முஸ்லிம்களே தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தில் சிக்கி, குழந்தைகளின் உயிர்களை காவு கொடுத்து விடாதீர்கள்
Sri Lanka College of Pediatricians தலைவரோடு இப்போது தான் பேசினேன். LRH ல் இருந்த போது எனது பொஸ்ஸூம் அவர் தான். நல்ல மனிதர். பண்பானவர். அதிர்ஷ்டவசமாக, வக்சீன் போடாதவர்கள். வக்சீன் போடாததற்கு காரணம் தங்களுக்கு வக்சீன் மீது நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார்களாம். மற்றப்படி தங்களது மத நம்பிக்கை( religious beliefs) தான் வக்சீன்களை போடாமல் விட்டதற்கு காரணம் என்று அவர்கள் சொல்லவில்லை. இதனால் இதை எப்படி அஹமட் நாங்கள் கையாள்வது?. மீடியாக்களுக்கு தெரிந்தால் நாட்டில் பெரும் கலவரமாகி விடுமே என்று கவலை அவரிடம் இருக்கிறது.
என்னதான் இருந்தாலும், இதை இன்னும் பரவாமல் தடுப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.அரச இயந்திரம் முடிக்கி விடப்பட்டுள்ளது. ஆகவே நாமும் கொஞ்சம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். நமது பகுதியில் மஹல்லாக்களில் அறிவூட்டும் செய்றபாடுகளை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்.
உண்மையில் இவர்கள் வக்சீன் போடாமல் இருந்ததன் பின்னால் ஒரு சில மார்க்க போதகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. அன்ரி வக்சீன் க்ரூப்பாக இருக்கலாம் எனும் அளவுக்கு அவர்களிடம் விடயதானம், தெளிவு இல்லை. விளக்கம் இல்லை. அப்போது முஸ்லிம் சமூகத்தில் இடம்பெற்ற வக்சீன் எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து பல வருடங்களாக எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். பழைய பதிவுகள் சண்டைகள் விவாதங்கள் என்று முகநூல் வட்சப் குழுக்கள் முழுக்க நிறைந்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
இப்போது நாட்டில் மீண்டும் மீசெல்ஸ் பரவுவதற்கு "முஸ்லிம் சமூகம்" காரணமாக மாறி விடக்கூடாது என்பது இப்போது எங்களிடம் உள்ள ஒரே ஒரு பிரார்த்தனை.
அஹ்மத் ஓடியாடித் திரியும் ஐந்து வயது சுட்டிப்பையன். நல்ல புத்திசாலி அது போலவே மிகவும் குறும்புக்காரன். வழமையாக போய்வருகின்ற அவனது மொன்ரிஸரியிலே ஒருநாள் திடீரென மயங்கி விழுகிறான். அதனால் அவனை உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கின்றார்கள். அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் அவனுக்கு வலிப்பு( seizures) வரத்தொடங்குகிறது . அந்த வலிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டும் அதனை நிறுத்த முடியவில்லை. பல மணி நேர அயராத போராட்டத்தின் பின் நான்கு வகை வலிப்பு நிவாரணிகளை இரத்தம் வழியாக செலுத்தி அந்த வலிப்பு நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. எப்படி எல்லாம் முயற்சிகள் செய்தும், இரண்டு நாட்கள் கடந்தும் அந்த துடிதுடிப்பான பையன் எழுந்திருக்கவேயில்லை, பேசவுமில்லை, கதைக்கவுமில்லை . ஒரு ஜடமாக கட்டிலோடு ஆகிவிட்டான்.
இது என்னவாயிருக்கும் எதனால் வந்தது என்று வைத்தியர்கள் எல்லாம் மூளையை பிழிந்து விவாதித்து கொண்டிருக்கும் பொழுது அவனது MRI, EEG போன்ற பரிசோதனை முடிவுகளும் வந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் இவைகள் எல்லாமே எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட ஒரு ஒரு நோயின் அறிகுறிகளை சுட்டி நின்றன. அது தான் Subacute Sclerosing Panencephalitis (SSPE)
எனப்படும் ஒரு வகை மூளை அழர்ச்சி நோய். இதனால் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டு மெதுவாக அழிந்தும் வருகிறது. இனி இவன் எழுந்து நடப்பான், பேசுவான் என்பதெல்லாம் சந்தேகமே.
இது என்ன நோய்? எதனால் ஏற்பட்டது? என்ற காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும் உங்களுக்கு இந்த நோய் அச்சிறுவனுக்கு ஏற்பட காரணம் ஒன்பது மாதத்தில் போட வேண்டிய ஒரு தடுப்பூசி( வக்சீன்) போடாததுதான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.?
சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்ற மீசல்ஸ் Measles எனப்படும் தட்டம்மை நோயின் தாக்குதலிற்கு பின்னால் மிக நீண்ட காலத்திற்குப் பின் சுமார் நான்கு, ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெகு அரிதாக வருகிற பாரிய தீர்க்க முடியாத சிக்கலான விளைவு(complication) தான் இந்த SSPE. இது ஒரு கொடிய நோய் நிலை, அதி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் முற்றாக மூளை அழற்ச்சி ஏற்பட்டு அந்த குழந்தை நடக்க முடியாமல், எழும்ப முடியாமல் அப்படியே ஒரு ஜடமாக மாறிவிடுவதும் அதன் பின் தீர்க்க இயலாத நிலையில் உயிரிழந்து விடுவதும்தான் இதில் உள்ள ஆகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. இன்றைய தேதி வரை இந்த நோய்க்கு எந்த விதமான குணப்படுத்தும் மருந்துகளும் கிடையாது என்பதுதான் மற்றுமொரு கவலையான விஷயம். ஆனால் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு ஒரே ஒரு உபாயம் உண்டு அதுதான் மீசல்ஸ் வராமல் தடுப்பது என்ற நம்பிக்கை ஊட்டும் செய்தி . இந்த மீசல்ஸ் வரமால் தடுப்பதற்கான மிகச்சிறந்த ஒரே வழி மீசல்ஸ் அல்லது MMR எனும் வக்சீனை ,தடுப்பூசியை உரியகாலத்தில் போட்டுக்கொள்வது மாத்திரமே.
இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன் இலங்கை முழுவதும் இந்த நோய் பரவியது. அதற்கு காரணம் இலங்கையில் அந்த மீசல்ஸ் வக்சீன் ஏற்றுவதில் ஏற்பட்ட ஒரு சிறு தாமதமும் குளறுபடியும் அதனால் ஏற்பட்ட வக்சீன் தட்டுப்பாடுமாக அறியப்படுகிறது.
மீசல்ஸ் எனப்படும் இந்த நோய் இலங்கையிலே மிகவும் அரிதாகவே காணப்பட்ட ஒரு நோய். நான் மருத்துவ பீடத்தில் இருந்த காலத்திலோ அல்லது பயிற்சி வைத்தியராக ஆரம்பத்தில் இருந்த காலத்திலோ இந்த நோயை இலங்கையிலே கண்டது கிடையாது. அப்பொழுது மீசல்ஸ் என்ற இந்த நோயின் இலட்சணங்களை நாங்கள் புத்தகங்களில் படங்களாக, போட்டோக்களாக தான் பார்த்திருக்கிறோம். எங்களது மருத்துவ ஆசிரியர்கள், விஷேட நிபணர்கள் தாங்கள் வைத்தியர்களாக இருந்த ஆரம்ப காலங்களில் இந்த நோய்களை கண்டதாகவும் அதன்பின்னர் 1984ம் ஆண்டில் இந்த நோய்க்கான வக்சின் அறிமுகப்படுத்திய பின்னர் இது முற்றாக மறைந்து விட்டதாகவும் படிப்பித்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.
ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன், 2011ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையின் தடுப்பூசித் திட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தின் காரணமாக இந்த measles வக்சீனுக்கு நாட்டிலே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது அதனால் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிறந்த ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த மீசல்ஸ் நோய் பரவத்தொடங்கியது. அதுதான் எனது வயதையொத்த வைத்தியர்கள் எல்லாம் முதன்முதலில் மீசல்ஸ் நோயை கண்களால் கண்ட காலப்பகுதியாகவும் இருக்கிறது. அப்பொழுது வைத்தியசாலையின் சிறுவர் வார்டுகள் எல்லாம் மீசல்ஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பியிருந்தது. பிள்ளைகளில் மீசல்ஸ் தாக்கம் என்றால் என்ன.? அது எப்படி ஏற்படுகிறது ?அந்த நோய் தாக்கத்தினால் ஏற்படும் நோய் இலட்ச்சணங்கள் எப்படிப்பட்டது என்று மருத்துவ புத்தகங்களில் படித்தவைகளையும், கண்டவைகளையும் கண்கூடாக கண்டு இது உண்மை நிதர்சனம் என்பதை ஆகர்ஷிக்க கூடியதாக இருந்ததும் அந்த காலப்பகுதியில்தான். அந்தக் நேரத்தில் எங்களது மூத்த வைத்தியநிபணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள். அதுதான் இன்னும் நான்கைந்து வருடங்களில் இந்த நோயின் அடுத்த நிலையான இந்த SSPEஐ நாம் இலங்கையில் சில வேளைகளில் காணக்கூடியதாக இருக்கும் என்று. அந்த ஆருடம் இப்போது உண்மையாகி இருக்கிறது இந்த வருடத்தில் மாத்திரம் நாங்கள் இதுவரை மூன்று SSPE நோயாளிகளை கண்டிருக்கிறோம், அதில் இருவர் உயிரிழந்து விட்டனர், மற்றய மூன்றாவது பிள்ளை இன்றோ நாளையோ என உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டிலோடு முடங்கிக் கிடக்கிறது.
தடுப்பூசிகள் எனப்படும் வக்சீன்கள் உண்மையிலேயே இவ்வாறான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதை நான் முதன்முதலில் கண்கூடாக கண்டது இந்த மீசல்ஸ் வக்சீனூடாகத்தான். 2012 ,2013 இல் இலங்கை அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியை வரவழைத்து குழந்தைகளுக்கு கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மீஸல்ஸ் முற்றாகவே இல்லாமல் போனது. வக்சீன்கள் நோய்களைக் கட்டுப்படுத்தும், அதன் நன்மைகள் பற்பல என நிறையவே படித்திருந்தாலும், நிறைய விஞ்ஞான ரீதியான கட்டுரைகளை, புள்ளிவிவரங்களை வாசித்திருந்தாலும் இவைகள் எல்லாம் எவ்வளவு உண்மை என்பதை விளங்கி கொள்ள இந்த அனுபவம் ஒரு மிகச்சிறந்ததொரு முத்தாய்ப்பாக இருந்தது.
ஆனால், நாம் பல்லாண்டு முயற்சியில், பெரும் பொருட்செலவில்,மனித உழைப்பில் கட்டிக்காத்துவந்த இந்த நோய் தடுப்பு முறைமைகள் பாரிசாலன், ஹீலர்பாஸ்கர், பின்னூரி போன்ற வக்சீன் போத்தல்கள் கருப்பா வெள்ளையா என்று கூட தெரியாத, அடிப்படை விஞ்ஞானம் தெரியாத இவர்களினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதுதான் விந்தையாக இருக்கிறது. ஒரு ஆறு மாத காலத்தில் நாட்டில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாட்டின் தாக்கம் எவ்வளவு பெரிய விலையை செலுத்தி இருக்கிறது என்பதற்கு மேலே கூறிய சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. அதன் விளைவுகளை, அந்த சாதாரண நோயின் கொடிய விளைவுகளை இப்பொழுது நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.
அது போல, இப்போது மீண்டும் இந்த மீசெல்ஸ் பரவ தொடங்கியிருக்கிறது. அதுவும் வக்சீனை வேண்டும் என்றே போடமால் விட்டுவிட்டுவர்களிடம் இருந்து பரவத் தொடங்கி இருக்கிறது. இது வரை அடையாளம் காணப்பட்ட எல்லோரது பெயர்களும் அஹமட், முஹம்மத் என்று முஸ்லிம் பெயர்களாக இருக்கின்றன. அப்படியானால் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? சமூகமா? இல்லை வக்சீன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்களா? அதை பேசாமல் கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தவர்களா?
Dr Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல சிறப்பு மருத்துவர்
Post a Comment