சமூகத்தை தோல்வியுறச் செய்ததால், முஸ்லிம் அரசியல் கட்சிகளை கலைத்துவிட வேண்டியதுதான்
- லத்தீப் பாரூக் -
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றை கடத்தி வந்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டது முதல் முஸ்லிம் என்ற பெயர் தாங்கியுள்ள எல்லா கட்சிகளையுமே கலைத்து விட வேண்டும் என்ற கருத்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மேலோங்கத் தொடங்கி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் எல்லா நிகழ்வுகளின் போதும் இதுவே பிரதானமாகப் பேசப்படும் தலைப்பாகவும் மாறி உள்ளது. தற்போது மூழ்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிவில் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும், முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் ஏற்படுத்தியுள்ள சேதங்களையும் கருத்திற் கொண்டு அந்தக் கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஊழல் மிக்க ஒரு சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் முஸ்லிம் விரோத சக்திகள் தமது இனவெறி நிகழ்ச்சி நிரலுக்கு எற்ப இந்த சக்திகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
2015 முதல் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகி வந்த நிலையில், அரசியல் யாப்பின் 20வது திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்த போது முஸ்லிம் சமூகம் கொதிப்படைந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி வந்த ஒரு ஜனாதிபதியின் கரங்களையே தாங்கள் பலப்படுத்துகின்றோம் என்பதை நன்கு உணர்ந்த நிலையில் அவர்கள் 20வது திது;தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையே முஸ்லிம்களின் ஆத்திரத்துக்கு காரணமாயிற்று.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆதரவற்ற் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் விற்பனை செய்கின்றோம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் தமது சொந்த நலன்களுக்காக தம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் சேர்த்தே விற்பனை செய்தனர். இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால் அவர்கள் இன்னமும் அரசியலில் இருக்கின்றனர். சமூகத்தால் கேலி செய்யப்பட்ட நிலையிலும் அவர்கள் தங்களை தொடர்ந்து முஸ்லிம்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதல் இதுதான் நடைமுறையாக இருந்து வருகின்றது. அன்றே ஒரு பௌத்த தேரர் கூறினார் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரபின் அகால மறைவுக்குப் பின் அந்தக் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி உருவானது. இந்தப் போட்டியால் ஏற்பட்ட பிளவுகளை சிங்கள அரசியல்வாதிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஒரு குழுவுக்கு எதிராக இன்னொரு குழு என்ற போட்டி நிலையை உருவாக்கி ஊக்கப்படுத்தினர்.
இரு சமூகங்களுக்கும் கேடுகளை விளைவிக்கும் வகையில் இன்றும் இந்த நிலை தொடருகின்றது.
ஆனால் இன்று இந்த ஊழல்மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதை சகல தரப்பையும் சேர்ந்த முஸ்லிம்கள் உணரத் தொடங்கி உள்ளனர். முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய எந்தவொரு முஸ்லிம் கட்சிக்கும் இனிமேல் தாங்கள் வாக்களிக்க் கூடாது என்று அவர்கள் இப்போது பகிரங்கமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக தமது நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தின் பெயரால், சமூகத்தைக் காட்டிக் கொடுத்து தனிப்பட்ட ரீதியில் சொத்துக்களைக் குவித்துக் கொள்ளவும், சமயத்தை காட்டிக் கொடுக்கவும் துணிந்து விட்டனர் என்று சமூக மட்டத்தில் இப்போது வெளிப்படையாகப் பேசப்படுகின்றது.
இவ்வாறானதோர் இருண்ட சூழலின் பின்னணியில் தான் முஸ்லிம் கட்சியொன்றை சேர்ந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றியின் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசி கடத்தலும் பிடிபட்டது. இங்கு அவர் இந்த நாட்டின் சட்டங்களை மட்டும் மீறவில்லை. இஸ்லாத்தின் சட்டங்களையும் அப்பட்டமாக மீறி உள்ளார். இஸ்லாத்துக்கு விரோதமான போக்கில் இல்லாதவரைக்கும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கின்றது.
இந்த வெட்கக் கேடான சம்பவத்தை அகில இலங்கை உலமா சபை மிக வன்மையாகக் கணடிக்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்ப்பார்த்தது. ஆனால் மிக உயர் நிலையில்; தனிநபர் மயப்படுத்தப்பட்டுள்ள, அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள, வர்த்தக மயப்படுத்தப்பட்டுள்ள தனிநபர் காட்சி மன்றமான உலமா சபை அவ்வாறு செய்யவில்லை. கடந்த கால் நூற்றாண்டு காலமாக இதுபோன்ற விடயங்களில் அவர்கள் தவறியே வந்துள்ளனர்.
உலமா சபையிடம் இருந்து இதுவொன்றும் எதிர்ப்பார்க்கப்படாத விடயமும் அல்ல. தனது கடந்தகால தவறுகளால் சமூகம் மிகவும் கஷ்;டமான நிலைமைகளுக்கு தள்ளப்பட்டமைக்காக நன்கு அறியப்பட்டவரே அதன் தலைவர். மறுபுறத்தில் உலமா சபையின் தலைவர் அரசியல் வாதிகளுடன் கொஞ்சிக் குலாவுவதை பெரிதும் விரும்புபவர், சில பொது வைபவங்களிலும் கூட முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட, இஸ்லாத்தை அவமானப்படுத்திய, குர்ஆனை எரித்த சிங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் கம்பீரமாக வீற்றிருப்பதையும் மிகவும் பெருமைக்குரியதாக கருதுபவர்.
உலமா சபைக்குள் மிகத் தீவிரமான மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை சமூகம் பரவலாக நம்புகின்றது. கீர்த்திமிக்க கல்விமான்களும் துறைசார் நிபுணர்களும் உள்வாங்கப்பட்டு இஸ்லாம் அதன் உண்மை வடிவில் பிரதிபலிக்கப்பட்டு சமூகத்துக்கு வழி காட்டப்பட வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலும் இது சரியான முறையில் எடுத்துரைக்கப்பட்டு இரு சமூகங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.
ஆகவே சமூகத்துக்கு கல்விமான்களும் துறைசார் நிபணர்களும் தேவைப்படுகின்றனர். அவர்கள் மூலம் இஸ்லாத்தின் தூது சரியான முறையில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
மறுபுறத்தில் இதுவரை எந்தவொரு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் இந்த கடத்தல் சம்பவத்தை இதுவரை கண்டித்ததாகத் தெரியவில்லை. இது முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி ஒரு புறம் இருக்க, சமூகத்துக்குள் ஏற்பட்டுள்ள சமய மற்றும் தார்மிக ரீதியான வங்குரோத்து நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது முதல் மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகள் பூகோள மற்றும் பிராந்திய ரீதியான முஸ்லிம் விரோத சக்திகளுக்கு நாட்டின் கதவுகளைத் தாராளமாகத் திறந்து விட்டுள்ளன என்பதை சமூகம் உணரத் தவறி உள்ளது. அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சக்திகள் அவற்றோடு கைகோhத்துள்ள எமது அண்டை நாட்டை சேர்ந்த இந்துத்வா சக்திகள் என்பனவற்றுக்கு இஸ்லாமோபோபியா எனப்படும் இஸ்லாம் மீதான அச்சம் என்பதும் அதைப் பரப்புவதும் பில்லியன் கணக்கான டொலர் பணம் புரளும் வியாபாரமாக மாறி உள்ளது. இவ்வாண்டில் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கான உலக வரவு செலவுத் திட்ட ஒதுக்குத் தொகை சுமார் 350 பில்லியன் டொலர்களாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான சொந்த நிகழ்ச்சி நிரல் உள்ளது. இதில் இலங்கைக்கு எந்த விதமான விதிவிலக்கும் கிடையாது. கடந்த கால சம்பவங்கள் இதை கண்கூடாக உணர்த்தி உள்ளன. இது சமூகங்களை மட்டும் அன்றி நாட்டையும் துண்டு துண்டாக்கக் கூடியது. யுடியுப் போன்ற சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் திடீர் அதிகரிப்பும் இதை உணர்த்துவதாகவே உள்ளன. இவர்கள் மூலம் இப்போது இஸ்ரேலின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டு பலஸ்தீன மக்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சமூகம் விழிப்போடு இருக்காவிட்டால் அண்மைக்காலங்களில் நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் இடம்பெறலாம். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை அடுத்து பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்திருந்த இனவாத சக்திகள் தற்போது மீண்டும் அரங்கத்தில் தலைகாட்டத் தொடங்கி உள்ளமை இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.
Post a Comment