விஜேயதாச கூறியுள்ள பல, முக்கிய விடயங்கள்
கலாசார நல்லிணக்கத்தை மக்கள் மயமாக்கும் உலகத் தரம் வாய்ந்த திரைப்படம் திரையிடுதல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,
"தேசிய ஒருங்கிணைப்பை பாதுகாக்கத் தேவையானளவு சட்ட திட்டங்கள் இருக்கின்றன. சமத்துவத்தை உறுதிப்படுத்த தேவையானளவு உறுப்புரைகள் எமது அரசியலமைப்பில் இருக்கின்றன. இவை அனைத்தும் இருந்தும், எமது நாடு அடிக்கடி இரத்த ஆற்றில் நிரம்பி வழிகின்றது.
1971 கலவரத்தில் 60 ஆயிரம் பேர்வரை மரணித்தனர். 1983, 1988 கலவரங்களில் மேலும் ஆயிரம் பேர்வரை மரணித்தனர். வடக்கு, கிழக்கு பிரிவினைவாத யுத்தம் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான நிலையில், எங்களுக்கு எதிர்காலம் தொடர்பாக கனவு காண முடியுமா?
இவ்வாறான கலாசாரம் இருக்கும் நாடொன்றில் நாங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தாலும், சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டாலும், நாட்டு மக்களின் எதிர்கால பரம்பரையின் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நாங்கள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அனைத்து விடயங்களையும் செய்வதுடன், நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், எந்த பயனும் இல்லை.
இந்த நாட்டில் வாழும் மக்கள் எமது சகோதரர்கள், எமது பிள்ளைகள் எனும் உணர்வு இருக்க வேண்டும். அந்த உணர்வை ஏற்படுத்திக் கொள்ளும்வரை எமது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்க முடியாது.
எமது நாட்டு மக்கள் பல்வேறு வகையில் பிளவுபட்டிருக்கின்றனர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றும் ஸ்ரீலங்கா, யூ.என்.பி. ஜே.வி.பி. என்றும் கலாசார ரீதியிலும் பிளவுபட்டிருக்கின்றனர்.
ஏன் நாங்கள் இவ்வாறு பிளவுபட்டிருக்கிறோம்.
மக்களை பிளவுபடுத்தவா ஜனநாயகம் தேவை? ஜனநாயகத்துக்கு மிகவும் இலகுவான வரைவிலக்கணம் பன்முகத்தன்மையின் மூலம் ஒருமைப்பாட்டுக்கு வருவதாகும்.
ஆனால், நாங்கள் அதற்கு அப்பாற்பட்ட விடயங்களே செய்கிறோம்.
அதனால், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் இந்த நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியேயாக வேண்டும்" என்றார்.
Post a Comment