முஸ்லிம்களின் பேரீத்தம்பழ அரசியல் - காத்தான்குடிக்கு பெருமையா..?
- கலாநிதி அமீரலி - அவுஸ்திரேலியா -
காத்தான்குடியின் இவ்வருடப் பேரீத்தம்பழ அறுவடை கிழக்கிலங்கையின் ஆளுனர் சகிதம் கோலாகலமாக நடைபெற்றுள்ளதை ஊடகங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன. காத்தான்குடியின் பெருமையை வருடா வருடம் பேரீத்த மரங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. வாழ்க இப்பழங்கள்! எனினும் இது தொடர்பாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றுடன் பேரீத்தம்பழங்கள் எவ்வாறு பிணைந்துள்ளன என்பது பற்றியும் பொதுவாகவே உலக முஸ்லிம்களுக்கும் பேரீத்தம் பழங்களுக்கும் இடையேயுள்ள காலத்தால் அழியாத உறவுபற்றியும் சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இக்கட்டுரை விரும்புகிறது.
காத்தான்குடிக்குப் பேரீந்து ஒரு நூதன மரம். பன்னெடுங்காலமாக அவ்வூர் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை சென்றாலன்றி பேரீத்த மரத்தை கண்டிருக்க வாய்ப்பில்லை. (இப்போது தொழில்வாய்ப்பைத் தேடி இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்குக்குப் படையெடுப்பதால் அந்த வாய்ப்பு பெருகியுள்ளது என்பது உண்மை). பல்லாண்டுகளாக காத்தான்குடியின் சந்தைப் பள்ளிவாசலுக்குள் ஒரு பேரீந்து மரம் வானளாவ வளர்ந்திருந்தது. அது என்றுமே காய்த்ததில்லை. பின்னர் 1960களில் அப்பள்ளிவாசல் இடிக்கப்பட்ட வேளையில் அந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் இன்று பேரீத்த மரங்கள் ஓர் இஸ்லாமியச் சின்னமாக காத்தான்குடியின் நெடுஞ்சாலை நடுவே நடப்பட்டு அவை குலைபோட்டுக் கனிந்து அரசியல்வாதிகளின் கவனத்தையும் வருடாவரும் ஈர்க்கின்றன. அந்த மரங்களின் நடுகைக்குக் காலாய் இருந்த காத்தான்குடியின் முன்னைநாள் நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் அவரது அரசாங்கத்தின் அமைச்சர்களை அழைத்து மிக ஆரவாரத்துடன் முதல் அறுவடையை மேற்கொண்டமையும் ஞாபகத்துக்கு வருகின்றது. அந்தச்சூழலில் இந்த மரங்களின் அரசியல் தாக்கங்களைப்பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை இக்கட்டுரை ஆசிரியர் ஒரு பத்திரிகையில் வெளியிட்டு அது ஒரு சர்ச்சையைத் தூண்டியதையும் மறக்கவில்லை.
காத்தன்குடியை பேரீத்த மரங்களால் மட்டுமல்ல ஏனைய வழிகளாலும் ஒரு குட்டி அரபுப் பிரதேசமாக மாற்றவேண்டும் என்பதே அந்த மரங்களை நாட்டுவதற்குக் காலாய் இருந்தவரின் அந்தரங்க எண்ணம் என்பதும் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் உச்சக் கட்டமாகத்தான் இப்போது அங்கே பல கோடி டொலர் வெளிநாட்டு நன்கொடை உதவியுடன் நீலக்கற்களால் ஒரு நகல் பைத்துல் முகத்திஸ் பள்ளிவாசலும் நிர்மாணிக்கப்பட்டு அது நாடெங்கிலுமுள்ள உள்நாட்டுச் சுற்றுப்பிரயாணிகளைக் கவர்ந்து கொண்டிருக்கின்றது. பலஸ்தீனத்தின் அசல் பைத்துல் முகத்திஸ் இஸ்ரவேலின் படைகளாலும் குண்டுகளாலும் தரைமட்டமாக்கப்படும் ஆபத்து நாளாந்தம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நகல் உருவாகியதை வரவேற்காமல் இருக்க முடியாது. அசல் ஒரு நாள் அழிக்கப்படுமானால் காத்தான்குடியின் நகல் வெளிநாட்டு முஸ்லிம் பக்தர்களை வசீகரித்து அரசின் திறைசேரிக்கு வளமூட்டலாம். எனினும் பேரீத்தமரங்களுக்கும் இந்தப் பள்ளிவாசலுக்கும் இடையே அரபு மொழியிலே முஸ்லிம் கடை நாமங்கள், வீதிகளின் பெயர்கள், மற்றும் பொதுக் கட்டிடங்களின் பெயர்கள் என்பனவெல்லாம் வெளிப்படத் தொடங்கி அது ஓர் இனவாத உணர்வை சிங்கள தமிழ் மக்களிடையே தூண்டியதையும் மறக்கலாகாது. அன்று நான் எழுதிய கட்டுரை இந்த இனவாதத்தை பேரீத்த மரங்கள் தோற்றுவிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதே விளைவைத்தான் அதே பிரதிநிதியால் புணானையில் நிறுவப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கட்டிடமும் வளர்த்தது.
அங்கேயும் இம்மரங்கள் நடப்பட்டன. இனவாத உணர்வு ஒருபுறமிருக்க, காத்தான்குடி இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தொட்டிலாக மாறப்போகிறது என்ற மிகவும் ஆபத்தான ஓர் உணர்வும் ஆளும் வர்க்கத்தினரிடையே வளர்வதற்கு இப்பேரீத்த மரங்கள் ஒரு மறைமுகமான எடுத்துக்காட்டாக விளங்கின என்று கூறுவதிலே தவறில்லை. அந்த உணர்வுக்கு உயிரூட்டுவதுபோல் அமைந்தது சஹ்ரானின் கொலைகாரக் கும்பல் காத்தான்குடியை மையமாகக் கொண்டு 2019 இல் ஆடிய கோரத் தாண்டவமும் அதன் விளைவாக இராணுவத்தின் எடுபிடிக்குள் காத்தான்குடி சிக்கியதும். அந்த எடுபிடி இன்னுந்தான் தளரவில்லை. இவ்வாறு விமர்சிப்பதை பலரால் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம். ஆனாலும் யதார்த்தத்தை மறைக்க முடியாது. முடிவாக, நட்ட மரங்களை வெட்டி எறியாமல் அவற்றைப்பற்றிப் பெருமைப் படுவதை நிறுத்தி அவற்றை ஒரு நூதன மரங்களெனக் கணித்துக்கொண்டு காத்தான்குடியின் இன்றைய பல பிரச்சினைகளை தூரநோக்குடன் அவ்வூர் தலைவர்கள் தீர்க்க முனைய வேண்டும்.
காத்தான்குடி இலங்கையின் ஏனைய முஸ்லிம் பட்டினங்களைப்போல் அல்லாது ஒரு மிகவும் நெருக்கடியான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. கிழக்கிலே கடலும் மேற்கிலே வாவியும் வடக்கிலும் தெற்கிலும் தமிழினமும் சூழ அவற்றிற்கு மத்தியிலே சுமார் நான்கு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் முஸ்லிம்களை கொண்டு அமைந்துள்ளது இந்நகர். வைசியமும் வைதீகமும் வரம்பின்றி இணைந்து வாழும் ஒரு சமூகமென காத்தான்குடியை வர்ணிக்கலாம். வணிகத்தையே வாழ்வாதாரமாகக்கொண்டு இம்மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்ததால் உலகியற் கல்வியிலே அதிகம் நாட்டம் செலுத்தவில்லை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க நாடெல்லாம் திரிந்து வணிகம் செய்து பொருளீட்டி அந்த வருமானத்திலேதான் காத்தான்குடி வளர்ந்தது. குறிப்பாக ஊவா மாகாணமும் மத்திய மாகாணமும் காத்தான்குடி வியாபாரிகளின் கேந்திர வணிகத்தலங்களாக ஒரு காலத்தில் விளங்கின. ஆனால் அங்கே தமது குடும்பங்களை அவர்கள் கொண்டு செல்லவில்லை. அவ்வாறு சென்று சொந்த நிலங்களை வாங்கி வீடுகளைக்கட்டிக் குடி.ேயறி இருந்தால் காத்தான்குடியின் இன்றைய குடிசன நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம். ஏன் அருகாமையிலுள்ள மட்டக்களப்பு நகரிலேயே கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இவ்வூர் வணிகர்கன் அந்த நகரிலேகூட தமது குடும்பங்களை நிரந்தரமாகக் குடியேற்றவில்லையே. இதை ஒரு முறை முன்னை நாள் தலைவர் ராசிக் பரீத் அவர்களே மிக வருத்தத்துடன் 1950களில் மட்டக்களப்புபுக்கு வந்தபோது சுட்டிக்காட்டியது என் மனதிலே பதிந்துள்ளது. அதனால் அண்மைக் காலங்களில் சிங்கள தமிழ் இனங்கள் விழிப்படைந்து வணிகத்தில் நாட்டம் செலுத்தியதாலும் அந்த வணிகப்போட்டி ஓர் இனவாத வடிவத்தைத் தோற்றுவித்ததாலும் முஸ்லிம் வர்த்தகர்கள் காத்தான்குடியே தஞ்சமென நினைத்து அந்தத் தலங்களை விட்டு நீங்கி காத்தான்குடியின் குட்டி நிலப்பரப்புக்குள்ளேயே தமது கடைகளையும் நிறுவலாயினர். அதன் விளைவாக காத்தான்குடியே ஒரு மாபெரும் கடைவீதியாக இன்று காட்சியளிக்கிறது. இந்த மாற்றங்கள் வியாபாரிகளின் வருமானத்துக்கு உரமூட்டினாலும் அந்த வியாபாரக் கவர்ச்சியுடன் நுழையும் பல சமூகத் தீங்குகள் பரவுவதையும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றை விபரிக்க இக்கட்டுரை இச்சந்தர்ப்பத்தில் விரும்பவில்லை.
பேரீத்த மரங்களும் அரபுமயமாக்கமும் காத்தான்குடி அரசியல்வாதிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகைசூட உதவியது போன்று ஆட்சியில் அமரும் ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களின் செல்வாக்கைப்பெற போரீத்தம்பழங்கள் உதவுவதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். ஜனநாயக ஆட்சியும் தேர்தல் முறையும் அறிமுகமான காலம் தொடக்கம் இலங்கை முஸ்லிம் சமூகம் மூன்று சலுகைகளையே முக்கியமாக அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்த்தது. ஒன்று, தடையற்ற வியாபாரச் சுதந்திரம், மற்றது நோன்புக்குப் பேரீத்தப்பழம், மூன்றாவது மக்கா யாத்திரைக்குத் தேவையான அன்னியச் செலாவணி.
நோன்பு காலம் நெருங்கிவிட்டால் வர்த்தக அமைச்சும் முஸ்லிம் அமைச்சர்களும் நோன்புக்குப் பேரீத்தம்பழங்கள் தாராளமாகக் கிடைக்க அரசு வழி செய்யும் என்பதை விளம்பரப்படுத்துவர். அதே போன்று ஹஜ் யாத்திரைக் காலத்தில் அன்னியச்செலாவணி தாராளமாகக் கிடைக்கும் என்பதையும் உறுதி செய்வர். முஸ்லிம்களும் ஏதோ தமது உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற தோரணத்தில் திருப்தி அடைவர். 1970களில் அன்னியச்செலாவணி நெருக்கடி ஏற்பட்டு அதனால் சிறிமாவோவின் இடதுசாரி அரசு ஹஜ் யாத்திரைக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தபோது எதிர்க்கட்சியினர் அதனை ஒரு துரும்பாகப்பாவித்து முஸ்லிம் தேர்தல் வாக்குகளை நாடிப் பிரச்சாரம் செய்தனர். அடுத்துவந்த தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து சிறிமாவோ அரசை மண்கௌவச் செய்தனர். இந்தப் பேரீத்தம்பழ அரசியல்; முஸ்லிம் கட்சிகள் என்ற பெயரில் இன்னும்தான் நிலவுவதை மறுக்க முடியாது.
ஏகத்துவத்தை நிலைநாட்டப் பிறந்த நபி மூஸா, நபி ஈஸா, நபி முகம்மத் ஆகியோர் போதித்த மார்க்கங்கள் யாவற்றிலும் நோன்பு நோற்றல் ஒரு கடமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய மார்க்கங்கள் சிலவற்றிலும்கூட அக்கடமை உண்டு. அவற்றின் முறைகளும் ஆசாரங்களும் வேறுபட்டிருந்தாலும் அது ஒரு கடமை என்பதை குர்ஆனே கூறுகிறது.
ஆனாலும் இஸ்லாத்தின் 30 நாட்கள் நோன்புக் கடமைக்கும் பேரீத்தம்பழங்களுக்குமுள்ள உறவுபோன்று மற்றைய எதிலும் இல்லை. இதனாலேதான் சவூதி அரேபிய அரசாங்கமும் வருடாவருடம் நோன்பு காலத்தில் பொதிபொதியாக பேரீத்தம்பழங்களை முஸ்லிம் நாடுகளுக்கு அன்பளிப்புச் செய்து தனது புகழையும் நற்பெயரையும் முஸ்லிம்களிடையே பாதுகாத்துக் கொள்கிறது. அதுவும் ஒரு சர்வதேச அரசியல் தந்திரமே. சவூதி அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளைப்பற்றி உலக முஸ்லிம்கள் பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் மூடிமறைக்கும் கருவிகளுள் ஒன்றாகவும் பேரீத்தம்பழ அன்பளிப்பைக் கருதலாம். அரேபியப் பாலைவனத்தில் அன்னியரால் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை பேரீத்தம்பழம் ஒன்றே அந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாய் இருந்தது. அந்தப்பழம் இன்று ராஜதந்திர உறவை வளர்க்கும் ஒரு பொருளாக மாறியதை என்னென்று கூறுவதோ? இவ்வாறு அரசியல் செல்வாக்குப்பெற்ற ஒரு பழமரத்தை காத்தான்குடியும் தனது நெடுஞ்சாலையின் அலங்கார விருட்சமாகக் கொண்டிருப்பதும் அதன் பழ அறுவடையைக் கொண்டாடுவதும் அம்மரத்துக்குப் பெருமையா காத்தான்குடிக்குப் பெருமையா?- Vidivelli
Post a Comment