இலங்கை தொடர்பில் வருத்தப்படும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், தமது பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்புகளை பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தசாப்தத்தில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை ஊக்குவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான செயற்குழுவின் அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Post a Comment