Header Ads



IMF க்கு செல்லுமாறு நாங்கள்தான் முதலில் ஆலோசனை வழங்கினோம்


சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நாட்டுக்கு நன்மை பயக்கும் உடன்படிக்கையை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்தும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவே ஆரம்பத்தில் வழங்கியது என்றாலும்,தற்போதைய அரசாங்கம் தாமதமாகச் சென்று நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் பலவீனமான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.


இந்த அரசாங்கம் கையாலாகாத்தனத்தால் தவிக்கும் அரசாங்கம் எனவும்,நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொறுப்பற்ற செயற்திட்டத்தினால் நாட்டிலுள்ள மக்களுக்கு பாரிய பாதகமான நிலை உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


முதல் காலாண்டில் பொருளாதாரம் சுருங்கியது என்பது அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படுவதாகவும்,நாட்டு மக்களிடம் தகவல்களை மறைப்பதையே அரசாங்கம் எப்போதும் செய்து வருவதாகவும்,அதுமட்டுமின்றி,

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி அரசாங்கம்,நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்களைப் பாதுகாத்து,

திருடர்களுக்கு சுகபோகம் அநுபவிக்க இடமளித்து,தாமும் சுகபோகம் அனுபவித்து சர்வதேச நாணய நிதியத்துடன் தோல்வியுற்ற ஒப்பந்தத்தை எட்டியதாகவும்,அதன் பலனை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர் எனவும்,இனியும் மக்களுக்குப் பொய் சொல்ல அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்காமல் இந்தப் பொய்கள்,ஏமாற்று வேலைகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று(16) கூடிய எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


நாடு இழந்த வளங்களையும்,

திருடிய திருடர்களையும் பிடித்து அவற்றை நாட்டிற்கு கையப்படுத்தத் தேவையான ஊழல் எதிர்ப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும்,

இந்த இரட்டை வேட போலித்தனத்தை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி,நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் தலைமையிலான அரசாங்க தரப்பினர் உள்நாட்டுக் கடனை மறுசீரமை மேற்கொள்ள மாட்டோம் என்று கூறிய போதும்,தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் எனவும்,இவ்வாறு மக்களிடம் பொய் கூறுவது ஏன் என கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த திடீர் மாற்றத்தினால் அரசாங்கம் நாட்டையும் மக்களையும் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மையை உருவாக்கும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியாதா?இவற்றை அறியாமலா இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன? என்று தான் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,உலக நாடுகள் பலவும் மக்கள் சார்பாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்ட போதும் தற்போதைய ராஜபக்ச சார்பு அரசாங்கத்தால் ஏன் மக்களைப் பற்றி சிந்திக்க முடியவில்லை? தான் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.


உலகம் முழுவதும் சென்று அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தி எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் நாட்டின் பொருளாதாரம் ஏன் சுருங்கி வருகிறது? என தான் கேள்வி எழுப்புவதாகவும்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை பரேட் சட்டம் மூலம் விற்பதுதான் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையா? என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே,இந்த பொய்யை விட்டொழித்து நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள் என்றும், அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் வலுவான உடன்பாட்டை எட்டுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் அந்த தீர்மானத்தை மக்களுக்காக எடுக்க அரசாங்கம் தவறியதால், நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் சகல பிரேரணைகளும் நிராகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏன் நேர்ந்தது? குறித்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும்,இது தொடர்பிலான அரசாங்கத்தின் பதிலுக்காக நாடும்,மக்களும்,

எதிர்க்கட்சியும் காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.