Header Ads



அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அரிசிக்காக கடைகள் முற்றுகை, வரிசையில் காத்திருப்பு - ஏன் இந்த திடீர் அச்சம்


- பிபிசி செய்தியாளர் -


பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தது.


உணவுப் பாதுகாப்புத் தேவைகளின் கீழ் மத்திய அரசால் அனுமதிக்கப்படும் வகையிலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு தானியங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்காற்றும் இந்தியா, தற்போது பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.


மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார் டெக்சாஸில் வசித்து வரும் பாலநாகம்மா.


மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார் டெக்சாஸில் வசித்து வரும் பாலநாகம்மா.


“இந்திய அரசின் தடைக்கு முன்பு 10 கிலோ அரிசியின் விலை 20 டாலராக(ரூ.1639.81) இருந்தது. தற்போது 30 டாலராக(ரூ.2459.72) உயர்ந்துவிட்டது. அரிசியை வாங்குவதற்காக கடைகளின் வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.


தற்போது தங்களிடம் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி இருப்பதாக அவர் கூறுகிறார்.


“எங்களிடம் தற்போது 10 கிலோ அரிசி உள்ளது. இது ஒரு மாதத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்திய அரசின் தடை எத்தனை நாட்களுக்குத் தொடருமோ தெரியவில்லை.


இப்படிதான், கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தப்போதும் அதன் விலை அதிகரித்ததோடு, தட்டுப்பாடும் ஏற்பட்டது,” என்றார்.


வாஷிங்டனின் ரெட்மௌண்ட் பகுதியில் வசிக்கும் தினேஷ் நம்மிடம் பேசியபோது, “இரண்டு நாட்களுக்கு முன்பாக 10 கிலோ அரிசியை 24 டாலருக்கு வாங்கினேன். தற்போது 5 கிலோ அரிசி 20 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதையும் எளிதாக வாங்க முடிவதில்லை 30 முதல் 60 நிமிடங்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது,” என்றார்.


இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25 சதவீதம் ஆகும்


ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஜேக்சன்வில்லில் வசிக்கும் சுசிதாவும் இதே கவலையை வெளிப்படுத்தினார்.


அங்கு அரிசியின் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் அரிசியை மொத்தமாக வாங்கிச் செல்வதாகவும் அவர் கூறுகிறார்.


மேலும், தற்போது கடைகள் இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளன, ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது என்கிறார் சுசிதா.


அதோடு, "நார்த் கரோலினாவில் உள்ள எனது நண்பரிடம் பேசியபோது, அங்கு இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இட்லி அரிசியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பொன்னி அரிசி, சோணாமசூரி போன்ற ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன


அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இட்லி அரிசியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பொன்னி அரிசி, சோணாமசூரி போன்ற ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த மூன்று வகை அரிசிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாஸ்மதி அரிசியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் நம்மிடம் கூறினார்.


இந்தியாவில் அரிசி விலையேற்றத்தைத் தவிர்க்க கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. எனினும் 2021 செப்டம்பர் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது 2022 செப்டம்பர் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்தில் அரிசி ஏற்றுமதி 33.66 LMTஇல் இருந்து 42.12 LMT ஆக அதிகரித்தது.


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 15.54 LMT அரிசி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 4LMT அதிகம். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25% என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது.


இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவை அரிசியை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன.


2022 ஆம் ஆண்டில், உலக அரிசி ஏற்றுமதி 5.54 கோடி டன்களாக இருந்தது. அதில் 2.22 கோடி டன்கள் இந்தியாவில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் பாசுமதி அல்லாத அரிசி 1.8 கோடி டன்கள். இந்த 1.8 கோடி டன்னில் 1.03 கோடி டன் வெள்ளை அரிசி.


ஆஸ்திரேலியாவில் கடைகளில் அரிசியே இல்லையென்றும் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் கூறுகிறார் துளசி எக்ஸிம் இண்டர்நேசனல் நிறுவனத்தைச் சேர்ந்த தாமரை கண்ணன்.


சிட்னியில் வசிக்கும் இவர், அரிசி போன்ற இந்திய பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறார்.


“அரிசி ஏற்றுமதிக்குத் தடை என இந்திய அரசின் அறிவிப்பு வெளியானதுமே இங்கு மக்கள் அதிகளவில் அரிசியை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினர். நாங்கள் அரிசி சப்ளை செய்யும் கடைகளுக்கு விலையை அதிகரிக்காமலேயே வழங்கினோம். அவர்களும் அதிக விலைக்கு விற்காமல் சராசரி விலைக்கே விற்பனை செய்துள்ளனர்.


எனவே, ஆஸ்திரேலியாவில் அரிசி அதிக விலைக்கு விற்கப்படவில்லை. ஆனால், தற்போது எந்தக் கடையிலும் அரிசி கையிருப்பு இல்லை. அனைத்துமே விற்றுத் தீர்ந்துவிட்டன. நேற்று எங்களின் குடோனில் 90 டன் அரிசி இருந்தது தற்போது அனைத்துமே விற்பனை ஆகிவிட்டது,” என்றார்.


ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறும் தாமரை கண்ணன், தான் இறக்குமதி செய்யும் அரிசி அனைத்தும் விற்றுவிடுவதாகவும் கூறுகிறார்.


எனினும், இனிவரக்கூடிய காலங்களில் ஆஸ்திரேலியாவில் அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.


“இந்திய அரசின் தடை எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை. இங்கும் அரிசி மொத்தமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. எனக்கு 3 கண்டெய்னர்களில் அரிசி வந்து கொண்டிருக்கிறது. தேவை அதிகமாக இருப்பதால் அரிசியின் விலை ஒன்றரை முதல் 2 மடங்கு வரை அதிகரிக்கக்கூடும்," என்றார்.


ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறும் தாமரை கண்ணன், “முதலில் நான் ஒரு கண்டெய்னர் அரிசியை இறக்குமதி செய்து வந்தேன். பின்னர் அது இரண்டு கண்டெய்னராக உயர்ந்தது. தற்போது மூன்று கண்டெய்னர் அரிசியை இறக்குமதி செய்கிறேன்.


அவை அனைத்தும் விற்று விடுகின்றன. அப்படி இருக்கும்போது, இந்திய அரசின் தடை உத்தரவு இங்குள்ள இந்தியர்களை வெகுவாகப் பாதிக்கும். அவர்கள் பாஸ்மதி அரிசிக்கு மாறிவிடுவார்கள் என்று இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், நிச்சயம் அவர்களால் மாற முடியாது,” என்று தெரிவித்தார்.

1 comment:

  1. பொதுமக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் டட்லி சிரிசேன உற்பட இலங்கையின் அரிசி மாபியாக்களுக்கு இனி கொண்டாட்டம். சர்வதேச சந்தையில் அரசியின் விலை உயந்துவிட்டது என இனி 260 அரிசியை 350 ரூபாவாக உயர்த்தலாம். எத்தனை பேர் பட்டனியால் செத்துப் போனாலும் இந்த மாபியாக்களுக்குப் பிரச்சினையே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.