49 வகை வாழைகளை வளர்த்து, ஆச்சரியப்படுத்தும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
- பிபிசி -
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் 49 வகையான வாழை ரகங்களை சேகரித்து வளர்த்து வருகிறார்.
கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ் பாரம்பரிய வாழை ரகங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு வாழை ரகங்களை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வருகிறார்.
பல ரக வாழை கன்று சேகரிப்பு குறித்து பிபிசியிடம் பேசிய ஜோ பிரகாஷ், “2015ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை எனக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. எங்கள் நிலத்தை கூட குத்தகைக்கு தான் விட்டிருந்தேன்.
2016 காலகட்டத்தில் எனக்கு பேத்தி பிறந்தாள். அவளுக்கு ரசாயண கலப்பு இல்லாத வாழை பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும் என தீர்மானித்து, அதற்காக வாழை கன்றுகளை சேகரிக்க துவங்கினேன்.
49 வகையான வாழைகள் தனது தோட்டத்தில் வளர்வதாக ஜோ பிரகாஷ் கூறுகிறார்
பின்னர் வாழை கன்று சேகரிப்பில் ஆர்வம் ஏற்பட்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்து பல வகையான வாழை கன்றுகளை சேகரித்தேன். இதன் காரணமாக இப்போது 49 வகையான வாழை மரங்கள் எனது தோட்டத்தில் வளர்கின்றன.” என்றார்.
முள்ளங்கினாவிளையில் உள்ள இவரது குடும்ப வீட்டு வளாகத்திலும், தற்போது இவர் வசிக்கும் சேனம் விளை பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்திலும் என இரண்டு இடங்களில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு இடத்தில் ஜோ பிரகாஷின் வாழை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அவர் ஒவ்வொரு ரகத்திலும் ஒன்று அல்லது இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்.
“2016ல் முதன் முதலாக ஒரு சிங்கன் ரக வாழை மரத்தை நட்டு வளர்த்தேன். அந்த வாழையின் தாய் மூடு இன்றும் எந்த கேடும் ஏற்படாமல் உள்ளது,” என கூறும் ஜோ பிரகாஷ் அவரது அனுபவத்தில் சிங்கன் வாழையில் நோய் தாக்குதல் ஏற்படுவது குறைவு என்கிறார்.
முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் ஜோ பிரகாஷ் தனது வாழை மரங்களுக்கு மாட்டு சானம், மண்புழு உரம், வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனீசியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வாழை ரகங்களும் இவரது தோட்டத்தில் வளர்கின்றன
கர்நாடக மாநிலம் நஞ்சன்குட் பகுதியை சேர்ந்த ரசபேல், கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த அமிர்தபாணி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வாழை ரகங்களும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் சிறுமலை, சேலம் கற்பூரவள்ளி, கொல்லி மலை நெமரை உள்ளிட்ட வாழை ரகங்களும் தனது தோட்டத்தில் உள்ளன என்று ஜோ பிரகாஷ் நம்மிடம் தெரிவித்தார்.
“2019ம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற போது அங்கிருந்து ஒரு வகை வாழை கன்றை கொண்டு வந்தேன். குட்டை ரக வாழையான அது சுமார் 2 அடி வரை தான் வளரும். அதன் சுவை நமது ரொபஸ்டா வாழை பழம் போன்று இருந்தது.
தொடர்ந்து நண்பர் ஒருவர் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு வகை வாழை மரம் கிடைத்தது. அதில் கிடைத்த வாழை பழம் தித்திப்பு சுவையுடன் இருந்தது.
அதே போல் இந்தோனீசியாவில் இருந்து ஒரு வகை அலங்கார ரக வாழை கிடைத்தது. அதன் குலை 5 அடி உயரம் வளர்ந்தது. பழம் சிறியதாக இருந்தாலும் அதிக சுவையுடையதாக இருந்தது.
இதே போல் ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்தும் வாழை ரகங்கள் எனது நண்பர்கள் மூலம் கிடைத்தது. அதில் ஆப்ரிக்காவில் இருந்து கிடைத்த இரண்டு ரகங்களில் ஒன்று மட்டும் எனது தோட்டத்தில் வளரவில்லை” என்றார்.
நேந்திரன் வாழை ரகத்தில் ‘ஒற்றை கொம்பன்’ என்றொரு ரகம் உள்ளதாகவும் இதன் ஒரு பழம் ஒரு கிலோவுக்கும் மேல் எடை இருக்கும் என்றும் ஜோ பிரகாஷ் கூறுகிறார்
தொடர்ந்து பேசிய அவர், நேந்திரன் வாழை ரகத்தில் ‘ஒற்றை கொம்பன்’ என்றொரு ரகம் உள்ளதாகவும் இதன் ஒரு பழம் ஒரு கிலோவுக்கும் மேல் எடை இருக்கும் என்றும் தெரிவித்தார்.
“இந்த ஒற்றை கொம்பன் வாழை ரகத்தை பொருத்தவரை ஒரு சீப்பு தான் ஒரு தாரில் வரும். அதிகப்பட்சமாக இரண்டு சீப்பு வாழைபழங்கள் தான் வரும்.
எங்கள் தோட்டத்தில் உள்ள ‘ஒற்றை கொம்பன்’ வாழையில் குலைத்த தாரில், ஒரு சீப்பு தான் இருந்தது. அந்த சீப்பில் 10 வாழைகாய்கள், மொத்தம் 13 கிலோ எடை இருந்தது. ஒரு வாழை காய் உத்தேசமாக ஒரு கிலோ 300 கிராம் எடை இருந்தது. இதிலுள்ள ஒரு வாழை பழத்தை ஒரு நபரால் உண்ண முடியாது. இதன் சுவை நேந்திரன் வாழை பழத்தின் சுவையில் இருந்தது,” என்கிறார் ஜோ பிரகாஷ்.
இதே போல் ‘யானை கொம்பன்’ என மலை பகுதிகளில் பயிரிடப்படும் ஒரு வகை வாழை மரம் உள்ளது. இதில் ஒரே ஒரு வாழைக்காய் தான் காய்க்கும் என்று கூறப்படுகிறது. பண்டைய காலங்களில் மன்னர்களை காண செல்லும் போது இந்த வாழை பழத்தை கொண்டு செல்வது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
“தற்போது யானை கொம்பன் வாழை கன்று கேரள மாநிலம் பாராசாலை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் தான் உள்ளது. அவரிடமிருந்து கன்றை வாங்கும் முயற்சியில் உள்ளேன்” என்கிறார் ஜோ பிரகாஷ்.
பொதுவாக வாழை மரத்தின் பூ நிலத்தை பார்த்து வளர்வது வழக்கம். ஆனால் மூங்கில் வாழை என்ற ஒரு ரக வாழையின் பூ வானத்தை பார்த்து தான் வளரும். அலங்கார வகை வாழையான இதுவும் தனது தோட்டத்தில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ஜோ பிரகாஷ்.
மேலும் தென் மாவட்டங்களில் மட்டுமே பரவலாக பயிரடப்படும் ‘மட்டி’ ரக வாழையில் மலை மட்டி, செம்மட்டி, தேன் மட்டி, பேயன், வரி பேயன், புள்ளி பேயன், சக்க பேயன், மொந்தன் வாழை, கூம்பில்லா வாழை, சின்ன லகாடான், பச்ச நாடன், கரு வாழை, கதளி, ரச கதளி, பூஜா கதளி, தேவன் கதளி, அணில் கதளி, துளுவன், அரித் துளுவன், செந்துளுவன், கருந்துளுவன், உள்பட 49 ரக வாழை மரங்கள் ஜோ பிரகாசின் தோட்டத்தில் உள்ளன.
தேவைபடும் விவசாயிகளுக்கும் வாழை மர வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தன்னிடம் உள்ள வாழை ரகங்களின் கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார் ஜோ பிரகாஷ்.
அதோ போல் தனது தோட்டத்தில் இருந்து கிடைக்கும் வாழை குலைகளை விற்பதில்லை என்றும் வாழை பழங்களை தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவசமாக வழங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment