மன்னம்பிட்டிய விபத்து, யார் பொறுப்பு..?
- Ashroff Shihabdeen -
மன்னம்பிட்டி விபத்து மிகவும் துரதிர்ஷ்டமானது.
வருடா வருடம் பெய்யும் பெருமழையின் போது தெருவுக்கு மேலாலும் வெள்ளம் பாயும் இடம் அது. வெள்ளம் வடிய குறைந்தது 03 தினங்கள் எடுக்கும். இவ்வளவுக்கும் மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை அது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் கொழும்பு வரையுள்ள பெரு நகரங்களைத் தொடர்பு படுத்தும் பெருந்தெரு.
மன்னம் பிட்டிப் பகுதியில் மிகக் குறுகிய பாலங்கள் ஏழுக்கு மேல் இருக்கலாம். இப்பெருந்தெருவை ஒரு வாகனம் மட்டுமே கடக்கக் கூடிவையாகத்தான் இன்னும் இருந்து வருகின்றன. நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டும் கூட இந்தக் குறும்பாலங்களை உரிய திணைக்களம் அப்படியே அம்போ என்று விட்டு விட்டது. ஏற்கெனவே இருந்த ஒரு நபர் சாய்ந்தாலே உடைந்து விடும் இருமருங்குக் கம்பிகளுக்குப் பதிலாக அதேயளவான கம்பிகளை நிறுவி பெயின்ற் அடித்து விட்டிருந்தார்கள். அவ்விடங்கள் அவதானமானவை என்பதைக் குறிக்க.
எவ்வளவு எச்சரித்தும் பெருவாகனச் சாரதிகள் அவற்றைக் கணக்கெடுப்பதில்லை. தலை தெறிக்க வாகனம் செலுத்தும் சாரதிகள் நாளையும் இந்தப் பாலங்களைக் கடக்கத்தான் போகிறார்கள்.
அம்பாறை, மட்டக்களபு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் ஏனைய நிர்வாக அதிகாரிகளும் இந்தப் பாலங்களைத் தமது அரச, தனியார் வாகனங்கள் மூலம் இதுவரை காலமும் கடந்து சென்றிருக்கிறார்கள். இப்பாதையின் குறும்பாலங்கள் குறித்த அவதானத்தை தமது அமைச்சு, திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துஅதற்கான ஒரு சிறு முயற்சியைத்தானும் செய்தார்களா என்று அவர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
கொழும்பில் தமது அமைச்சு, திணைக்களக் காரியங்களுக்காச் சென்று திரும்பி வவுச்சர் போடுமளவு கவனத்தில் ஒரு பங்கை இந்த விடயத்திலும் செலுத்தியிருந்தால் இந்தத் துயர சம்பவம் நடைபெறாது போயிருக்க இடமுண்டு!
Post a Comment