Header Ads



O/L பரீட்சை முடிந்த பிறகு, ஜமாஅத் அனுப்பலாமா..?


Dr PM Arshath Ahamed MBBS MD PAED

குழந்தை நல சிறப்பு மருத்துவர்.


ஓ எல் முடிந்த மாணவர்களை ஜமாஅத் அனுப்புவது குறித்த வாதப் பிரதி வாதங்கள் இணைய வெளி எங்கும் ஓடிக் கொண்டிருக்கிறன்றன.


இன்றைய காலகட்டத்தில் இந்த கலந்துரையாடல் தேவையான ஒன்று தான். வாதத்தின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், என்னிடம் கேட்கப்படும் ஆலோசனைகளுக்கு நான் அவர்களை ஒரு 40 நாள் அனுப்புவது சிறந்தது என்றே நான் கூறுவேன். எனக்கு  ஓ எல் எழுதிய ஒரு மகன் இருந்திருந்தால் இப்போது, நிச்சயமாக அவனை நானும் ஒரு 40 நாள் ஜமாஅத் அனுப்பி வைத்திருப்பேன். இது தான் உண்மை. யதார்த்தம்.


தப்லீக் ஜமாஅத் குறித்து நீண்ட விமர்சனம் எனக்கு உண்டு. அவர்களின் மார்க்கம் பற்றிய புரிந்துணர்வு, ஏகப்பட்ட உள்ளக முரண்பாடுகள் குறித்த எண்ணற்ற குற்றச்சாட்டுகள் என்னிடமும் இருக்கின்றன. அது குறித்த எனது விமர்சனங்கள் கூட வெளிப்படையானவை. மார்க்கத்தில் அவர்களின் நேர் எதிர் சிந்தனைப் பள்ளியை (School of thought) சேர்ந்தவன் நான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், தற்போதைய சூழலில் , தனி மனித பயிற்றுவிப்பு, மற்றும் மார்க்கத்தின் மீதான பற்று , அமல்கள் மீதான ஆசையூட்டல் போன்றவற்றில் சிறப்பாக செயற்படுவதற்கு தப்லீக் சகோதரர்களை தவிர சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இது நிதர்சனமான உண்மை. அவர்களின் தர்பியத் போல் வேறொன்று இல்லை.


உலகமே இன்பம். இன்ஸ்டாவும் டிக்டாக்குமே வாழ்க்கை. நடிகர்களும் இன்புளுவன்சர்களுமே வழிகாட்டி . ரீல்ஸ் ஏ வாழ்க்கை. இது தான் சந்தோஷம். இது தான் மகிழ்ச்சி என்று பராமரிப்பு இல்லாமல், வழிகாட்டல்கள் தெரியாமல் தட்டு தடுமாறி , நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் தங்களை தாங்களே தொலைத்து திரிகின்ற இன்றைய வாலிபர்களுக்கு, வாழ்க்கையையும் அதன் யதார்த்தங்களையும் குறித்து தெரிந்து கொள்ள, அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை விட வேறு எந்த கோர்சும் ட்ரெய்னிங்கும் தேவை இல்லை. இது நிஜ வாழ்க்கையை படிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். நல்ல காலம்.


பாடசாலை- வீடு- டியுசன், பெற்றோர்- நண்பர்கள், போ(ர்)ன்-கேம்ஸ்- சோசியல் மீடியா என்ற நச்சு வட்டத்துக்குள் மட்டும் வாழ்ந்து பழகிய பிள்ளைகளுக்கு , நமக்கு வெளியிலும் பரந்து விரிந்த ஒரு உலகம் இருக்கிறது, அதிலே பல்வேறுபட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், உறவுகள் இருக்கின்றன, ஆன்மீகம் இருக்கிறது, கவலை, கஷ்டம் , தோல்வி , பயம் , தனிமை, வறுமை, நோய், நொம்பலங்கள்  இருக்கின்றன போன்ற நிஜ வாழ்க்கை பாடங்களை படித்து கொடுப்பதற்கு 40நாட்கள் ஜமாஅத் அனுப்புவது ஆயிரம் கவுன்சலிங் செஷன்கள், நூறு  மோட்டிவேஷன்கள் செய்வதை விட சிறந்தது. பட்டறிவு பெறுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை விட வேறு சந்தர்ப்பமும் காலமும் ஓய்வும் இனி அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.


மனித வாழ்வின் பலதரப்பட்ட நிலைகளை; வாலிபத்தை, மத்திய வயதை, வயோதிபத்தை, பல்வேறுபட்ட மனிதர்களை;அவர்கள் பண்புகளை ப்ரெக்டிகலாக அறிந்து அனுபவித்து பார்ப்பதற்கு இது ஒரு அடித்தளம். வாழ்க்கையின் சொகுசுகளை மறந்து , செல்போன்களை மறந்து, கட்டில் மெத்தைகளை மறந்து, விரும்பிய உணவுகளை மறந்து , ஏன் காலைக் கடன் கழிக்கும் கொம்பர்டபளான பாத்ரூமை மறந்து, எல்லோருடனும் எல்லாவற்றையும் பகிர்ந்து, பொறுமை காத்து, நிலத்திலே தூங்கி எழுந்து, மினிமம் பெஸிலிடீஸோடு தனது உணவை தானே சமைத்து , தனது ஆடைகளை தானே கழுவி, தனது தேவைகளை தானே செய்து பழகி, அது போல மற்றவர் தேவைகளையும் அனுசரித்து உதவி செய்து வாழ்க்கையை படிப்பதற்கு இதை விட வேறு கோச்சிங் , கேம்பிங் என்ன வேண்டும்??.


அது போல, பள்ளிவாசலின் ஆன்மீக சுழலை, அமைதியை ( tranquility), இறைவனின் அச்சத்தை, அமல்களின் சுவையை, உளப் பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தை, தலைமைத்துவ- சமூக கட்டுப்பாட்டை  படிப்பதற்கும் உணர்வதற்கும், 40 நாட்கள் ஜமாஅத் போவது மிகச் சிறந்த பயிற்சி களம். இது மிகக் குறைந்த செலவில் நிறைந்த பயன்பாடுகள் நிறைந்த ஒரு பயிற்சி பட்டறை.


எல்லாவற்றையும் விட, வாலிப வயதில் கூடுவாரோடு கூடி கெட்டுவிடுவான், அதை, இதை பழகி விடுவான் என்ற பயம் இங்கே இல்லை. நாற்பது நாட்களும் அவன் இங்கே புடம் போடப்படுவான். அதிகாலை எழும்புவான். ஓதுவான், தொழுவான். ஒவ்வொரு கார்கூன்சாப் சொல்லும் கதைகளிலும் லயித்துப் போவான். அமீர்சாப்களின் கண்டிப்பில் குறைந்தது அல் குர்ஆனை ஓதவும், வேளைக்கு தொழவுமாவது கற்றுக் கொள்வான். அது ஒன்றே போதும் அவனை கடைசிவரை வழி கெடாமல் காப்பாற்றுவதற்கு. இந்த பயிற்றுவிப்பு அவனுக்கு நிறைய நல்ல வழிகளை எதிர்காலத்தில் நிச்சயமாக திறந்து கொடுக்கும்.


முடிவாக, பெற்றோர்கள் ஓ எல் எழுதிய தங்கள் பிள்ளைகளை குறைந்து ஒரு நாற்பது நாட்களாவது ஜமாஅத் அனுப்புவது, இன்றைய காலத்தின் தேவை. இது  கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒரு பணி,  ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த நாற்பது நாட்களும் ஏ எல் வாழ்கையை , எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக முன் கொண்டு செல்தற்கான ஒரு இன்வெஸ்ட்மென்ட் அன்றி வேறில்லை.

No comments

Powered by Blogger.