இந்தியா ஜனாதிபதிகள் கோயிலுக்குள் சென்று, தரிசனம் செய்வதற்கு உரிமையில்லையா..?
- BBC -
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) டெல்லியில் உள்ள ஸ்ரீ ஜெகன்நாதர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது கோவில் கருவறைக்கு வெளியில் அவர் இரு கைகளையும் கூப்பியபடி நின்றுகொண்டிருந்த படம் அதன் பின்னர் வெளியானது. ஆனால், அந்த படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தொடங்கி வைத்தது.
இதற்கு முன்பே இது போல், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் போன்றவர்கள் இதே கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட பலர், திரௌபதி முர்மூ ஏன் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யமுடியவில்லை என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி ஹவுஸ் காஸில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பாக விவாதங்களும் தொடங்கியுள்ளன.
ஜூன் 20 அன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தனது 65வது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் ஹவுஸ் காஸில் உள்ள ஜெகன்நாதர் கோயிலுக்குச் சென்று பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். இந்த ஆண்டின் ரத யாத்திரையைக் குறிக்கும் விதத்திலும் இந்த வழிபாடு அமைந்திருந்தது.
அவர் பூஜை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜெகன்நாதர் ரத யாத்திரை தொடங்குவதையொட்டி, அவர் ட்விட்டரில் மக்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
திரௌபதி முர்மூ படத்துடன், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த புகைப்படங்களில், மத்திய அமைச்சர்கள் இருவரும் வெவ்வேறு நேரங்களில் கோயிலின் கருவறைக்குள் சென்று பூஜை மற்றும் தரிசனம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கருவறைக்குள் சென்று பூஜை செய்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏன் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்யக்கூடாது என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரௌபதி முர்மூ ஆகியோரின் புகைப்படங்களை ட்வீட் செய்த 'தி தலித் வாய்ஸ்' என்ற ட்விட்டர் பக்கம், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ மட்டும் ஏன் அனுமதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் மூத்த பத்திரிகையாளர் திலீப் மண்டல் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கருவறைக்குள் உள்ள சுவாமி சிலைகளை தொட்டு வணங்கினார். ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மூவால் அது போல் தரிசனம் செய்ய முடியவில்லை. அவர் கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது," என்று அவர் எழுதியுள்ளார்.
மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பல கோவில்களின் கருவறைகளுக்குள் சென்று வழிபாடு செய்ததாக பல ட்விட்டர் பயனர்கள் பதிவிட்டிருந்தனர்.
தேவகரில் உள்ள வைத்தியநாத் கோயிலிலும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் முர்மூ பூஜை செய்யும் படங்களை எழுத்தாளர் கார்த்திகேயா தன்னா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவில் நிர்வாகம் என்ன கூறுகிறது?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏன் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யவில்லை என்பதை அறிய, டெல்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவிலுக்கு பிபிசி சென்றது.
கோவிலுக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் செராஜ் அலியிடம் பேசிய ஜெகநாதர் கோவில் அர்ச்சகர் சனாதன் பாடி, இந்த புகைப்படம் குறித்து பரவிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கோயிலில் வழிபாடு நடத்துவதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன என்றும், இந்துக்கள் அனைவரும் சாதி பேதமின்றி கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் யாரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கிறோமோ அவர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் வழிபட முடியும். அப்படி வருபவர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் வந்து, சுவாமி சிலைக்கு முன்பாக நின்று தரிசனம் செய்கிறார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, அவராகவே தரிசனம் செய்ய வந்ததால் அவர் உள்ளே வரவில்லை," என்றார்.
"இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் விமர்சனங்கள் அபத்தமானவை. கோவிலுக்கு அனைவரும் வரலாம். ஆனால், சிறப்பு அழைப்பின் பேரில் வருபவர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். இது அனைவருக்கும் பொருந்தும்." என்றார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மனைவியுடன் தரிசனம் செய்ய வந்தார்
இதே போல் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோயில் அர்ச்சகர்கள் ஒருமுறை தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிருப்தி தெரிவித்தாலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது, 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலுக்கு அவர் சென்றார். அப்போது, அவர் தகாத முறையில் நடத்தப்பட்டார்.
மார்ச் மாதம் 18 ம் தேதியன்று, குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும் ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றனர். அப்போது அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.
"ஜெகன்நாதர் அமர்ந்திருக்கும் ரத்ன சிம்மாசனத்தைத் தொட்டு வணங்க அவர் முயன்ற போது அங்கிருந்த ஊழியர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. சில ஊழியர்கள் குடியரசுத் தலைவருக்கு மிக அருகில் சென்று அவரையும், அவரது மனைவியையும் சிம்மாசனத்தின் தலையைத் தொட்டு வணங்க அனுமதிக்கவில்லை,” என்று அப்போது தகவல்கள் பரவின.
பூரியை விட்டு வெளியேறுவதற்கு முன், இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது அதிருப்தியை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வாலிடம் தெரிவித்தார். அதே நேரம் குடியரசுத் தலைவர் மாளிகையிலும் அதிருப்தி எழுந்தது.
மார்ச் மாதம் இந்நிகழ்வு நடந்த நிலையில், அதற்குப் பின் மூன்று மாதங்கள் கழித்து ஜூன் மாதம் தான் இது பற்றிய செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய போதிலும் ஆலய நிர்வாகத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
Post a Comment