Header Ads



16 ஆம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை


தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. 


இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருந்தது. 


எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. 


கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இதற்கமைய, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி முதல்  சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் மீள ஆரம்பித்தது. 


திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்கள் மாத்திரம் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. 


இந்த விமான சேவைக்கு இந்தியாவில் பெருமளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை தினசரி முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 


இதற்கமைய, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை தினசரி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. 


அதன்படி, குறித்த விமான சேவை தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும். 


பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 க்கு சென்னை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.