ஆண் பொலிஸார் பற்றி, வெளியான அதிர்ச்சித் தகவல்
- பா.நிரோஸ் -
இலங்கையில் கடந்த வருடம் மாத்திரம் ஏற்பட்டுள்ள பொலிஸாரின் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
கடந்த வருடம் மாத்திரம் பல்வேறு நோய்கள் காரணமாக இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 250 பொலிஸார் இலங்கையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
வாகன விபத்து மற்றும் ஏனைய காரணங்களால் 51 பொலிஸார் உயிரிழந்திருப்பதோடு, 10 பொலிஸார் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கிறார்கள் எனவும் இலங்கையின் பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரக நோய்கள், புற்றுநோய் மற்றும் பல்வேறு சுகயீனங்கள் காரணமாகவும் கடந்த வருடம் 109 பொலிஸார் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் உயிரிழந்த 250 பொலிஸாரில் அதிகமானவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த பொலிஸாரின் மொத்த எண்ணிக்கையில் இது 31 சதவீதமாகும்.
இதன்படி 78 பொலிஸார் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்த அனைத்து பொலிஸாரும் ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் மாரடைப்புக் காரணமாக அதிகமானவர்கள் கடந்த வருடம் உயிரிழந்திருக்கின்ற நிலையில், இது தொடர்பான உரியக் காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
அதிகளவிலான மனஅழுத்தங்கள், தூக்கமில்லாது தொடர்ந்து பணியாற்றுவது இப்படியான காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொலிஸாரின் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாததெனவும், தனித்துவமானது எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Oruvan
Post a Comment