Header Ads



பானிபூரி விற்று, பட்டினியாக தூங்கிய சிறுவன் சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவெடுத்தது எப்படி..?



- BBC -

ஐ.பி.எல். தொடரில் தனது சரவெடியான ஆட்டம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜெய்ஸ்வால், தற்போது இந்தியா- மேற்கு இந்திய அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி கடும் தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த தோல்வியில் இருந்து பாடம் எடுத்து இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக யஷஸ்வி, ருதுராஜ் ஆகியோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மிக உயர்தர ஆட்டங்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஐபிஎல் போட்டியில் வளர்ந்து வரும் வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.


தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்திருப்பதற்கு ஐபிஎல் தொடர் மட்டுமே காரணமல்ல, இதற்கு பின்னர் அவரது 10-12 வருட கடின உழைப்பும் உள்ளது.


களத்துக்கு உள்ளே மட்டுமல்ல , களத்துக்கு வெளியேயும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். எத்தகைய சவால்கள் வந்தாலும் சளைக்காமல் தனது இலக்கை அவர் அடைந்துள்ளார்.


யார் இந்த ஜெய்ஸ்வால்?

உத்தரபிரதேசத்தில் உள்ள பதோஹியைச் சேர்ந்தவர் ஜெய்ஸ்வால் . மும்பைக்கு வந்து, மைதானத்தில் கூடாரம் போட்டு வாழ்ந்து, பானிபூரி விற்று தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த புகழ்பெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் யஷஸ்வி ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.


2019ல் ஜார்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தனது 17 வயதில் அவர் பெற்றார்.


இதேபோல், 2020ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் யஷஸ்வி 400 ரன்களை குவித்திருந்தார். தொடர் நாயகன் வருதும் அவர் வசமானது. இதற்கான பலன் அதே ஆண்டில் கிடைத்தது. ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. 2022 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய் சம்பளத்துடன் அணியில் தக்க வைத்துக் கொண்டது.


முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால் அமோல் மஜும்தார் மற்றும் ரஸ்ஸி மோடியின் சாதனையை சமன் செய்தார். ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 91 சராசரியுடன் இந்த மைல்கல்லை கடந்துள்ளார்.


ரஞ்சி கோப்பையின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் சதம் அடித்துள்ள அவர், துலீப் டிராபியின் காலிறுதியிலும் இரட்டை சதம் அடித்தார்.


இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் முதல் மூன்று வீரர்களில் ஜெய்ஸ்வாலின் பெயரும் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவித்தார். தொடக்க ஆட்டக்காரரான அவர், முதல் பந்தில் இருந்தே தனது தாக்குதலை தொடங்கி எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.


கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் ஜெய்ஸ்வாலின் பங்கு உள்ளது, ஆனால், இந்த ஆண்டு அவரது ஆட்டம் `வெறித்தனம்` ஆக இருந்தது. 1 சதம், 5 அரைசதம் உட்பட 625 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது சராசரி 48.08 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 164ஆகவும் இருந்தது. மொத்தமாக 82 பவுண்டரிகள், 26 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் விளாசி இருந்தார்.


இந்திய அணிக்காக விளையாட வீரர்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


முதன்முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு 2020ல் கிடைத்தது. அதன் பின்னர் அவரது ஆட்டத்திறன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின், 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்களையும், 2022 தொடரில் 10 போட்டிகளில் 258 ரன்களையும் அடித்திருந்தார்.


இரண்டு சீசன்களிலும் , ஜெய்ஸ்வாலின் தொடக்கம் நன்றாகவே இருந்தது, ஆனால் விக்கெட்களை விரைவாக இழந்துவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், 2023 ஐபிஎல் தொடர் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றாலும் தனிஆளாக இருந்து 124 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். அவரது ஆட்டத்தை பார்த்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாயடைத்து போனார். ஆட்டம் முடிந்த பின்னர் தனது பேச்சில் ரோகித் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:


“ஜெய்ஸ்வால் இன்று மிகவும் மறக்கமுடியாத ஆட்டத்தை விளையாடினார். போட்டி முழுவதும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்கிருந்து இந்த பலம் வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். பல மணி நேரத்தை ஜிம்மில் செலவிடுவதாக அவர் கூறினார். இதே ஃபார்மை அவர் தொடர வேண்டும். இது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது, ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் நல்லது’’ என்றார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தின் கூற்றுபடி, "மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கூடாரம் போன்று ஜெய்ஸ்வால் மூன்று ஆண்டுகள் தங்கியுள்ளார். தொடக்கத்தில் பால் கடை ஒன்றில் அவர் தூங்கியுள்ளார். அதன்பின்னர் தூங்க இடம் இல்லாமல் கூடாரத்தில் தூங்கியுள்ளார். அப்போது அவருக்கு 11 வயதுதான். அவரின் கனவு முழுவதும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது மட்டுமே”


ஜெய்ஸ்வாலின் தந்தை பதோஹியில் சிறியளவில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதை வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துகொள்வது என்பது அவருக்கு கடினமாக இருந்தது. அதோடு, ஜெய்ஸ்வாலும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பினார். எனவே, அவர் மும்பை செல்ல முடிவெடுத்தப் போது அவருடைய தந்தை குறுக்கே நிற்கவில்லை.


மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால், வோர்லியில் உள்ள தனது உறவினர் சந்தோஷிடம் சென்றார். ஆனால், அவரது வீடு பெரிதாக இல்லாததால், ஜெய்ஸ்வால் அங்கு தங்க வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பால் கடையில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அதையும் பின்னர் விட வேண்டியதாயிற்று. எனவே அவர் முஸ்லிம் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களிடம் கேட்டு கூடாரத்தில் தங்க அனுமதி பெற்றார்.


ஆசாத் மைதானத்தில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் பானிபூரி விற்கும் வேலையை ஜெய்ஸ்வால் செய்து வந்தார். இதனால் அவருக்கு நல்ல பணம் கிடைத்தது. கிரிக்கெட் விளையாட பொருட்களை வாங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்கும் இந்த பணத்தை அவர் பயன்படுத்தினார்.


11 வயதாக இருக்கும்போதே, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. இந்த கனவு அவருக்கு உந்துதலை கொடுத்தது. இதற்கிடையே, மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த், ஜெய்ஸ்வாலை உன்னிப்பாக கவனித்துவந்தார்.


ஜெய்ஸ்வாலுக்கு ஜ்வாலா சிங் நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரின் வழிகாட்டுதலின் கீழ், ஜெய்ஸ்வால் தனது இலக்கை நோக்கி ஒரு வலுவான நகர்வை மேற்கொண்டார்.


மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் ஜெய்ஸ்வாலுக்கு வெறும் 17 வயதுதான்.


2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஜெய்ஸ்வால் மகேந்திர சிங் தோனியை நோக்கி கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.


சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அப்போது, சென்னை கேப்டன் தோனியும், ராஜய்ஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் டாஸ் போடுவதற்காக சென்றனர். டாஸ் போட்டு இருவரும் திரும்பியபோது, தோனியை பார்த்த ஜெய்ஸ்வால் அவரை கையெடுத்து கும்பிட்டார். தோனி அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்துவிட்டு சென்றார்.


துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு தனித்துவமான நடவடிக்கையை கொண்டு வந்தார், நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதும், நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதை காட்டும் விதமாக இது இருந்தது. ரஹானே தனது அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.


கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் மேற்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது. எப்படியும் வென்று கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசையில் மேற்கு மண்டலம் அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டல அணியை வலிமைப் பெற செய்த ஜெய்ஸ்வாலுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்தை கற்றுக் கொடுத்த முயன்றார் கேப்டன் அஜிங்க்யா ரஹானே.


ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது தென் மண்டலம் 154/6 என்று இருந்தது. 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு அவர்கள் முன் இருந்தது. மேற்கு மண்டலத்தின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை.


மேற்கு மண்டலத்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் பந்து வீசினர். இந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.


பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால், தென் மண்டல பேட்ஸ்மேன்களிடம் ஏதோ சொன்னது தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகார் அளித்தனர். மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் நடுவர்கள் விவாதித்தனர். அமைதியாக இருக்குமாறு ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே அறிவுறுத்தினார். அவரும் ஏற்றுக்கொண்டார்.


சிறிது நேரத்தில் பேட்ஸ்மேனுக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரஹானே தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற சொன்னார் ரஹானே. அவரும் கேப்டடன உத்தரவையடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். சில ஓவர்களுக்கு பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் களத்துக்குள் வந்தார். இந்த முறை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கிற்கு பதிலாக தூரத்தில் அவரை ஃபில்டிங் செய்ய வைத்தார் ரஹானே.


வீரரை விட ஆட்டம் பெரியது என்பதையும், விளையாடும்போது ஒருவர் வரம்புகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அன்று ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே புரிய வைத்தார்.

No comments

Powered by Blogger.