"பாதுகாப்பான முறையில் ஹஜ், உம்ரா செய்ய அடித்தளமிடப்பட்டமை"
அல்லாஹ்வின் உதவியால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இலட்ச்சம் பேர் வருடாந்தம் தங்களின் ஹஜ் கடமையினையும் உம்ராவினையும் நிரைவேற்கின்றனர் மிகவும் பாதுகாப்பான சூழலில் உயர்தகு ஏற்பாடுகளுடன் கூடிய அமைப்பில் இதற்கான வசதிகள் ஸவுதி அரேபியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல லட்ச்சம் பேர் கூடினாலும் அவர்களுக்குள் பயம் இல்லை கொலை கொள்ளைகள் நடந்துவிடும் என்ற அச்சம் இல்லை, இரவிலோ பகலிலோ விரும்பிய நேரத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தான் விரும்பும் இடத்திற்கு எந்தப் பயமும் இல்லாமல் சென்றுவர முடியுமான அச்சமற்ற நிலை மக்கா மதீனா என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. வழி தவறிக்கூட எவரும் சென்றுவிட மாட்டார்கள் எனும் அளவுக்கு மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன நிம்மதியோடும் நிறைவான அமைதியோடும் இப்புனித வணக்கம் நிறைவேற்றப்படுகின்றது. அங்கு இரவும் பகலும் சமம்தான் ஒரு கூட்டம் செல்ல இன்னொரு கூட்டம் சேரும், கஃபாவைச் சூழ எப்போதும் தவாப் நடந்துகொண்டே இருக்கும் உலகில் எத்தகைய அளிவுகள் வந்தாலும் அது நிறுத்தப்படுவதில்லை. கொரோனா பெருந்தொற்றின் போது கூட கஃபா வெறுமையாகவில்லை தவாபும் அதில் நடக்க வேண்டிய நல்லமல்களும் நடந்துகொண்டே இருந்தன.
அல்லாஹ் மக்கமா நகர் பற்றிச் சொல்லும்போது,
‘‘(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்” (2:157)
‘‘யார் அதில் நுழைந்தானோ அவன் பாதுகாப்புப் பெற்றவனாக இருப்பான்.’’ (397)
‘‘பாதுகாப்பான இடமாக அவர்களுக்கு நாம் ஹரத்தை வசப்படுத்திக் கொடுக்கவில்லையா? ’’ (அல்-கஸஸ் 97)
‘‘ஹரத்தை பாதுகாப்புப் பெற்ற அச்சமற்ற இடமாக ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா! ’’ (அல்-அன்கபுத் 67)
‘‘பாகாக்கப்பட்ட இந்த ஊரின் மீது சத்தியமாக’’ (அத்தீன் 3)
மக்காவை பாதுகாக்கப்பட்ட அச்சமற்ற இடமாக நிம்மதியாக வாழ்வதற்குரிய இடமாக மாற்றுமாறு இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. ‘‘எனது இறைவனே! இந்த இடத்தை பாதுகாப்புப் பெற்ற அச்சமற்ற இடமாக ஆக்குவாயாக என்று இப்றாஹீம் சொன்னதை ஞாபகப்படுத்துவாயாக.’’ (அல்-பகரா 126, இப்றாஹீம் 35)
அல்லாஹ்வால் இவ்வாறு ஆக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தின் அமைதியை சீர் குழைக்கும் விதத்தில் இஸ்லாமிய வரலாற்றில் அவ்வப்போது பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன, அங்கு அமைதியை இல்லாமல் செய்வதற்கும் , அச்சத்தையும் அசௌகரியத்தை ஏற்படுத்தவும் சில விடயங்கள் நடை பெற்றன ஆனாலும் அல்லாஹ் அவற்றை அழித்து அப்பிரதேசத்தை அமைதி மயமான பிரதேசமாக தொடர்ந்தும் பாதுகாத்துள்ளான்.
ஹி.317ல் ஷீஆக்களின் ஒரு பிரிவான கராமிதாக்கள் ஹஜ்ஜாஜிகளுக்கு எதிராக போர் தொடுத்தனர். பல்லாயிரம் ஹஜ்ஜாஜிகள் கொலை செய்யப்பட்டனர் பெண்கள் கற்பளிக்கப்பட்டனர், ஸம் ஸம் கிணற்றினை ஹஜ்ஜாஜிகளின் சடலங்களால் நிறப்பினர். ஹஜருல் அஸ்வதை துண்டு துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்றனர் சுமார் 22 ஆண்டுகள் ஹஜருல் அஸ்வதை அவர்கள் வைத்திருந்தார்கள் என்று வரலாறு சொல்கின்றது.
ஹி. 363ல் றூமி என்பவனால் ஹஜருல் அஸ்வத் துண்டாடப்பட்டது அது போன்று எகிப்தைச் சேர்ந்த ஒரு நாஸ்தீக வாதியும் ஹி 413ல் கஃபதுல்லாஹ்வில் குழப்பங்கள் செய்தான், அதுபோன்று ஹி. 1351ல் பாரசீகப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலரினாலும் ஹஜருல் அஸ்வத் உடைக்கப்பட்டது கஃபாவின் சீலை கிழிக்கப்பட்டது. அண்மைக்காலத்திலும் ஈரானிய ஹஜ்ஜாஜிகளினால் திட்டமிட்ட அடிப்படையில் அமைதியைக் குழைக்கும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஹஜ், உம்ரா கடமையை நிரைவேற்றுவதற்காக செல்லும் யாத்திரிகர்களின் பாதையும் மிகவும் அபாயம் நிரைந்ததாகவே இருந்தது சாதாரண சாப்பாட்டிற்காகவும் சில நாணங்களுக்காகவும் பலர் தங்கள் உயிர்களை பாலை வணங்களில் இழக்க வேண்டியிருந்தது அதிகம் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதில்லை, கஞ்சத்தணம் காட்டுவோர் காப்பாற்றப்படுவதில்லை என்றதொரு எழுதப்படாத சட்டம் காட்டரபிகளிடம் இருந்தது. ஹஜ்ஜாஜிகள் வழியில் சந்திக்கும் இவ்வாரான அபாய நிலைகள் தொடர்பில் பயண நூற்கள் எழுதிய பலரும் சுட்டிக்காட்டியும் சில நிகழ்வுகளை விரிவாகவும் எழுதியுள்ளார்கள். இப்னு ஜுபைர், அல்அப்தரி, இப்னு பதூதா போன்றோர் இதில் முக்கியமானவர்கள்.
அப்துல் அஸீஸ் எனும் ஒரு ரசிய சிப்பாய் தன்னுடைய ‘அர்ரிஹ்லா அஸ்ஸிர்ரிய்யா’ (ரகசியப்பயணம்) என்ற நூலில் விபரிக்கும்போது ‘‘கொலை கொள்ளை அபகரிப்பு என்பன சாதாரணமாக இந்த வழிகளில் நடக்கும் ஒன்றாகும் அதற்கு எந்தத் தடையும் இல்லை ஒவ்வொரு வருடமும் யாத்திரிகர்களிடம் உள்ள சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்களை கொலை செய்கின்றனர்.’’
‘மிர்ஆதுல் ஹரமைன்’ என்ற நூலில் றிப்அத் பாஷா அவர்கள் குறிப்பிடும்போது ‘‘காட்டரபிகள் ஹஜ்ஜாஜிகளிடமிருந்து உணவும் இறச்சியும் குடிபாணங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் அவர்களை மிகவும் அதிகமாகவே பாதுகாப்பார்கள் அவர்களின் பொருட்களை கவனித்துக்கொள்வார்கள். ஹாஜிகளின் நன்கொடைகள் அதிகரிக்கும் அளவுக்கு அவர்களின் பராமரிப்பும் அதிகமாக இருக்கும் ஆனால் யாத்திரிகர்கள் கஞ்சர்களாக இருப்பின் அவர்கள் எதுவும் கொடுக்காவிடின் நிலமை மிகவும் மோசமானதாக ஆகிவிடும்…’’
இவ்வாறு அரபு தீபகற்பத்திலே பொருளாதாரமும் பாதுகாப்பும் சீர் குழைந்து அடிமட்டத்திற்கு சென்று ஹாஜிகளைக் கூட விட்டுவைப்பதற்கு மனமில்லாதவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் ஸுஊத் பரம்பரையின் மூன்றாவது ஆட்ச்சி மன்னர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களினால் நிறுவப்பட்டது. ஹஜ்ஜாஜிகள் கூட பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலைக்கு பாதுகாப்பு பலவீனப்பட்டிருப்பதைக் கண்ட அவர் மிகவும் கவலையடைந்தார். குறிப்பாக மக்கா மதீனாவிலும் ஸவுதியின் ஏனைய பிரதேசங்களிலும் அச்சமற்ற சூழலை உருவாக்க உழைத்தார். அதற்காக பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார் குறிப்பாக கஃபதுல்லாஹ்வில் அமைதியைக் குழைப்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முன்னெடுப்பும் மிகவம் பாரிய தண்டனைகள் பெறத்தக்க முன்னெடுப்புக்களாக மாறின இவ்வாறு தொடர்ந்த அவரினதும் அவருக்குப் பின் வந்தவர்களினதும் அயராத உழைப்பினால்தான் அல்லாஹ்வின் உதவியால் அமைதியான சூழலில் நிம்மதியாக ஹஜ் உம்ராக்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
மன்னர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சி நிலைபெற்று ஸவுதியில் அச்சமற்ற சூழல் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு ஹஜ்ஜுக்கு சென்ற லெபனானிய எழுத்தாளர் அமீர் ஷகீப் அர்ஸலான் அவர்கள் அதை ‘அல் இர்திஸாமாத் ’ என்ற தனது நூலில் பின்வருமாறு விபரிக்கின்றார் ‘‘ஹாஜிகளின் வாகனங்கள் மக்காவிற்கும் ஜித்தாவிற்கும் இடையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்தன எந்தக் கஸ்டங்களையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. அச்சமற்ற நிலையில் இவ்வாறு இதற்கு முதல் இருந்ததே இல்லை, ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் முழுப் பாதுகாப்பும் இருந்தது இப்னு ஸுஊதின் கொடி பறக்கும் ஸவுதியின் எல்லா இடங்களிலும் இவ்வாறான பாதுகாப்பு நிலைபெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் வேறு எதைச் செய்யாவிட்டாலும் ஹாஜிகளுக்கு இவ்வாரான ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்ததே அவர்களின் புகழுக்கு போதுமானதாகும். அந்தப் பயணத்திலே ஒரு கறுத்த பெரிய போர்வை வழியில் கிடந்தது அதை எவரும் நெருங்கவில்லை. குறிப்பாக அந்த இடம் இதற்கு முன்னர் கொலைகளும் கொள்ளைகளும் நடை பெற்ற இடம் அதனால் செல்பவர்கள் ஆயுதங்களுடன்தான் செல்வார்கள். ஆனாலும் அந்தப் போர்வையை எடுப்பதற்கு எவரும் நெருங்காதது ஆச்சரியத்தைத் தந்தது பாதையில் செல்பவர்களுக்கு அது இடையுராக இருந்ததால் தாயிபின் கவர்னருக்கு அறிவிக்கப்பட்டு அவருடைய உத்தரவின் பேரில் அவரது ஊழியர்களால் அது அகற்றப்பட்டது.’’
ஸவுதியில் அல்லாஹ் மாத்திரம் வணங்கப்படுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது இணைவைப்பும் இணைவைப்புக்கு இட்டுச் செல்லும் காரியங்களும் அகற்றப்பட்டன அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அந்த நாட்டைப் பாதுகாக்க தற்போதய ஆலு ஸுஊத் ஆடச்சியை ஏற்படுத்தினான். இவ்வாறு ஸவுதி அரேபியாவின் இந்தப் பாதுகாப்பான சூழலுக்குப் பின்னால் பல வரலாறுகள் மறைந்துள்ளன அது தொடர்பில் பலரும் பல நூற்களை எழுதியுள்ளார்கள் இது தொடர்பில் விரிவாக வாசிக்க விரும்புபவர்கள் அந்த நூற்களை வாசிக்கலாம்.
அங்கு நிலவும் இந்தப் பாதுகாப்பான சூழல் இன்று போல் என்றும் நிலைத்திருக்க அல்லாஹ் உதவுவானாக. ஆமீன்.
By: M.B.M. இஸ்மாயில் (Madani)
குறிப்பு இது உஸ்தாத் அஸ்அத் அஃழமி என்பவரினால் எழுதப்பட்ட ‘‘அம்னு துருகில் ஹுஜ்ஜாஜ் பைனல் மாழி வல் ஹாழிர்’’ என்ற அரபி மொழியிலான ஆக்கத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
Post a Comment