அரபு நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அமெரிக்காவின் பிடி தளர்ந்துவிட்டதா..?
சௌதி அரேபியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் 7 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்துகொண்டனர்.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவ்விரு நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பல ஆண்டு பகைமையை மறந்து மீண்டும் தங்களுக்கு தூதரக உறவுகளை புதுப்பித்துக்கொண்டனர். இது உலக நாடுகளின் புருவங்களை உயரச் செய்தது.
இந்த சமாதானத்திற்கு பின்னணியில் சீனா உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான சந்திப்புகள் சீனாவால் நடத்தப்பட்டு மத்தியஸ்தம் செய்யப்பட்டன.
இதனுடன் சேர்த்து மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் சீனாவின் போக்கு குறித்த விவாதங்கள் தொடங்கி தற்போதும் தொடர்ந்து வருகின்றன.
சௌதி அரேபியா- ஈரானை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியை சீனா தொடங்கியுள்ளது.
வியாழனன்று, சீனப் பிரதமர் லீ கெகியாங், பாலத்தீன தலைவர் முகமது அப்பாஸைச் சந்தித்தார்.
முகமது அப்பாஸை "சீனாவின் பழைய நண்பர்" என்று விவரித்த லீ , அவர் "சீனா-பாலத்தீன உறவுகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்." என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக புதன்கிழமை, சீன அதிபர் ஷி ஜின்பிங் பெய்ஜிங்கில் முகமது அப்பாஸை சந்தித்து பேசியபோது, இரு தலைவர்களும் தங்களுக்கு இடையே ஒரு ராஜ்ய ரீதியிலான கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சீன அரசு ஊடகங்களின்படி, அப்பாஸுடனான தனது சந்திப்பின் தொடக்கக் கருத்துகளில், "பாலத்தீனியர்கள் தங்கள் நியாயமான தேசிய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நியாயமான காரணத்தை" சீனா ஆதரிப்பதாகவும், பாலத்தீனம் உள் நல்லிணக்கத்தை அடைய சீனா உதவும் என்றும், அமைதியை மேம்படுத்த உதவுவதில் பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாகவும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.
முன்னதாக, சீனாவில் அப்பாஸுக்கு முழு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்பினரும் ஒரு "ராஜ்ய ஒப்பந்தம்" பற்றி பேசினர்.
மார்ச் மாதத்தில், சௌதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான சௌதி அராம்கோ சீனாவில் பல பில்லியன் டாலர் முதலீட்டை அதிகரிப்பது மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவது தொடர்பான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களை அறிவித்தது. டிசம்பரில், சீன அதிபர் ஷி ஜின்பிங் சீன நாணயமான யவானில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து பேசினார்.
சீனாவுடன் நாங்கள் ஒத்துழைப்பை விரும்புகிறோம், போட்டியை அல்ல என்று சௌதி தெரிவித்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் மேற்கத்திய சந்தேகங்களை தான் புறக்கணித்துவிட்டதாக குறிப்பிட்டதாக செய்தி முகமையான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராக சௌதி உள்ளது, மறுபுறம் உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோராக சீனா உள்ளது. இந்த இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஹைட்ரோகார்பனை அடிப்படையாகக் கொண்டவை. அரசியல் உறவுகள் சூடு பிடித்து வருவதற்கு மத்தியில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் சௌதி அரேபியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பும் ஆழமடைந்துள்ளது.
சீனா தனது வழியை மாற்றி வருகிறது
சீனாவின் ஆதிக்கம் இதுவரை பொருளாதார துறையில் உள்ளது. பல நாடுகளுடன் சீனா வர்த்தகம் செய்துவருவதோடு பல நாடுகளில் முதலீடும் செய்துள்ளது. மிகப் பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது சீனா தன்னை பற்றிய பிம்பத்தை மாற்ற முயற்சிப்பதாக ஐ.சி.டபிள்யூ.ஏ. மருத்துவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் நம்புகிறார்.
“ஒரு பொருளாதார சக்தியாக மட்டுமே வாழ முடியாது என்று சீனா உணரத் தொடங்கியுள்ளது. அரசியல், ராஜதந்திரம் மற்றும் புவிசார் அரசியலை கலக்காத வரையில், உலக வல்லரசாக மாற முடியாது என்பதை அமெரிக்காவிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டனர்" என்கிறார் அவர்.
தனக்காக சீனா எடுத்துக்கொள்ளும் அமெரிக்க மாடல் இது என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றடைந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க மூத்த தலைவர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை. அதே நேரத்தில், பைடன் 2021 இல் அதிபரான பிறகு சீனாவைச் சென்றடைந்த அவரது அமைச்சரவையின் முதல் அமைச்சர் பிளிங்கன் ஆவார்.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மிக மோசமான நிலையில் உள்ளது. தைவானுக்கு ஆதரவு அளிப்பது, ஆசியா மற்றும் பிற இடங்களில் தனது செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடுவது போன்றவை உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.
இதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்தும் அமெரிக்கா விலகிச் சென்றுள்ளது. முன்பு காட்டியது போன்ற ஆர்வம் தற்போது இல்லை. மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா கவனம் செலுத்தி வந்ததால், சீனா விலகியே இருந்தது.
ஜேஎன்யுவில் பேராசிரியராக உள்ள ஸ்வரன் சிங் கூறுகையில், “இப்போது அமெரிக்காவின் கவனம் ஐரோப்பா, உக்ரைன் போர் மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக இருக்கும் போது, சீனா மத்திய கிழக்கில் ஆர்வமாக உள்ளது. சௌதி அரேபியாவோடும் ஈரானோடும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது போலவே பாலஸ்தீனத்துடனும் உறவுகளை அதிகரிக்கவும் அவர்களுக்கு உதவவும் சீனா விரும்புகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்னையைப் பொறுத்த வரையில், அமெரிக்கா இஸ்ரேலுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அது மேலும் மேம்பட்டுள்ளது, ஆனால் பாலஸ்தீனத்துடனான அதன் உறவுகள் நன்றாக இல்லை." என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் சீனாவின் உறவுகள் நன்றாக உள்ளன, மேலும் ஒப்பீட்டளவில் சீனா இந்த விவகாரத்தில் புதியவர் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நேர்மறையான உரையாடலை எளிதாக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
அமெரிக்காவை விட சீனாவை நம்புவது பாலஸ்தீனியர்களுக்கு எளிதாக இருக்கும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எளிதானது அல்ல என்றாலும் சீனாவால் அவ்வாறு செய்ய முடியும் என்று மருத்துவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் நம்பினாலும், அது கடினமாகத் தெரிகிறது.
மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் சார்பு குறைந்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பியதற்கு எண்ணெய் மற்றும் இஸ்ரேல் இவை இரண்டும் காரணமாக இருந்தது. இப்போது இந்த இரண்டுமே அந்தளவு முக்கியமில்லை என்று மருத்துவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
ஈடுபாடு காட்டவில்லை என்று அமெரிக்கா கூறினாலும் அது முழுமையாக விலகிச் செல்லவும் இல்லை. மத்திய கிழக்கு ஆசியாவில் இன்னும் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அது விரும்புகிறது.
ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் சீனாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளன.
இது தொடர்பாக ஃபஸ்ஸூர் ரஹ்மான் குறிப்பிடும்போது, "அவர்கள் அமெரிக்காவைப் பார்த்திருக்கிறார்கள், அமெரிக்காவில் வாழும் போது அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்." என்கிறார்.
சீனா தனக்கான பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க முயற்சிக்கிறது, எனவே சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா அறிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வரன் சிங் நம்புகிறார். ஆனால் இது பெரிய கவலை இல்லை, ஏனெனில் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது.
சிங் கூறுகையில், “இந்தியா அங்கு நல்ல உறவை உருவாக்கியுள்ளது. ஒருவருக்கொருவர் நட்பு கொள்ளாத நாடுகள் கூட, இந்தியாவுடன் உறவைப் பேண விரும்புகின்றன, அவற்றில் இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா ஆகியவை அடங்கும். நான்கு நாடுகளின் குழுவில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்திருக்கலாம்."
"சீனாவைப் போல முதலீடும் பணமும் இந்தியாவிடம் இல்லை என்பதில் இந்தியாவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்ல அரசியல் மற்றும் சமூக உறவுகளை இந்தியா வைத்திருப்பது சாதகமாக பார்க்கப் படுகிறது." BBC
சீன இந்திய ஒப்பீடு மலைக்கும் மடுவத்துக்குமானது. ஏனென்றால் சீனா உலக வல்லரசு. இந்தியாவோ இன்னும் மாட்டின் பிறப்புறுப்பில் கடவுளை தேடுகின்றது
ReplyDelete