Header Ads



சமூகப்பணிகளுக்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்த மர்ஹும் ULM பாரூக்


ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நாடறிந்த அரசியல்வாதியுமான யூ.எல்.எம் பாரூக் அவர்கள் 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி யூனுஸ் லெப்பை பளீலா உம்மா தம்பதியினருக்கு  மகனாக கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லைத் தேர்தல் தொகுதிக்கு உட்படும் கன்னத்தோட்டை எனும் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்ததொரு குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கன்னத்தோட்டை சுலைமானியா கல்லூரியில் கற்ற அவர் உயர் கல்வியை சிங்கள மொழி மூல பாடசாலையான முஹுதுகமுவ  மகாவித்தியாலயத்தில் கற்றார்.


1956 ஆம் ஆண்டு ருவான்வெல்லை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆதரவாளராக அரசியலில் பிரவேசித்தார். பின்னர் மிக நீண்டகாலமாக அமைச்சரும் சபரகமுவ மாகாண ஆளுநரும் ஆகிய பி.சீ இம்புலான  அவர்களின் அந்தரங்கச் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார்.  1964 ஆம் ஆண்டு மெகொடபொதபத்துவை  கிராம சபை தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை ஆரம்பித்த பாரூக் அவர்கள் பிற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், போக்குவரத்து சபை தலைவர், ஜேர்மன் பயிற்சி கல்லூரியின் தலைவர் என இன்னோரன்ன உயர்பதவிகளில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டார்.


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆசீர்வாதத்துடனும் முன்னாள் அமைச்சர் பி.சீ இம்புலான போன்ற மாண்புமிகு அரசியல்வாதிகளின் வழிகாட்டலில் அரசியல் பயணத்தை அலங்கரித்த யூ.எல்.எம் பாரூக் அவர்களின் சேவைகள் இன்றளவும் மக்களால் நினைவு கூறப்பட்டு கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது சேவைகள் இன,மத,மொழிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது இன்னும் அமைதியானபோக்கு, பொறுமை, பல்துறை சார் அனுபவஅறிவு, அர்ப்பணிப்பு, நிதானம், தலைமைத்துவப் பண்புகள், போன்றன இவரிடம் இருந்த மிகப்பெரிய மூலதனங்கள் ஆகும்.


பி.சீ இம்புலான அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர்  ருவன்வெல்லைத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான பிரதிநிதித்துவத்திற்கு அன்று கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்  கட்சி கிளை மற்றும் இளைஞர் அமைப்பு தெரிவு தேர்தலில் பெரும்பான்மை வேட்பாளருக்கு மத்தியில் ஒரே ஒரு சிறுபான்மை வேட்பாளராக போட்டியிட்டார். வாக்களித்தவர்களில்  90% மேற்பட்ட பெரும்பான்மை பௌத்தர்கள் அன்று தங்களுடைய பிரதிநிதியாக சிறுபான்மை இனத்தவரான யூ.எல்.எம் பாரூக் அவர்களையே தெரிவு செய்தனர். இவ்விதம் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி தனது 47வது பிறந்த தினத்தன்று கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து வரலாறு படைத்தார்.

தொடர்ந்து  1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொண்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் பின்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து துறையில் பாரியதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முன்னோடியாக செயற்பட்ட பாருக் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் நவீன போக்குவரத்து துறையின் வளர்ச்சியிலும் பாரியதொரு செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம்.   மீண்டும் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலையும் வெற்றி கொண்டார். மக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் செவிசாய்த்து மக்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு சென்று  அவற்றிற்குத் தீர்வு காண்பதில் முனைப்புடன் செயற்பட்டார். முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (2000-2002) ஆட்சிக் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை தலைவராகவும் பணிபுரிந்தார். எதிர்பாரா விதமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற நேர்ந்த போதிலும் தன்  சேவைகள் தொடர வேண்டும் எனும் நோக்கில் தனது பெயரில் ஒரு மன்றத்தை தாபித்து அதனூடாக மாவட்டத்தில் வசதி வாய்ப்புக் குறைந்தோருக்கு  உதவியாய் இருந்தார். இம்மன்றத்தினால் வருடா வருடம் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.


அரசியலில் என்றுமே எதிரிகளை கொண்டிருக்காத அவர் பிரதிவாதிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவராக விளங்கினார். குறிப்பாக மூவின மக்களுக்கு இடையில் இன நல்லுறவை  கட்டியெழுப்பிய இவர் தனது தேர்தல் தொகுதி பெரும்பான்மை மக்களால் “சிங்கள பாருக்” என்று அழைக்கப்படும் அளவிற்கு பெரும்பான்மை சமூகத்தினரின் மனதினில் இடம்பிடித்தார். இன்னும் அவரின் நீண்டகால அரசியல் சேவையைப் பாராட்டி முன்னால் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் அஸ்கிரிய பீடத்தின் சங்க நாயக்கர்களுல் ஒருவரான விகாராதிபதி ஆரியவங்ச தேரர் உட்பட பல கட்சித்  தலைவர்களின் பங்கேற்புடன் பெரும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதில் "துன்கோரல அபிமானய" பட்டம் வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டமை  சிறப்பம்சமாகும். 

சிறந்த பேச்சாற்றல் மிகுந்த அவர் எதிர்த்தரப்பினரும் போற்றும் அளவுக்கு வாதத் திறமை மிக்கவராக விளங்கினார். தனக்கு பாதகமான சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்காக குரல் கொடுத்த பாரூக் அவர்கள் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அண்மையில் அவரின் சேவைகளை கெளரவிக்கும் முகமாக கன்னத்தோட்டை இஹலகம வீதி "யூ.எல்.எம் பாரூக் மாவத்தை" எனப் பெயரிடப்பட்டதுடன் இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

யூ.எல்.எம் பாரூக் போன்ற மக்கள் சேவகர்கள் காலத்தின் தேவைப்பாடாகும். அவர்களின் அரசியல் பயணம் பலருக்கும் முன்னுதாரணமாகும். 


அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக் கொண்டு மேலான சுவனத்தை அருள்வானாக.


எம்.ஆர்.எப் ரிப்தா

தென்கிழக்குப் பல்கலைகழகம்



No comments

Powered by Blogger.