வரலாற்றிலும், மக்களின் மனதிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள ஜாமியா நளீமியா
இவ்வுயர் கல்வி நிறுவனம் 1973ஆம் ஆண்டு, இலங்கை முஸ்லிம்களின் முன்மாதிரியான அல்-ஹாஜ் நளீம் அவர்களால் நிறுவப்பட்டது. அது முஸ்லிம் மாணவர்களுக்கு விரிவான மற்றும் ஆழமான மார்க்கக் கல்வியை வழங்கும் நிறுவனமாகவும், இளந் தலைமுறையினரை இஸ்லாமிய கற்கைகள் நோக்கி தூண்டக் கூடிய ஒரு சக்தியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
சிறந்த இஸ்லாமிய மார்க்க அடித்தளத்தையும், ஒழுக்க விழுமியங்களால் நிரம்பிய மற்றும் பலதரப்பட்ட துறைகளில் நிபுனத்துவத்தையும் பெற்ற ஒரு தலைமுறையை உருவாக்குவதை நோக்காக கொண்டு இந்நாள் வரை இந்நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய கற்கைகள் மூலம் பெற்றுக் கொள்கின்ற ஆழமான அறிவோடு சேர்த்து உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான சமூகவியல் கற்கைகளிலும் அவர்களை தயார்படுத்தும் தளமாக இருக்கிறது.
சாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்து உயர்தரப் பரீட்சை வரையுள்ள மூன்று வருடங்களும் விஷேட பட்டப்படிப்புக்கான நான்கு வருடங்களும் உள்ளடங்களாக மொத்தம் ஏழு வருட கற்கையை நளீமியா, மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த காலப்பகுதி ஒரு மாணவரின் முக்கியமான, வாழ்க்கையை மாற்றியமைக்கும் காலப்பகுதியாக இருக்கிறது எனவே இக்காலப்பகுதியை வளப்படுத்தும் நோக்குடனே இந்நிறுவனத்தின் கல்வித்திட்டம் வடிவமைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ஜாமியா நளீமியாவில் முதல் மூன்று ஆண்டுகளும் அடிப்படைக் கற்கை நெறிகள் பிரிவால் மாணவர்கள் அரபு உட்பட ஏனைய மூன்று மொழிகளிலும் மற்றும் இஸ்லாமிய மார்க்க நெறியின் அடிப்படை விடயங்களிலும் சிறப்பாக தேர்ச்சிப்படுத்தப்பட்டு இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடத்தின் நான்கு வருட பட்டப்படிப்புக்கு தயார் படுத்தப்படுகிறார்கள்.
நளீமிய்யாவின் பாடத்திட்டமானது இஸ்லாமிய கற்கை நெறிகளோடு சேர்த்து மாறிவரும் காலத்துக்கேற்றவாறு நவீன கற்கைகளையும் உட்பொதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அல்-குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய சட்டவியல், இஸ்லாமிய வரலாறு மற்றும் அரபு மொழி போன்றனவும் இவற்றுக்கு மேலதிகமாக சமாதானக் கற்கைகள் மற்றும் இலங்கையின் பிரதான நான்கு மதங்கள் பற்றிய கற்கை போன்ற நவீன சமூக விஞ்ஞான கற்கைகளுடன் தொடர்பான பாடங்களும், அரபு, தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
நவீன உலகில் விமர்சன ரீதியான சிந்தனை, ஆராய்ச்சித் திறன் மற்றும் அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்புவதன் மூலம், இஸ்லாத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்தல் என்ற சிந்தனையோடு சேர்த்து நடு நிலைச் சிந்தனையையும் ஜாமியா நளீமியா ஊக்குவிக்கிறது.
நளீமிய்யாவில் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் பாடங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன, அவர்கள் வெறுமனே கற்பித்தலைச் செய்யாமல் மாணவர்களுக்கான வழிகாட்டிகளாகவும் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு மாணவரினதும் தனிப்பட்ட அறிவு, பண்பாட்டு சார் வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியில் பங்களிக்கின்றனர்.
கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு அப்பால், ஜாமியா நளீமியா பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய ஆளுமை உருவாக்கம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதேநேரம் பரஸ்பர அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் நெகிழுந்தன்மை போன்ற விடயங்களையும் மாணவர் மத்தியிலும் சமூகத்திலும் அதிகமாக ஊக்குவிக்கிறது. இந்நிறுவனம் மாணவர்களை சமூக நலச் செயல்பாடுகள், மதங்களுக்கிடையேயான இணக்கப்பாட்டு முயற்சிகளில் பங்கேற்றல் மற்றும் புரிந்துணர்வுடன் கூடிய சூழலை வளர்த்தல் போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
ஜாமியா நளீமியாவில் பட்டம் பெற்று வெளியேறிய பல மாணவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு சென்று வெவ்வேறு துறைகளில் கலாநிதி, முதுமானி மற்றும் இளமானி பட்டங்களை பெற்றிருக்கின்றனர். இதுவரை ஜாமியா பட்டதாரிகளில் 27 பேர் கலாநிதிகளாக பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பயிற்றுனர்கள், விரிவுரையாளர்கள், உயர்ஸ்தானிகர்கள், வழக்கறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்களாக சமூகத்தினருக்கு பல சேவைகளை செய்து வருகின்றனர். இவர்களது சேவைகள் மற்றும் புகழ் இலங்கைக்கு அப்பாலும் பரந்து விரிந்துள்ளன. உலகின் பல பாகங்களிலும் இவர்கள் அறிவு மற்றும் புரிந்துணர்வை போதித்து வளர்க்கக் கூடியவர்களாக உள்ளனர்.
மேலும், ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் அதன் பட்டதாரிகளால் வெளியிடப்படுகின்ற சஞ்சிகைகள் மூலம் இஸ்லாத்தின் வளமான அறிவுசார் பாரம்பரியத்தை ஆராய்வதில் ஆர்வமுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான ஒரு மையமாக மாறியுள்ளது.
கல்விசார் தேர்ச்சி, ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சமூக சேவைக்கான ஜாமியா நளீமியாவின் அர்ப்பணிப்பு இலங்கைக்குள்ளும் சர்வதேச அளவிலும் பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ளமை முக்கியமான விடயமாகும். நளீமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பானது சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கத் தகுதியுள்ள, நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நிறுவனம் தயார் செய்வதற்கும், நிறுவனத்தின் வெற்றிக்கும் ஒரு பக்க பலமாக இருந்து வருகிறது.
எனவே எல்லாம் வல்ல இறைவனின் அருளுடன் இந்த ஆண்டு ஜாமியா நளீமியா 50 வருடங்களை நிறைவு செய்து இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் மக்களின் மனதிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. ஜூன் 24 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பல பிரபலமான தேசிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அதன் பொன்விழா மற்றும் பொது பட்டமளிப்பு விழாவை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- காலித் ரிஸ்வான் -
Post a Comment