Header Ads



சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஹஜ்ஜுப் பெருநாள்: நல்லிணக்க மற்றும் ஈகையின் கொண்டாட்டம்


- காலித் ரிஸ்வான் -


ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் என அழைக்கப்படுவது இஸ்லாத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க பெருநாளாகும். இப்ராஹிம் நபி அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காக அவனது கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கான ஒரு செயலாகப் பலியிடத் தயாரானதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. இருப்பினும், இந்த அருத்து பலியிடல் நடைபெறுவதற்கு முன்பு, அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பதிலாக ஒரு ஆட்டை இறக்கி வைத்தான். இதை இப்ராஹிம் நபி அவர்கள் அருத்துப் பலியிட்டார். இந்த அருத்துப் பலியிடலை நினைவுபடுத்தும் முகமாகவே இந்த தியாகத் திருநாளில் குர்பான்   கிரியை நிறைவேற்றப் படுகிறது. இந்த பெருநாள் இடம்பெரும் 'துல் ஹஜ்' மாதமானது பல சிறப்புகளை கொண்டிருப்பதோடு முக்கியமாக உலக மக்கள் யாவரும் அலை அலையாக ஹஜ்ஜுக்காக மக்கா நோக்கி செல்லும் புனித மாதமும் ஆகும்.


இந்த திருநாளின் மார்க்க ரீதியான முக்கியத்துவங்களுக்கு அப்பால், இது சமூகத்துக்குள் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. அத்தோடு ஒற்றுமை, இரக்கம் மற்றும் பலதரப்பட்ட பின்னணியில் உள்ள தனிநபர்களிடையே ஒரு ஒருமை உணர்வை வளர்க்கிறது, குடும்பங்கள், அயலவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இடையே வலுவான உறவையும் பிணைப்பையும் வளர்க்கிறது.


சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் ஈத் அழ்ஹா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான சில முக்கிய விடயங்களை சற்று ஆராய்வோம்.


கூட்டுத் தொழுகையும் பிரார்த்தனையும்

ஹஜ்ஜுப் பெருநாளானது மஸ்ஜித்கள், திறந்தவெளிகள் அல்லது நியமிக்கப்பட்ட தொழும் பகுதிகளில் நடைபெறும் ஜமாஅத் அதாவது கூட்டான தொழுகையுடன் ஆரம்பிக்கிறது. சமூகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்றுபட்ட சமூகமாக தொழுகையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்நாள் ஏற்படுத்தி தருகிறது. சமூக அந்தஸ்து, இனம் அல்லது பிரதேசம் எதுவாக இருந்தாலும், அனைவரும் தோளோடு தோள் நின்று, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் மக்கள் இந்நாளில் அடையாளப்படுத்துகிறார்கள். இந்த கூட்டு வழிபாட்டுச் செயல் மக்களிடையே ஒரு வகையான கூட்டுணர்வு மற்றும் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவ விழுமியங்களை வலுப்படுத்துகிறது.


குர்பானை பகிரந்துகொள்தல்

தியாகத் திருநாளின் மைய விடயமானது அல்லாஹ்வுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தை பலியிடுவதாகும். பின்னர் இந்த இறைச்சி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி குடும்பத்திற்கும், இன்னுமொரு பகுதி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், அடுத்ததாக ஏழைகளுக்காகவும் பகிர்ந்தளித்தக்கப்படும். குர்பானை பகிர்ந்து கொள்ளும் இந்த நடைமுறையானது தாராள மனப்பான்மை, பச்சாதாபம் மற்றும் பிறரைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது கொடுக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது, அங்கு தனிநபர்கள் ஒன்று கூடி, ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், பெருநாளன்று தங்களது உணவை சந்தோஷமாக புசிக்க வழிவகுக்கிறது. இந்த செயல் உறவுகளின் பிணைப்பை வலுப்படுத்துகிறது மற்றும் மற்றவர்களின் தேவைகளை கவனத்தில் கொள்ள தனிநபர்களை ஊக்குவிக்கிறது.


குடும்பங்களை தரிசித்தல் மற்றும் மீண்டும் இணைதல்

ஈதுல் அழ்ஹா என்பது குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் கூடிக் கொண்டாடும் நாளாகும். இந்நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று, வாழ்த்துகளைப் பரிமாறி, உணவைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த தரிசிப்புகள் மூலம் நெருங்கியவர்களுடன் மீண்டும் இணைவதற்கும், குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், மற்றும் அறுந்த உறவுகளை சீர்செய்வதற்கும் ஹஜ் பெருநாள் வாய்ப்பளிக்கிறது. அண்டை வீட்டாரும், சக ஊழியர்களும், தெரிந்தவர்களும் விருந்துகளில் கலந்துகொள்வது, அரவணைப்பு, அன்பு மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சூழலை உருவாக்குகிறது. முக்கியமாக இன்னும் சிலர் இந்நாளில் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களை பார்வையிட சென்று அங்கு மகிழ்ச்சியைப் பரிமாறவும், தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடியவர்களுக்கு சமூக உணர்வைக் கொண்டுவரவும் செய்கிறார்கள்.


கலாச்சாரப் பரிமாற்றம்

ஈதுல் அழ்ஹா என்பது முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாது பிறராலும் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில், பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் விருந்துகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்கின்றனர், மதங்களுக்கு இடையேயான மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான நல்லுறவை ஊக்குவிக்கின்றனர். முஸ்லிமல்லாத அண்டை வீட்டாரும் நண்பர்களும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் இதனால் பல்வேறு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் வளர்க்கிறார்கள். இந்த கலாச்சார பரிமாற்றமானது, ஒரு ஒற்றுமையான அழகான சூழலை உருவாக்குகிறது. தடைகளை உடைத்து, பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள தனிநபர்களிடையே சகோதரத்துவ உணர்வை ஊக்குவிக்கிறது.


எனவே ஹஜ்ஜுப் பெருநாளானது சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக செயல்படுகிறது. இந்நாளில் கூட்டுத் தொழுகை, குர்பானைப் பகிர்ந்தளித்தல், உறவுகளை நண்பர்களை சந்தித்தல் மற்றும் மீண்டும் இணைதல், தொண்டு செயல்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகியவை தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே வலுவான பிணைப்புகளை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றன. ஒற்றுமை, அன்பு மற்றும் தாராள மனப்பான்மை என்பவைகள் மூலம் இந்த நாள் இணக்கமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மற்றும் இங்கு வௌ;வேறு பின்னணியில் உள்ளவர்கள் ஒன்று கூடி மேலும் ஒருங்கிணைந்த உலகத்தை உருவாக்குகிறார்கள்.


No comments

Powered by Blogger.