Header Ads



17,089 மில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது..? அரசாங்கம் மீது குற்றச்சாட்டு


வறிய மக்களுக்கு வழங்கப்பட்ட  அனைத்து நலன்புரி திட்டங்களும்  இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக 17,089  மில்லியன் ரூபாவை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று -28- குறிப்பிட்டது. 


சமுர்த்திக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.


பயனாளிகளை தெரிவு செய்யும் முறையில் எழுந்த பிரச்சினையினால்,  மீண்டும் மேன்முறையீடுகள் கோரப்பட்டு, தரவுகள் மீளாய்வு  செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு  கொடுப்பனவிற்கான கடிதங்கள் வழங்கப்படுகின்றன.


பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தில், பயனாளிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 4 அரச வங்கிகளில் ஒன்றில் சமர்ப்பித்து கணக்கை ஆரம்பிக்க முடியும்.


இந்த செயற்றிட்டம் காரணமாக இந்நாட்களில் பிரதேச செயலகங்களிலும் அரச வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைகள் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு பணம் மற்றும் அதற்கான  வட்டிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 


ஜூலை மாதம் முதல் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தாலும், அது வழங்கப்படவில்லை. அவ்வாறு  20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த  17,089  மில்லியன் நிவாரணத் தொகைக்கும் அதன் வட்டிக்கும் என்ன நடந்தது என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் சாமர மத்துமகளுகே கேள்வி எழுப்பினார். 

No comments

Powered by Blogger.