எனது வீட்டை எரிக்க வந்த 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் - பிரசன்ன
மக்கள் விடுதலை முன்னணி ஒரு கொலை கலாசாரத்தைக் கொண்ட கட்சி எனத் தெரிவித்த அமைச்சர், மொட்டு ஒருபோதும் கொலைகாரக் கட்சி அல்ல என்றும், நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி என்றும் குறிப்பிட்டார்.
நேற்று (22) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அத்தனகல்ல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். வெயங்கொடை அநுர பண்டாரநாயக்க அரங்கில் இந்தக் தொகுதிக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தால் சில பின்னடைவுகளைச் சந்தித்தோம். போராட்டத்துடன் சேர்த்து 69 இலட்சம் எடுத்த எமது ஜனாதிபதி பதவி விலகினார். மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கொண்டிருந்த நமது பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலகியது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் பலமாக இருக்கிறோம்.
அத்தனகல்ல இலங்கை சுதந்திரக் கட்சியை சார்ந்த தொகுதியாகும். ஐந்து பெரும் சக்திகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கிய மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட போது, எமது முன்னாள் கட்சி உறுப்பினர்களின் சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம். கிராம அளவில் கட்சி உறுப்பினர்களை ஒன்று திரட்டி கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தோம்.
மகிந்த அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் வருவார் என நாம் நினைக்கவில்லை. அவருக்காக நாடு முழுவதும் சென்றோம். மகிந்த காற்றை உருவாக்கினோம். அதற்கான ஆற்றலை கம்பஹா எமக்கு வழங்கியது. 2018 தேர்தல் நடந்தபோது அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நில்லுங்கள் என்றார்கள். தனியாகக் கேட்போம் என்று நான் பகிரங்கமாகச் சொன்னேன். அப்புறம் எல்லாரும் முடிவு பண்ணி தனியாகக் கேட்டோம். நாங்கள் வெற்றி பெற்றோம். ஜனாதிபதித் தேர்தலின் போது கம்பஹாவில் 3.5 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். பொதுத் தேர்தலின் போது 13 ஆசனங்களைப் பெறுவோம் என்று கூறினேன். நாங்கள் 13 ஆசனங்களில் வெற்றி பெற்றோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். மகிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டை போரிலிருந்து காப்பாற்றி நாட்டிற்கு பலத்தை கொடுத்தது போல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் நாட்டையும் எமது மக்களையும் கொவிட் தொற்றிலிருந்து காப்பாற்றினார். உலகப் பொருளாதாரம், இயற்கைச் சீற்றங்கள், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் நமது நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
ஜே.வி.பி ஒரு கொலைகார கலாச்சாரம் கொண்ட கட்சி. மக்களைக் கொலை செய்த கட்சி. போராட்டத்தின் போது கம்பஹாவிலேயே பெரும்பாலான வீடுகள் எரிந்து சேதம் ஏற்பட்டது. அதிலும் அதிக சேதம் மினுவாங்கொடையிலேயே ஏற்பட்டது. எங்களின் 13 வீடுகள் எரிக்கப்பட்டன. மொட்டின் சக்தியை உடைக்க எங்களை அடித்தார்மள். நாங்கள் கடினமான காலங்களை கடந்து வந்துள்ளோம். இவை எமக்கு சவால்கள் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து வீழ்த்துவது எங்களுக்குப் பெரிய விடயம் அல்ல. ஆனால் நாங்கள் அவர்களை அடிக்கப் போகவில்லை. எனது வீட்டை எரிக்க வந்தவர்களில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இயற்கை அவர்களை தண்டிக்கும். நாங்கள் மக்களைக் கொல்லும் கட்சி அல்ல. நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி.
இனிவரும் காலங்களில் கிராமம் தோறும் சென்று எமது கட்சியையும் எமது கட்சி உறுப்பினர்களையும் மேலும் மேலும் பலப்படுத்துவோம். இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை சீண்டுபவர்கள் வட்டியுடன் சேர்த்து முதலையும் வழங்க வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். இதை ஒரு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ளலாம். எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். இன்று ஜேவிபி அலை இல்லை. யார் விரும்பினாலும் ஆட நாங்கள் தயாராக இல்லை.
அடுத்த ஆண்டு நாங்கள் தேர்தலை சந்திப்போம். செப்டம்பர் மாதத்திற்குள் நமது பொருளாதாரம் வலுவடையும். நாடு பலமாகும்போது நாங்கள் தேர்தல் ஒன்றைத் தருவோம். நமது தலைவர்கள் நாட்டை போரிலிருந்து காப்பாற்றினார்கள். கோவிட் நோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார்கள். நாங்கள் அப்படிப்பட்ட கட்சி. மேலும் நான் கூறுகின்றேன், அடுத்த தேர்தலில் மொட்டுடன் இணைந்து போட்டியிடும் ஒருவரே ஜனாதிபதியாவார். அதே போல் நாங்கள் அடுத்த அரசாங்கத்தையும் அமைப்போம். உங்கள் ஆதரவுடன் நாங்கள் அதை நிச்சயமாக செய்வோம்" என்று அவர் கூறினார்.
Post a Comment