின் பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் ஹம்தியின் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹம்திக்கு சத்திர சிகிச்சை இடம்பெற்றது. மூன்றே வயதான ஹம்தியின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஹம்தியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
சத்திர சிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் 9 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை கடந்த வருடம், அதாவது 24.12.2022 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சையை பிரபல மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் நவீன் விஜயகோன் மேற்கொண்டுள்ளார். (இவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.)
இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் ஹம்திக்கு சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கேன் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு சிறுசீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின்னர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டிருந்த இடது பக்க சிறுநீரகத்துடன் வலது பக்க சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவன் ஹம்திக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றை பொருத்தி அவனை குணப்படுத்துவதாக அந்த மருத்துவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். இயந்திரத்தின் உதவியுடன் கடுமையான வலிகளுடனும், சொல்லொனா வேதனைகளுடனும் சிறுவன் கடந்த ஏழு மாதங்களை கடத்தியுள்ளான். மருத்துவர்களோடு நடந்த குறித்த உரையாடலை சிறுவனின் தந்தை தனது கைதொலைபேசியை பயன்படுத்தி வீடியோவாக பதிவு செய்ய முற்பட்ட போது, வீடியோ செய்ய வேண்டாம் எனவும் இந்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம் எனவும் அவரை மருத்துவர்கள் வினயமாக வேண்டியுள்ளனர்.
மருத்துவர்களின் வாக்குறுதியை நம்பிய ஹம்தியின் தந்தை குழந்தையை குணப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த மருத்துவர்களுக்கு எதிராக செயற்படும் நோக்கத்தை கைவிட்டு விட்டு மருத்துவர்களோடு ஒத்துழைக்க தயாராகியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் வழங்கியது வெறும் பொய் வாக்குறுதிகள் என்பது அவருக்கு தெரிய வந்தது. மருத்துவர்களின் போலி வாக்குறுதி வெளிச்சத்திற்கு வரும் போது குழந்தை ஹம்தி தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தான். மருத்துவர்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாது தவித்தனர்.
ஒரு வாரகாலமாக “கோமா” நிலையிலிருந்த ஹம்தியின் மரணத்தை விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கை விட்டு ஹம்தியின் மரணத்தை அடித்தட்டுக்கு போட மருத்துவமனை நிர்வாகம் தயாராகி இருந்தது. இதனை எற்கனவே அறிந்திருந்ததால் நாம் ஊடகங்கள் மூலம் ஹம்திக்கு நடந்த அநீதியை அவனின் தந்தையின் அனுமதியோடு வெளியே கொண்டு வர நானும் சகோதரர் நவ்சரும் Mohamed Nawzar முடிவெடுத்தோம்.
ஊடகங்கள் ஹம்திக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் ஆடிப்போன மருத்துவமனை பணிப்பாளர், வழமையான தனது அண்டப்புளுகை அவிழ்த்து விட ஆரம்பித்திருக்கிறார். இன்று ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஹம்தியின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக கதைவிட்டிருந்தார். இப்படி ஒரு கதையை கட்டமைத்து இந்த குற்றச்சாட்டில் இருந்து மருத்துவமனை நிர்வாகம் தப்பிக்க முயற்சி செய்வதை ஒரு ஊடகவியலாளரின் பேச்சிலிருந்து புரியக் கூடியதாக இருந்தது.
இரண்டு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது. மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் ஹம்தியின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஹம்தியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன்றன.
அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டும்.
சத்திர சிகிச்சையின் பின்னர் அதாவது 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் ஹம்தியின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை. அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்படாதது ஏன் என்பதையும் மருத்துவமனை நிர்வாகம் கூற வேண்டும்..
லேடி றிஜ்வே மருத்துவமனை நிர்வாகம் பொருத்தமில்லாத உண்மைக்கு புறம்பான கதையை கூறி நாட்டு மக்களை மூடர்களாக்கும் கீழ்த்தரமான முயற்சியை எடுத்திருப்பதையே அதன் கதை உணர்த்துகிறது.
ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்திற்கு என்ன நடந்தது? மருத்துவர்கள் தவறுதலாக அகற்றிய வலது பக்க சிறுநீரகத்தை குப்பையில் எறிந்தார்களா? அல்லது வேறு யாருக்காவது விற்று விட்டார்களா? இது தொடர்பாக அறிய வேண்டிய உரிமை இந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. பொதுமக்களின் பணத்தில் ஊதியம் பெறும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு இதற்கு தகுந்த பதிலளிக்கும் கடமை இருக்கிறது.
இந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைக்க மருத்துவமனை நிர்வாகம் செய்யும் அனைத்து திருகுதாளங்களையும் சட்டத்தின் முன்னே வைத்து தவிடு பொடியாக்க முயற்சி செய்வோம்..
இந்த குழந்தைக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியாக நிற்போம். உண்மை வெளிவரும் வரையிலும், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறும் வரையிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற துயரமான, மோசடியான நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும்.
அஸீஸ் நிஸாருத்தீன்
28.07.2023
Post a Comment