Header Ads



வெட்கக்கேடான முயற்சியில் ஈடுபடும் அரசாங்கம்


உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை காலவரையின்றி நீடிக்கவும், ஏற்கனவே கலைக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் வெட்கக்கேடான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான தனிப்பட்ட சட்டமூலமாக ஜூன் 23ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


“உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், விசேட சூழ்நிலையில் உள்ளுராட்சி அதிகார சபையின் பதவிக் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கு விடய அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும், காலவரையறையின்றி பதவிக் காலத்தை நீடிக்க அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த குறிப்பிட்ட திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட ஒரு உள்ளூராட்சியை மீண்டும் அமைக்கவும் இது முன்மொழிகிறது,” என்றார்.


இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், மக்கள் ஆணையை தேவைப்பட்டால் குறைக்கலாம் ஆனால் எந்த காரணத்திற்காகவும் நீடிக்க முடியாது என்பதை முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலின் முடிவுகள் தனது அடுத்த ஜனாதிபதி கனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை ஒத்திவைத்துள்ளதாகவும், மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவைப் பெறுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் பதவியில் அமர்த்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்தகைய நடவடிக்கையை தோற்கடிக்க மக்கள் விடுதலை முன்னணி ஒவ்வொரு அடியையும் எடுக்கும் என்றார்

No comments

Powered by Blogger.