Header Ads



சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்டசிக்கும் அழைப்பு விடுத்தார். 


தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென தெரியவந்துள்ளதால் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 


அவசியம் எனில் பாராளுமன்ற சபாநாயகரிடத்தில் கலந்துரையாடி எதிர்கட்சியினருக்கு மேலதிக பொறுப்புக்களைப் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  


விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்க்கைக்கு 32 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு  ஹம்பாந்தோட்டை  மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று (03)  ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அமரவிரு அபிமன் 32" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது "அமரவிரு அபிமன் 32"  நினைவுச் சின்னமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.  


மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கான அன்பளிப்புக்களும், புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தப் பரீட்சைகளில் சிறப்புச் சித்திப் பெற்ற மாணவர்களுக்கும்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறந்த விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்குமான அன்பளிப்புக்களும் இந்நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டன. 


ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹம்பாந்தோட்டை மக்கள் சார்பாக நினைவுச் சின்னமொன்றை அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு வழங்கிவைத்த அதேநேரம் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதியினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது. 


No comments

Powered by Blogger.