கொழும்பில் குர்பான் கொடுக்க இருப்பவர்களின் கவனத்திற்கு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
குர்பான் விடயத்தில் மாடுகளை அறுப்பதற்கு முழுமையான தடை உத்தரவு வழங்கப்படுமாயின் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் மாற்று வழிகளைக் கையாள தீர்மானித்துள்ளதாக சம்மேளத்தின் முன்னாள் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
மாடுகளை கூட்டுக்குர்பானுக்கு ஏற்பாடு செய்துள்ள கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் இறுதி நேரத்தில் அதற்கான தடைகள் ஏற்படுமாயின் ஆடுகளை வழங்குவதற்கு பங்களிப்பு செய்யுமாறு கூட்டுக் குர்பானுக்கு பதிவு செய்துள்ளவர்களைக் கோரியுள்ளது.
மஸ்ஜித் சம்மேளனம் தற்போது கூட்டுக்குர்பானுக்காக இணைய வழி (ஒன்லைன்) ஊடாக 28 ஆயிரம் ரூபாவுக்கு டிக்கட் விற்பனை செய்கிறது. மாடு அறுப்பதற்கு தடைகள் ஏற்படுமாயின் மேலதிகமாக 8 ஆயிரம் ரூபா செலுத்தி 35 ஆயிரம் ரூபாவுக்கு ஆடு குர்பான் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்றேல் செலுத்தப்பட்ட பணம் மீளக் கையளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாடுகளை அறுப்பதற்கு தற்போது நிலவுகின்ற சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வெளிமாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் எந்தப்பாதிப்பும் ஏற்படாதவண்ணம் மாடுகளை அறுப்பது சாத்தியமாக காணப்படுவதாகவும் அஸ்லம் ஒத்மான் கூறினார்.
மேலும் குர்பானுக்காக மாடுகளை அறுக்கும் விடயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களம் மற்றும் அதிகாரிகள் எவ்வித உத்தியோகபூர்வமான அறிவிப்புகளையும் விடுக்காமை முஸ்லிம்கள் மத்தியில் குர்பான் மிருகம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளமுடியாத நிலைமையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli
Post a Comment