Header Ads



ஜாமியா நளீமிய்யா பொன் விழாவில் இம்தியாஸ் Mp ஆற்றிய உரை


பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பொன் விழாவும், பட்டமளிப்பு விழாவும் நேற்று (24) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆளுநர் யாக்கூத் நளீம் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நிகழ்த்திய உரையின் முழுமையான தமிழ் வடிவம்.


அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


 கன்னியமிக்க உலமாக்களே,


இன்று ஜாமிஆ நளீமிய்யாவை முன் கொண்டு செல்வதற்கான பொறுப்பையும் சுமையையும் ஏற்றுள்ள அதன் தற்போதைய தலைவர் யாகுத் நளீம் தலைமையிலான பரிபாலன குழு உறுப்பினர்களே,


ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வித் துறைக்கு தலைமை தாங்கும், அஷ் ஷேக் அகார் முஹம்மத் அவர்கள் உள்ளிட்ட , ஆசிரிய கனவான்களே,


பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் வெளிநாட்டு தூதுவர்களே, (எனது உரையின் மொழிபெயர்ப்பை அவர்கள் பெறுவார்கள் என்பதால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்)


இன்றைய நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட கௌரவ அதிதிகளே.


ஜாமியா நளீமியாவின் மாணவர்களே, பழைய மாணவர்களே, ஏனைய அதிதிகளே,


ஜாமிஆ நளீமிய்யாவின் பொன்விழாவை கொண்டாடும் இத் தருணத்தில், முதலில் அந்த வரலாற்றுப் பணியை முன்னின்று நடத்திய நளீம் ஹாஜியாரை நாம் நினைவுகூற கடமைப் பட்டுள்ளோம். இந்த பணியை செய்வதில் அவர் கொண்டிருந்த தூர நோக்கு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவ்விடத்து, இப்பணியைச் செய்ய அவருக்கு வழிகாட்டிய, பல்வேறு வழிகளில் உதவிய, அப் பணியை நனவாக்க பங்களித்த முன்னோடிகள் சகலரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.


பேருவளையில் ஜொலிக்கும் மாணிக்கமாக ஜாமிஆ நளீமிய்யாவை நான் பார்க்கிறேன்.  மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களதும், எனதும் சொந்த ஊரான பேருவளை பற்றியும் பேசும் போது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இயல்பாகவே நினைவுக்கு வருகின்றது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த அரேபியர்களின் முதல் குடியேற்றமாக பேருவளை கருதப்படுகிறது.


அந்த வரலாற்றின் இரண்டு முக்கிய மையங்களாக இலங்கையின் முதல் பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ரார் மற்றும், ஜாமிஆ நளீமியா என்பன திகழ்கின்றன.


இந்நாட்டு முஸ்லிம் மக்களின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது.ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த முஸ்லிம் மக்கள் வர்த்தகத்திற்காகவே இந்நாட்டிற்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.


அவ் ஆரம்ப காலத்திலிருந்தே எமது இஸ்லாமிய முன்னோர்கள் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் இலங்கை சமூகத்துடனும் சிறந்த பரஸ்பர புரிதலையும் பரஸ்பர மரியாதையையும் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் சுதேச மக்களுடன் வலுவான மற்றும் நம்பகமான பிணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர்.இந்த உறவுகளைப் பயன்படுத்தி,அக் காலகட்டங்களில் அரபு நாடுகளுடன் நமது மன்னர்கள் கொண்டிருந்த இராஜதந்திர உறவுகளுக்கு வரலாறு சாட்சி பகிர்கிறது.



எனினும், போர்த்துகேய மற்றும் ஒல்லாந்தரின்  ஏகாதிபத்திய ஆட்சியின் போது, ​இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைப் போலவே, இஸ்லாமிய மக்களும் பல்வேறு சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


குறிப்பாக தத்தமது தனித்துவ அடையாளங்களை பாதுகாத்து அவர்களின் குழந்தைகளுக்கு நவீன கல்வியை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.


இந்தப் பின்புலத்தில் ஓல்கோட் அவர்கள் தலைமையில் பௌத்த தலைவர்கள் இணைந்து ஆனந்த,நாலந்தா,தர்மராஜா, ராகுல,மலியதேவ போன்ற பாடசாலைகளை நாடெங்கும் ஆரம்பித்து தமது சமய அடையாளத்தைப் பாதுகாத்து பௌத்த பிள்ளைகளுக்கு நவீனக் கல்வியை வழங்க முயற்சித்தனர்.


அவ்வாறே,தமிழ் தேசியத் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி போன்ற கல்லூரிகளைத் தொடங்கி,அதன் மூலம் அவர்களின் மத அடையாளத்தைப் பாதுகாத்து, இந்துக் குழந்தைகளுக்கு நவீன கல்வியை வழங்கினர்.


அன்றைய காலகட்டத்தில் இருந்த இஸ்லாமிய அறிஞர்கள்,பரோபகாரர்கள்,டாக்டர் டி.பி.ஜாயா போன்ற தலைவர்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் கொழும்பு, மாத்தளை, தர்காநகர், கம்பளை, புத்தளம் போன்ற இடங்களில் ஸாஹிரா கல்லூரிகளை ஆரம்பித்து மகத்தான பணிகளைச் செய்தார்கள்.


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில், ஜாமிஆ நளீமியாவை ஒரு முக்கிய திருப்புமுனையாக நான் பார்க்கிறேன்.


இலங்கைச் சமூகத்தில் கல்வியைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை இல்லாமல் செய்து நாட்டிற்குச் சுமையில்லாத,சொந்தக் காலில் நிற்கக்கூடிய மக்களாக முஸ்லிம் சமூகத்தை மாற்றியமைக்க, “ஜாமிஆ நளீமிய்யா” ஊடாகவும் "இக்ரா" நிறுவனம் மூலமும் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் வரலாற்றை மாற்றும் பயணத்திற்கு தலைமை தாங்கினார்.


அந்தத் தலைமையோடு,இலட்சிய நோக்கும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட ஓர் அணி அவருடன் இணைந்திருந்தமை  அவருக்கு ஆசீர்வாதமாகவும், பெரும் பலமாகவும் இருந்தது.அவர்கள் அனைவரையும் இத் தருணத்தில் மிகவும் கெளரவத்துடன் நினைவு கூறுகிறோம்.


நளீமியாவின் தொடக்க காலம் முதல், நளீமியாவில் கல்வி பணி செய்வதற்காக தனது பல்கலைக்கழக வாழ்க்கைக்கு விடைகொடுத்து நளீமியாவுடன் இணைந்து அதற்கு சிறப்பானதொரு தொடக்கத்தை வழங்கிய கலாநிதி சுக்ரி அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே இங்கு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று ஆற்றிய உன்னதப் பணிகளை இத் தருணத்தில் நினைவுகூறுவது எமது கடமையாகும்.


வரலாறு காணாத வகையில் பிரிவினைவாதக் கிருமிகளால் எமது நாடும், சமூகமும் தீயிடப் பட்டிருந்த சவாலான காலக்கட்டத்தில், நளீமியாவின் கல்விச் செயற்பாடுகளை அஷ்ஷேக் அகார் முஹம்மத் கையிலெடுத்துள்ளார். ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்ற அவர்,இன்று அங்கேயே விரிவுரையாளராகவும்,அதன் கல்வித் துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.


இறைவனின் ஆசீர்வாதத்தால் அவரும் பரிபாலன சபைத் தலைவர் யாகுத் நளீம் அவர்களும் ஏனைய பரிபாலன சபை குழு உறுப்பினர்களும் இணைந்து இந்த சவாலான காலத்தை மிகவும் விவேகத்துடனும் பொறுமையுடனும் கையாளுகின்றனர்.


நாட்டின் விவகாரங்களில் பார்வையாளர்களாக அன்றி வினைத்திறன் மிக்க பங்காளராக திகழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி,நாட்டை முன்னோக்கி நகர்த்துவதில்,நாட்டிற்கு பங்களிப்பதில் வார்த்தையின் பரிபூரண அர்த்தத்திலேயே பொறுப்புள்ள இலங்கை பிரஜைகள் சமூகமொன்றை நளீமியா இன்று நாட்டிற்கு வழங்கிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.


இன்று, நமது சமூகம் சிறந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள்,சகல துறையிலும் தொழில்சார் வல்லுநர்கள் போலவே அரசியல் தலைவர்களைக் வேண்டி நிற்கின்றது. இவ்வாறான,உயர் பெருமானங்கள் மற்றும் விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதோடு,முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி,இன்றைய யுகத்திற்கு ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்திற்கும் தலைமைத்துவம் வழங்கக்கூடிய அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான குடிமக்கள் சமூகமொன்றை கட்டியெழுப்பும் சவால் மிக்க பொறுப்பை நளீமியா சுமந்துள்ளது.


நாங்கள் கடந்து வந்த கடினமான மற்றும் சவாலான காலங்களின் அனுபவங்களிலிருந்து நீங்கள் இப்போது மிகவும் பன்பட்டுள்ளீர்கள்.


எனவே,அந்தப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு நளீமியா முன்பை விட இப்போது வலுவான நிலையில் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.அவ்வாறே, ஒட்டுமொத்த நாடும் மதிக்கும் முன்னுதாரணமிக்க பிரஜைகளை நளீமியா நாட்டுக்கு வழங்கியிருப்பதனால் அவ் ஆசீர்வாதமும் அதன் பக்கபலமும் உங்களுக்கு என்றும் உள்ளது.


அன்று மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் தோளில் சுமத்தப்பட்டிருந்த இந்தப் பொறுப்புகளும், சுமையும் இன்று கெளரவ யாகுத் நளீமியின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.


கடந்து சென்ற சவாலான காலகட்டத்தில் நாம் எதிர்நோக்கிய நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களை சிறப்பாகவும் திறமையாகவும் கையாண்ட அவருக்கும் அவருக்கு ஆதரவளித்த பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் கெளரவ அஷ்ஷேக் அகார் முஹம்மத் அவர்களுக்கும் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஜாமியா நளீமிய்யாவை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான பலமும் ஆற்றலும் பெற பிரார்த்தித்துக் கொண்டு என் உரையை முடிக்கின்றேன்.

No comments

Powered by Blogger.