O/L பரீட்சை அவசியமில்லை, A/L கட்டாயம் - ஆங்கிலம் தேசிய மொழியாகிறது, அரபும் கற்க ஏற்பாடு
ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வியற் கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான 1729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனையடுத்து ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.
இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக் காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்றார்.
தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
“நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கொவிட் பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 வருடங்கள் மேலதிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்திருந்தீர்கள். உங்களுக்கு கற்பித்த பீடாதிபதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.
1985 களில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களாகின்றன. இந்த 38 வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.
இன்று நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது. அதனால் 21 ஆவது நூற்றாண்டிற்கு அவசியமான கல்வி முறைமையை கட்டமைப்பதற்காக அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும்.
இது பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாம் மீண்டெழும் நேரமாகும். இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்பட்டால் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியால் வருமானம் ஈட்ட வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றினையும் உருவாக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேநேரம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவூட்டக்கூடிய வகையிலான கல்வி முறையொன்றினையும் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள முதன்மை வளமாக மனித வளமே காணப்படுகின்றது. அந்த வளத்தை ஆசிரியர்களே பலப்படுத்துகின்றனர். அதனால் ஆசிரிய வளத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.
கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம். தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது. அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார் குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும் 2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.
அதேபோல் சங்கீதம்,கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தெரிவுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஸ்கெண்டினேவிய நாடுகளில் அவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன. அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு நாமும் செல்ல வேண்டும். உயர்தர பாடங்கள் மாத்திரமின்றி வாழ்க்கைக்கு அவசியமான கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதனூடாக கிட்டும்.
13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை. நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.
13 வருட கல்வியை பெற்றுக்கொடுக்கின்ற போது அதற்கு உகந்த வகையில் பரீட்சைகளை நடத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளது. தற்போது பரீட்சை தினங்கள் மாறுகின்றன ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒவ்வொரு திகதியில் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் மாதத்தில் பரீட்சை இடம்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஏற்படும்.
பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு 21 வயது. குறைந்தபட்சம் 23 வயதிலாவது பல்கலைக்கழங்களிலிருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதேபோல் இன்று பல புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. ஆங்கில கல்வி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஆங்கில மொழி தெரியவில்லை என்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது.
19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் சிங்கள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்ல நாயக்க தேரர், ஈ.ஆர்.சரத்சந்திர,மார்ட்டின் விக்ரமசிங்க ஆகியோர் அனைவரும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆவர்.
அதனால் அனைவருக்கும் ஆங்கில கல்வியை வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக முதலில் ஆங்கில ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அடுத்த 05 வருடங்களுக்குள் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஆங்கில மொழியை தேசிய மொழியாக நடைமுறைப்படுத்த முடியும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆவணங்கள் இன்னும் ஆங்கில மொழியிலேயே பேணப்படுகின்றன. நாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்காது சீன மொழி,ஜப்பானிய மொழி, ஹிந்தி, அரபு போன்ற மொழிகளையும் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.
அதேபோல் எமது பல்கலைக்கழக கட்டமைப்பினையும் நவீனமயப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் காலத்தை 3 வருடங்களா அல்லது 4 வருடகங்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் அரச பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த வேண்டும்.
தற்போது, ஆண்டுக்கு சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். மேலும் ஒரு குழுவினர் வெளிநாடு செல்கிறனர். இன்னும் சிலர் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளனர். எனவே, அரச பல்கலைக்கழகங்கள், தேசிய பல்கலைக்கழகங்களைப் போன்று அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் நாம் வாய்ப்புகளை வழங்குகிறோம்.
அவ்வாறு, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்படவேண்டுமாயின், அந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலகு வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஏனைய எல்லா நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அந்த முறையை நாம் உருவாக்க வேண்டும்.
இன்னும் 15-20 வருடங்களில் வகுப்பறை எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்துடன் நாம் எவ்வாறு முன்னேற முடியும் என்று பார்க்க வேண்டும். Chat GPT காரணமாக எதிர்காலத்தில், கற்பித்தல் முறைகளும் முற்றிலும் வேறுபடும். நாம் பெரும் மாற்றத்தின் சகாப்தத்தில் இருக்கிறோம். எனவே அந்த தொழில்நுட்பத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
16-06-2023
Post a Comment