Header Ads



இந்திய முஸ்லிம்களின் நிலை - அமெரிக்காவில் மோடிக்கு இருந்த சங்கடங்கள்


- BBC -


அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த அந்நாட்டு செய்தியாளர்களின் கேள்விகளை அவர் எதிர்கொண்டார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றது மிகப்பெரிய விஷயம் என்று பைடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்தார்.


"இந்திய பிரதமர் மோடி அவரது சுற்றுப்பயணத்தின் கடைசிப் பகுதியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பார். அதற்காக அவருக்கு நன்றி. இது முக்கியமான ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோன்ற கருத்தை அவரும் கொண்டிருப்பதை எண்ணி மகிழ்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.


இந்திய முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கு மோதி என்ன சொன்னார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியாளர் சபரினா சித்திக், இந்திய பிரதமர் மோதியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.


"முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை வலுப்படுத்தவும், கருத்துரிமையை உறுதி செய்யவும் நீங்களும், உங்கள் அரசும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறீர்கள்?" என்று மோதியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.


பெர்னி சாண்டர்ஸ் விமர்சனம்

ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவரும், அடுத்த அதிபருக்கான போட்டியில் இருப்பவருமான பெர்னி சாண்டர்சும், இந்தியாவில் மத சிறுபான்மையினரின் நிலை குறித்து மோதியிடம் ஜோ பைடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.


"பத்திரிகை மற்றும் சிவில் சமூகம் மீது மோதி அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துள்ளது. இந்து தேசியவாதத்தை மிகத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கான இயங்குவெளி வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது. மோதியுடனான சந்திப்பின் போது அதிபர் பைடன் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் மோதி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய விரிவான கடிதம் ஒன்றை அதிபர் ஜோ பைடனுக்கு பராக் ஒபாமா, பெர்னி சாண்டர்ஸ் உள்பட ஜனநாயகக் கட்சியின் 75 தலைவர்கள் கூட்டாக எழுதியுள்ளனர்.


அமெரிக்காவின் முன்னணித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களும் இதில் அடங்குவர்.


ஜனவரி 20-ம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், "அமெரிக்கா - இந்தியா இருதரப்பு உறவு என்பது பொதுவான நலன் அடிப்படையிலானதாக இருக்கக் கூடாது. ஜனநாயகம் போன்ற பொது விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த தலைவர்களில் சிலர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதி உரையை புறக்கணித்தனர்.


நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதியின் உரையை புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கி அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டிரியா ஒகோஸியோ கார்டெஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அவருடன், மற்றொரு முக்கிய தலைவரான இலான் ஒமர் என்பவரும் பிரதமர் மோதி உரையை புறக்கணித்துள்ளார். "மோதி அரசு மத சிறுபான்மையினரை ஒடுக்குகிறது. இந்து தேசியவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர். அத்துடன், பத்திரிகையாளர்கள், மனித உரிமை குறித்து கேள்வி எழுப்புவோரையும் மோதி அரசு குறி வைத்துள்ளது. அவரது பேச்சைக் கேட்க நான் அவைக்குப் போக மாட்டேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


ரஷிதா தலெப் என்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரோ, "நம் நாட்டின் தலைநகரில் மோதிக்கு இப்படியொரு வாய்ப்பு தரப்பட்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். மனித உரிமை மீறல்கள் முதல் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் வரை மோதி அரசுக்கென நீண்ட வரலாறு இருக்கிறது. முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினரை குறிவைப்பது, பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்குவது என அது பல வகையிலும் இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க நாடாளுமுன்றத்தில் மோதி உரையை நான் புறக்கணிக்கிறேன்." என்று ட்வீட் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.