Header Ads



அரச அடக்குமுறைக்கும், வளங்களை விற்பனை செய்வதற்கும் எதிராக அணி திரளுமாறு அழைப்பு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


அரச அடக்குமுறைக்கும் அரச வளங்களை விற்பனை செய்வதற்கும் எதிராக அணி திரளுமாறு கோரி 30 பொது அமைப்புக்கள் இணைந்து செவ்வாயன்று 20.06.2023 பொது அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி உள்ளூராட்சி நிறுவனங்களை முடக்கி, மாகாண சபைகளை முழுமையாக முடக்கிய பாராளுமன்றத்திற்கு எதிராகவும்,. நம்பகத்தன்மை இல்லாத ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட ஆணைகள் மற்றும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும், பணக்காரர்களின் கடனைத் துண்டித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், மக்களின் விருப்பமின்றி நிறைவேற்று அதிகாரம் மூலமும், அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவும் மேற்கொள்ளப்படும் இச்செயற்பாட்டின் காரணமாக அனைத்து மக்களும் இன்று கடுமையான அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளனர்.


குறிப்பாக அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்பும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கரங்களால் நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.


அனைத்துத் தரப்பினரது எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார். ஆனால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, அதே சட்டதிட்டங்கள் அல்லது இன்னும் கடுமையான சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.


இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஒலிஃஒளிபரப்பு அதிகார சபையை நிறுவுவதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலம் அதற்கு ஓர் உதாரணமாகும்.


ஒருபுறம் இடைவிடாத அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வரும் அரசு, மறுபுறம் அரச சொத்துக்களை மொத்தமாக விற்கத் தொடங்கியுள்ளது.


அன்று, நாட்டின் பொருளாதார சுதந்திரத்தையும் தேசியஇறையாண்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே அரச தொழில் முயற்சிகள் உருவாகின.


1960களில் வெளிநாட்டு – பல்தேசிய நிறுவனங்களின் கீழ்செயற்பட்ட எரிபொருள் இறக்குமதி – வாணிபம் பொதுமக்களின் வலுவானவேண்டுகோள் காரணமாக தேசியமயமாக்கப்பட்டது.


அரசாங்கம் இன்று வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களும் இலாபம் ஈட்டினாலும் இல்லாவிட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த கடன் தவணைப் பணத்தை சர்தேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுவிப்பதற்கு முன்னர், அரச சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.


அரசுக்குச் சொந்தமான பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சொத்து மற்றும் வணிக நடவடிக்கைகளில் கணிசமான பகுதியை அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுக்கு விற்க அல்லது உரிமத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், புகையிரத திணைக்களம் உட்பட பெருமளவிலான அரச வளங்களையும் அரச சொத்துக்களையும் வெளிநாட்டவர்களிடம் டொலர்களுக்கு விற்க அரசு தயாராகி வருகின்றது.


எனவே,


■அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் விற்பனையை நிறுத்துக!


■ மக்களின் சொத்துக்களை டொலருக்கு விற்பது உட்பட, மக்கள் விரோத செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் தொழிற்சங்கத் தலைவர்களையும் அனைத்து மக்களை வேட்டையாடுவதையும் நிறுத்துக!


■ மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், நிறைவேற்று அதிகாரத்தின் சொந்த விருப்பத்தின் பேரில் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல்படும் அடக்குமுறைச் சட்டங்கள் உட்பட பிற சட்டவிரோத செயல்களை உடனடியாக நிறுத்துக!


■ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல் நோக்கங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்க!


■ மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் நாளுக்கு நாள் ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடததுக


என்று மக்கள் ஆணை இல்லாத, மக்களை ஒடுக்கும் ரணில்-ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

No comments

Powered by Blogger.