கர்நாடக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பும், பல அதிரடி ஆட்டங்களை நிகழ்த்தும் காங்கிரஸ் அரசு
இப்படியான நிலையில், இன்று மதியம், மதக்கலவரங்களில் மரணித்த இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் அரசு, தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் மாண்டியா மாவட்டத்தில், ‘பசு பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் இயங்கிய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களால், இஸ்லாமிய இளைஞர் இத்ரீஸ் பாஷா கடுமையாக துன்புறத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல், பா.ஜ.க ஆட்சி முழுவதிலும், பல்வேறு காலகட்டங்களில், பல மாவட்டங்களில் மதக்கலவரங்களால் கொலைசெய்யப்பட்ட, மசூத், முகமது ஃபாசில், அப்துல் ஜலீல், சபீர் சுபான்; மங்களூரு நகரில் இஸ்லாமிய வகுப்பினர்களால் கொலைசெய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி தீபக் ராவ் ஆகிய 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூரில் வழங்கினார்.
நிவாரண நிதி வழங்கிவிட்டு நிருபர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘‘அரசு என்பது அனைவருக்கும் உரியது, குறிப்பிட்ட வகுப்பினருக்கும், மதத்துக்கும் அரசு செயல்பட்டால் அது சட்டத்துக்கும், சமூகநீதிக்கும் புறம்பானது. பா.ஜ.க அரசு இங்கு ஆட்சியில் இருந்தபோது இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள் மதக்கலவரங்களில் இறந்தால், அவர்களுக்கு மட்டும்தான் நிவாரண நிதி வழங்கியது.
மதக்கலவரங்களில் மரணித்த சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பா.ஜ.க நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இது குறித்து நான் பலமுறை சட்டப்பேரவையில் பேசியும், பா.ஜ.க செவிசாய்க்கவே இல்லை. ஆனால், தற்போது, காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்குகிறோம். இனிமேல், கர்நாடகத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் எந்த வகுப்பினர்கள் செயல்பட்டாலும், காங்கிரஸ் அரசு பாகுபாடின்றி உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
Post a Comment