மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் 1000 வது குத்பாவும் அன்னதானமும்
- நூருல் ஹுதா உமர் -
காரைதீவு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காட்டின் முதலாவது பள்ளிவாசலும், தலைமை ஜும்மா பள்ளிவாசலுமான அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் "1000 வது ஜும்மா குத்பாவும், பகல் உணவு வழங்கும் நிகழ்வும்" இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இன்றைய 1000 ஆவது குத்பா பேருரையும் ஜும்ஆ தொழுகையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்-ஷெய்க் மௌலவி எம்.ஏ.எம்.அன்பாஸ் முப்தி நிகழ்த்தினார். இந்த குத்பா உரையின் போது கல்வி, சொத்துப்பிரிப்பு, போதைப் பொருள் பாவனையின் விளைவுகள், பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாளிகைக்காட்டின் எல்லைப்புறத்தில் அமையப்பெற்றுள்ள இப்பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகை ஒன்றை தமது கிராமத்தவர்களுக்கென தனித்துவமாக நடைமுறைப்படுத்த முடியாமல், சாய்ந்தமருது பிரதேசத்தில் நீண்டகாலமாக நம்பியிருந்த நிலையில் மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேச உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்களின் அளப்பரிய தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் ஜூம்ஆத் தொழுகையை ஆரம்பித்து இன்று அதன் 1000ஆவது ஜும்மா நிகழ்வை நடத்துகிறது என்பது ஓர் வரலாற்று சாதனை எனலாம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி முதல் ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இப்பள்ளிவாசலின் முதலாவது குத்பா பேருரையும் ஜும்ஆ தொழுகையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் அதியுயர்பீட உறுப்பினரும், அகில இலங்கை பிறைக்குழுச் செயலாளரும் கொழும்பு ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளருமான காலஞ்சென்ற மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸினால் (மிஸ்பாஹி) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிராந்தியத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment