இலங்கையில் இந்து சனத்தொகையில் கணிசமான சரிவு - தமிழக பாஜக தலைவர் கவலை
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஒரு வார கால சுற்றுப் பயணம் சென்றுள்ள அவர், லண்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பேசினார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் கலாச்சார அமைப்பான பிரித்தானியா தமிழ்ச் சங்கம் மற்றும் சங்கமம் யுகே இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அண்ணாமலை தனது உரையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான குறைவை எடுத்துக்காட்டினார்.
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இந்து சனத்தொகையில் கணிசமான சரிவு கவலையளிக்கும் ஒரு விடயமாகும். இந்த போக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் இப்பகுதியின் கலாச்சாரத்திற்கு பாரிய தீங்கு விளைவிக்கும் என்பதால் கவலை அளிக்கிறது, ”என்றார்
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் இடங்கள் தோன்றி தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனித்துவமான கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பேணி வருகின்றன.
எவ்வாறாயினும், அண்மைக்காலமாக இந்தப் பகுதிகளில் பௌத்த தொல்பொருள் இடங்கள் தோன்றியமை ஈழத் தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது நிலையான அமைதிக்கும், வரும் பத்தாண்டுகளில் நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் முக்கியமானது” என்று அண்ணாமலை மேலும் கூறினார்.
Post a Comment