ஹக்கீம் - றிசாத் மோதல், ஒருவர் மீது ஒருவர் கடும் குற்றச்சாட்டு
- சுஹைல் -
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவகாரம் நீண்ட காலமாக இழுபறி நிலையிலேயே இருக்கிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு மேலாக திருத்த விடயத்தில் நீடிக்கும் தொடர் முரண்பாடுகள் காரணமாக இவ் விவகாரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. சோனக அரசியல் போட்டிகளும் கருத்து முரண்பாடுகளும் விடய தெளிவின்மையும் நழுவல் போக்குகளுமே இந்த இழுத்தடிப்புகளுக்கு பிரதான காரணம் என்றே கூறியாக வேண்டும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திலுள்ள சில சரத்துகளை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை பெண்கள் தரப்பில் மட்டுமல்லாது புத்திஜீவிகள் மட்டத்திலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட 2009 ஆம் ஆண்டு தனியார் சட்ட திருத்திங்களை பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமித்தார். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு சுமார் 9 வருடங்களின் பின்னர் தனது அறிக்கையை இரு தரப்பாக பிளவுபட்டே அப்போதைய நீதியமைச்சரிடம் கையளித்தது.
கடந்த 14 வருடத்துக்குள், நீதியமைச்சர்களாக அதாவுத செனவிரத்ன, ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ, தலதா அத்துகோரல, நிமல்சிறிபால டீ சில்வா, அலி சப்ரி என பலரும் பதவி வகித்துள்ளனர். மீண்டும் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சை பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த இழுத்தடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உடனடியாக திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என தற்போதைய நீதியமைச்சர் ஆர்வம்காட்டுவதை காண முடிகிறது.
குடுமிச் சண்டை
சோனக அரசியல்வாதிகளின் அரசியல் குடுமிச் சண்டைகளும் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதில் பெரும் தடையாக இருக்கிறது எனலாம். குறிப்பாக அண்மையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை மையப்படுத்தி இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இவ்விவகாரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. மதியம் 1 மணிக்கு இது பற்றி கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் 2.30 மணிக்கு பின்னரே இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், “நான் உனக்கு டிக்கட் தந்திருக்காவிடின் நீ ஒரு மினிஸ்டராகவோ எம்.பி.யாகவோ இருந்திருக்க மாட்டாய்” என ரிஷாட் பதியுதீனை நோக்கி மிகக் கடுமையாக கூறியிருந்தார். இதற்கு ரிஷாடும் கடம் தொனியில் பதிலளித்திருந்தார். தொடர்ச்சியாக இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றில் இடம்பெற்ற தனியார் சட்ட விவகாரம் குறித்த கலந்துரையாடலின்போதும் இதுபோன்று இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றியதாக அறியக்கிடைக்கிறது. பாராளுமன்றில் ஏனைய அரசியல்வாதிகள் இதை பார்த்து ஏளனமாக பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருவருக்குமிடையிலான அரசியல் போட்டி முஸ்லிம் சமூக விவகாரங்களை பல்வேறு விதங்களிலும் பாதித்து வருகிறது. அது இப்போது தனியார் சட்ட விவகாரத்தில் வந்து நிற்கிறது.
ஹக்கீமின் ஆதங்கம்?
தனக்கும் உலமா சபைக்கு மிடையில் கருத்து முரண்பாடுகளை பூதாகரமாக்குவதன் பின்னணியில் ரிஷாட் பதியுதீன்தான் இருப்பதாக ஹக்கீம் சந்தேகிக்கிறார். இதுகுறித்து, இன்னுமொரு அரசியல்வாதியிடமும் பேசியிருக்கிறார் ஹக்கீம்.
வழக்கம் போன்றே இந்த விவகாரத்தை அடுத்து வரும் தேர்தல்களில் பேசுபொருளாக்கி ஆதாயம் தேட இவர்கள் முனைகிறார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அரசியல் விளையாட்டு
உலமா சபை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விடயங்களுக்கு தலைமை வகிக்கும் ஸ்தாபனம் என்ற வகையில் அதனுடன் முரண்படுவது தேர்தலில் தாக்கம் செலுத்தும் என முஸ்லிம் அரசியல்வாதிகள் கணிக்கின்றனர். இந்நிலையில், பிரதான முஸ்லிம் கட்சியின் தலைமைக்கும் அந்த அமைப்புக்குமான முரண்பாடு தேர்தல் அரசியலில் தாக்கத்தை செலுத்தும், அதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏனைய அரசியல் சக்திகள் கருதக்கூடும்.
ஹக்கீமும் உலமா சபையும்
பெண்கள் காதி விடயத்தில் ஹக்கீம் தனது நிலைப்பாட்டை நேரடியாக இதுவரை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், அவர் பெண் காதி நியமனத்தையும் ஏனைய சில முற்போக்கான திருத்தங்களையும் ஆதரிக்கிறார். இவற்றை அவர் பகிரங்கமாக முன்வைக்காவிடினும் அவ்வப்போது தனது உரைகளில் மாற்றங்களை வலியுறுத்தி வருகிறார்.
இதன் தொடரில்தான், ஹக்கீம் உலமா சபையுடன் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட காரணமாகியது.
பெண் காதி நியமனம் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்களுடனான சந்திப்பு ஒன்றில் உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்த கருத்தை ஊடக நேர்காணல் ஒன்றில் ஹக்கீம் வெளிப்படுத்தினார். எனினும் அது உலமா சபையின் நிலைப்பாடு அல்ல என்றும் அக்கருத்தை ஹக்கீம் வாபஸ் பெற வேண்டும் என்றும் உலமா சபை அறிக்கை விட்டது. எனினும் தனது கருத்தில் ஹக்கீம் உறுதியாக இருப்பதுடன் இது தொடர்பில் உலமா சபையுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவித்தார். இந்த இடத்தில்தான் உலமா சபையையும் தன்னையும் மோதவிடுவதன் பின்னணியில் ஒரு தீய சக்தி இருப்பதாக ஹக்கீம் குறிப்பிட்டார். அந்த சக்தி யார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
எனினும் ரவூப் ஹக்கீம் கடந்த 14 வருட காலப்பகுதிக்கு கிட்டத்தட்ட 50 மாதங்கள் (4 வருடங்களும் இரண்டு மாதங்களும்) நீதியமைச்சு பதவியை வகித்துள்ளார். எனினும், இக் காலப்பகுதியில் தனது அதிகாரத்தைப் பாவித்து அவர் இந்த திருத்தத்தை மேற்கொள்ள முனையவில்லை.
அதாவின் சாடல்
ஹக்கீம் நீதியமைச்சராக இருக்கும்போது தனியார் சட்ட விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்ல தீர்வை வழங்கியிருக்க முடியும், ஆனால் அதை செய்யவில்லை என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முஸ்லிம் எம்.பிக்களுக்கிடையேயான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா சாடியிருந்தார்.
இவ்வாறு ஹக்கீம் மீது விரல் நீட்டுவதற்கு அதாவுல்லாஹ் தகுதியானவரா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ்வால், அக்கரைப்பற்று நுரைச்சோலையிலுள்ள சுனாமி வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை. அவருடைய பிரதேசத்தில் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் இந்த வீட்டுத்திட்ட விவகாரத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத அதா, ஹக்கீமை சாடுவதில் எப்படி நியாயம் கற்பிக்கப்போகிறார்.
ஹக்கீம் இந்த விடயத்தில் நழுவல் பேக்கை கையாள்வதுபோல், அதா நுரைச்சோலை வீட்டுத்திட்ட விடயத்தில் என்ன செய்தார், ரிஷாட் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் எடுத்த காத்திரமான நடவடிக்கை என்ன என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
தெளிவின்மை
முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் ஹக்கீமும் அமைச்சர் அலி சப்ரியும் தமக்கென ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. ரிஷாத் பதியுதீனும் சில மாற்றங்களை செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக நின்று ஒரு முடிவை வெளியிட்டாலும் இந்த விடயதானம் தொடர்பில் தெளிவுடன் இருக்கிறார்களா? யாருடைய வழிகாட்டலில் அவர்கள் இந்த தனியார் சட்ட திருத்த அறிக்கையில் கையொப்பமிட்டனர் என்பதற்கு அவர்களிடம் தனித்தனியாக கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கும்.
சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தில் சட்டத்தை பற்றிய விளக்கமே இல்லாத பலரும் அங்கம் வகிப்பது சமூகத்திற்கு எவ்வளவு பாதகமானது என்பதை இந்த விடயத்தில் புரிந்து கொள்ளலாம்.- Vidivelli
Post a Comment