Header Ads



நோயற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றன - மக்கள் அச்சப்படத் தேவையில்லை


(ஏயெஸ் மெளலானா)


கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டப்பொல தெரிவித்தார்.


இது குறித்து திங்கட்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது;


அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில் மாடுகள் சிலவற்றுக்கு ஒரு வகையான நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக மாடுகள் அறுக்கப்படுகின்ற விடயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்  என்பதை அறியத் தருகின்றேன்.


குறிப்பாக விலங்கறுமனைகளுக்கு அறுவைக்காக கொண்டு வரப்படுகின்ற மாடுகள் அனைத்தும் எம்மால் நன்கு பரீட்சிக்கப்பட்டு, எவ்வித நோயும் அற்றவை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை அறுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.


நோய்த் தொற்றுக்குள்ளான அல்லது சந்தேகத்திற்கிடமான மாடுகளை அறுப்பதற்கு எம்மால் அனுமதி வழங்கப்படுவதில்லை.


மேலும், தற்போதைய சூழ்நிலையில் மாடுகளை கொள்வனவு செய்யும்போது அவதானிக்க வேண்டிய விடயங்கள் குறித்து மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.


ஆகையினால், இது விடயத்தில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.