குர்பானுக்கு என்ன நடக்கும்...?
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் சமயக் கடமைகளில் தொடராக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கொவிட் 19 தொற்று பரவிய காலகட்டத்தில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுவதில் நாம் பல கட்டுப்பாடுகளை, சிரமங்களை எதிர்கொண்டோம். புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கும் பல சுகாதார விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டன.
இவ்வாறான நிலைமை சீரடைந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்டுமொரு சவாலை எதிர்கொண்டுள்ளது. முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. தியாகத்தை நினைவு கூறும் இப்பெருநாள் குர்பானுடன் தொடர்புபட்டதாகும். முஸ்லிம்கள் குர்பானுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் மாடுகளுக்கு அம்மை நோய் (Lumpy Skin Disease) வேகமாகப் பரவியுள்ளது. இந்நோய் காரணமாக பல மாடுகள் இறந்து போயுள்ளன.
இந்நோய் தொற்று காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் உள்ளிட்ட பல இடங்களில் மாடுகள் அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நோய்தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வெளியிடங்களுக்கு மாடுகள் போக்குவரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
துறைசார் மேற்பார்வை குழு
கூட்டத்தில் ஹலீம் எம்.பி.
நாட்டின் பல பகுதிகளில் மாடுகளுக்கு வைரஸ் தொற்று அம்மை நோய் பரவியுள்ளதால் குர்பான் விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். குர்பான் தொடர்பில் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஹலீம் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் 19 தொற்று காலத்தில் சமய கடமைகளை நிறைவேற்றுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு ஆபத்துகளைத் தவிர்க்க முடிந்தது. இதுபோன்று தற்போது முஸ்லிம்கள் குர்பான் கடமையை நிறைவேற்ற தயாராகிக்கொண்டிருக்கும்போது புதிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. மாடுகளுக்கு அம்மை நோய் பரவியுள்ளது. குருநாகலில் இத்தொற்று நோய் ஆரம்பித்து வடக்கு, கிழக்கு மத்திய மாகாணங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. அத்தோடு பல இடங்களில் அரசாங்கம் மாடு அறுப்பதற்குத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் குர்பான் விடயத்தில் மாற்று தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கான வழிகாட்டல்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மத விவகார அமைச்சும் வழங்க வேண்டும்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பொன்று வழங்க வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களுடன் கலந்துரையாடி குர்பான் தொடர்பில் தீர்மானமொன்றினை நிறைவேற்றவேண்டும்.
சுகாதார அமைச்சு மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளது. நோய்தொற்றுக்குள்ளான மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குர்பான் தொடர்பில் தெளிவுகள் இல்லை. எனவே மதவிவகார அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து தெளிவூட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கவேண்டும் என்றார்.
விவசாய விஞ்ஞான துறை உதவி ஆராச்சியாளர் இர்சாத் கமால்
இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் மாடுகள் வைரஸ் தாக்கத்துக்குட்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளன. இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக துறைசார் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கலந்துரையாடினேன். எனவே குர்பான் காலத்தை நெருங்கியுள்ள எமது சமூகத்துக்கு இது தொடர்பில் தெளிவுகளை வழங்க வேண்டும் என விவசாய விஞ்ஞான துறைசார் உதவி ஆராய்ச்சியாளரும், உதவி விரிவுரையாளருமான எம்.இர்சாத் கமால் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த நிலைமையில் வைரஸ் தாக்கம் மாடுகளுக்கு மாத்திரமல்ல, ஏனைய சில கால்நடைகளுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகியுள்ளன. மாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் அம்மை நோய்க்கு மிருக வைத்தியர்கள் சிகிச்சைகளை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் மிருகங்களுக்கு செலுத்தப்படும் ஊசி மூலமான மருந்துகள் மிருகங்களின் உடம்பில் சில காலம் இருக்கும். மருந்துகளின் தாக்கம் இருக்கும்.
எனவே இவ்வாறான மாடுகள் மற்றும் கால்நடைகளின் மாமிசத்தை உணவுக்காக எடுப்பது நிச்சயமாக பாரிய ஆபத்தாக அமையும். இது தவிர்த்துக் கொள்ளப்படவேண்டும். மிருக வைத்தியர்கள் மற்றும் இது தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மக்களை தெளிவுபடுத்தி வருகிறார்கள். இந்நிலைமையை முஸ்லிம் சமூகமே பாரிய அளவில் எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் குர்பானின் மாமிசத்தை நாம் பரவலாக பகிர்ந்தளிப்போம். தற்போதைய கணக்கெடுப்பின்படி சுமார் 75 வீதமான மாடுகளுக்கு இந்நோய் பரவியுள்ளது.
தற்போது குர்பான் சீசன் ஆரம்பமாகியுள்ளது. மாடு விற்பனையாளர்கள் இந்நோய் பரவியுள்ள பிரதேசங்களிலிருந்து குறைந்த விலைக்கு மாடுகளை கொள்வனவு செய்து நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.
குர்பானுக்காக தாம் கொள்வனவு செய்யும் மாடுகளை தனவந்தர்கள் பார்ப்பது கூட இல்லை. அத்தோடு கூட்டு குர்பானுக்காக கொள்வனவு செய்யும் மாடுகளுக்கான நிலைமையும் இப்படியே. இஸ்லாமிய சட்டவிதிகளின்படி குர்பானுக்கான மாடுகள் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். நோய்களற்றதாக இருக்க வேண்டும். இதுவே இஸ்லாமிய சட்டம். அதனால் வைரஸ் தாக்கத்துக்குள்ளான மாடுகள் குர்பானிலிருந்தும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான மாடுகள் குர்பான் கொடுக்கப்பட்டால் அதன் மாமிசத்தை உண்பவர்கள் நோய் நிலைமைக்கு உள்ளாக்கப்படுவர்.
நோய்த் தாக்கத்துக்குள்ளான மாடுகள் மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாலும் மருந்துகள் குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குள் மாடுகளின் உடலில் இருக்கும். இம்மருந்துகளின் தாக்கம் குறைவடைவதற்கு சில காலம் செல்லும். அதற்குள் அம்மாட்டினை அறுத்து அதனை குர்பான் இறைச்சியாக பகிர்ந்தளித்தால் அதனைப் பெற்றுக்கொண்டு உண்பவர்களும் நோய் தாக்கங்களுக்கு உட்படுவார்கள்.
இவ்வாறான சிக்கல்மிகுந்த நிலையில் உலமாக்களின் தீர்மானமே அவசியமாகும். மக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். உலமாக்கள் ஒரு சில பள்ளிவாசல் மிம்பர்களில் மக்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அத்தோடு மாடுகளுக்கு மாற்றீடாக குர்பானுக்கு என்ன வழி என்பதையும் உலமாக்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
கொவிட் 19 காலகட்டத்தில் அது தொடர்பான நிபுணர்கள், வைத்தியர்கள் மக்களைத் தெளிவுபடுத்தினார்கள். கொவிட் 19 வைரஸ் தொற்றுகாலத்தில் மக்களை அதிலிருந்தும் பாதுகாப்பதற்காக மார்க்க கடமைகளை பள்ளிவாசல்களில் மேற்கொள்ளாது வீடுகளில் மேற்கொள்ளுமாறும் எமது மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். சமூகத்தை பாதுகாத்தார்கள். இவ்வாறான ஒரு காலகட்டத்திலே நாம் இன்று இருக்கிறோம்.
தற்போதைய மாடுகள் நோய்த்தாக்கம் காரணமாக குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் சமூக அமைப்புகள், ஊர்த்தலைவர்கள் குர்பான் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும். மாடுகளை தவிர்த்து குர்பானுக்கு மாற்றுவழி காணப்பட வேண்டும். மேலும் தடுப்பூசி ஏற்றப்பட்ட மாடுகளும் குர்பானுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மருந்து ஏற்றப்பட்ட மாடுகளின் உடலில் அந்த மருந்தின் தாக்கம் குறிப்பிட்ட காலத்துக்கு தங்கியிருக்கும். எனவே அவ்வாறான மாடுகளின் மாமிசத்தை உண்பதால் பாரிய நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகலாம். பல பகுதிகளில் இவ்வாறான மாடுகள் களவில் குர்பானுக்காக அறுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனவே மக்கள் குர்பானில் மிக அவதானமாக இருக்கவேண்டும். மாடு இன்றி மாற்றுவழி காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வத்துகாமம் பிரதேசத்தில்
நோய் இனங்காணல்
வத்துகாமம் மிருக வைத்தியசாலை பிரிவுக்குட்பட்ட கலதெனிய பிரதேசத்தில் மாடுகளுக்கு வைரஸினால் பரவும் அம்மை நோய் (Lumpy Skin Disease) இனங்காணப்பட்டுள்ளதாக வத்துகாமம் அரசாங்க மிருக வைத்திய அதிகாரி பாத்ததும்பறை பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
2023.06.06 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகளின் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் கிடைக்கப்பெற்றதும் பாத்ததும்பறை பிரதேச செயலாளர் இது தொடர்பில் அவதானம் செலுத்தும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளு-க்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட கடிதம் வத்துகாமம் நகரசபையின் செயலாளர், பாத்ததும்பறை பிரதேச சபையின் செயலாளர், வத்துகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில், வத்துகாமம் மிருக வைத்திய பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இந்நோய்க்குள்ளான மாடுகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக வத்துகாமம் மிருக வைத்திய காரியாலயம் தெரிவிக்கிறது. இம்மாடுகள் குர்பான் கொடுப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் இவ்வாறான மாடுகளை குர்பானுக்காக தேர்ந்தெடுப்பதிலிருந்தும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
மேல் மாகாணத்தில் நோய் பரவல்
மாடுகளுக்கு பரவியுள்ள தோல் மீதான அம்மை நோய் மேல் மாகாணத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இங்கும் பரவியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாடுகளின் இந்த நோய் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டுமென அரச மிருக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சிசிர பியசிறி அறைகூவல் விடுத்துள்ளார்.
மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அம்மை நோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை பொதுமக்கள் மாட்டிறைச்சி உண்பதிலிருந்தும் தவிர்ந்து இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தற்போது இலங்கையில் மாடுகளுக்கு அம்மைநோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக வடமேல், வடமத்திய மாகாணங்களில் இந்நோய் வேகமாகப்பரவி தற்போது மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணத்துக்கும் பரவியுள்ளது. இந்நோய்த் தாக்கம் காரணமாக நாட்டின் பால் உற்பத்தியும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ‘நோய்த்தாக்கத்துக்குள்ளான பசுக்களின் பால் உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சியடையும்.
நோய்த்தாக்கம் ஏற்பட்டதன் பின் அந்த மாடுகளுக்கு நடப்பதற்கு முடியாமல் போகலாம். உணவு உண்ணுவது குறைவடையும். குறிப்பாக சிறிய இளம் மாடுகள் இறந்துவிடும். இந்நோய் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாக மாறியுள்ளது. வைரஸ் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பால் உற்பத்தி பிரதேசங்களான மத்திய, வடமேல், ஊவா போன்ற மாகாணங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் மாட்டிறைச்சியை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள்
கால்நடைகளைத் தாக்கிவரும் வைரஸ் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை மத்திய மாகாணத்தில் கால்நடைகளை உள்ளே கொண்டு வருவதற்கும் வெளியே கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பொது மக்கள் மாட்டிறைச்சி உண்பதை தவிர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண விலங்கு உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்கவினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல மிருக வைத்திய அதிகாரி பிரிவிலும், நுவரெலியா மாவட்டத்தில் ராகல மிருக வைத்திய அதிகாரி பிரிவிலும், கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, ஹத்தரலியத்த மற்றும் உடுநுவர மிருக வைத்திய அதிகாரி பிரிவிலும் இந்நோய் பரவியுள்ளதாகவும் ஆர்.எம்.கே.பி.ராஜநாயக்க தெரிவித்தார்.
இது வைரஸ் தொற்றுநோய் எனவும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
Post a Comment