Header Ads



இந்திய முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒபாமா - ஆத்திரமடைந்த இந்தியா


பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கொடுத்துள்ளார்.


அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அதிபர் பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


அவரது கேள்விக்கு இந்தியாவில் பாகுபாடு என்பதற்கே இடமில்லை என்று மோதி பதிலளித்தார். இதற்கிடையே, பிரதமர் அமெரிக்காவில் இருக்கும்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையின் உரிமைகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசினார்.


ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியுள்ளார்.


“ஒபாமா ஆட்சியில் இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 6 நாடுகள் மீது அமெரிக்கா குண்டு வீசியுள்ளது. அப்படியிருக்கும்போது, மக்கள் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை உண்மையென்று நம்புவார்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.



பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 20ஆம் தேதியன்று தனது முதல் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றபோது, பைடன் அரசு அவரை மிகச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டன.


ஆனால், இதற்கிடையே மோதி அரசு பெருமான்மை அரசியல் செய்வதாக ஒபாமா முன்வைத்த கருத்து மீதான விவாதம் சூடுபிடித்தது.


பிரதமர் மோதி அமெரிக்கா சென்றதுமே, அந்நாட்டின் பல எம்.பிக்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் இந்தியாவில் மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். ஆனால், ஒபாமாவின் கருத்துக்குப் பிறகு, இந்தக் கேள்விகள் மீது அதிக கவனம் குவியத் தொடங்கியது.


இதற்குப் பிறகு, கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை பிரதமர் சந்தித்த பிறகு, இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அமெரிக்க செய்தியாளர் சப்ரினா சித்திக் இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் குறித்த கேள்விகளைக் கேட்டார்.


இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், ஜனநாயகம் என்பது இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளது என்று கூறினார்.


பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒபாமா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அந்த ட்வீட் இஸ்லாமிய வெறுப்பு கருத்தாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிதியமைச்சரும் ஒபாமாவை குறிவைத்து விமர்சித்துள்ளார்.


அமெரிக்க செய்தியாளரான கிறிஸ்டியன் அமன்போர் ஒபாமாவிடம், “அதிபர் பைடன் தனது நிர்வாகத்தின் மையமாகத் தற்காப்பு ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார். உலகளவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் காலகட்டம் இது.


சர்வாதிகாரிகள், சர்வாதிகாரங்களால் ஜனநாயகம் சவாலுக்கு உள்ளாகி வருகிறது. தாராளவாத ஜனநாயக நாடுகளிலும் அது சவாலுக்கு உள்ளாகிறது. சீன அதிபரை பைடன் சர்வாதிகாரி எனக் கூறுகிறார். இந்நிலையில், எதேச்சதிகாரியாக அல்லது குறைந்த அளவு தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் பிரதமர் மோதியை ஜோ பைடன் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார்.


அப்போது, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால், சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கோள் காட்டிக் கூறினார் ஒபாமா.


அப்போது, “இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியுடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிளவுபடுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது,” என்று தெரிவித்தார்.


பராக் ஒபாமாவை குறிவைத்து கருத்து தெரிவித்த அசாம் முதல்வர், வெள்ளிக்கிழமையன்று, “இந்தியாவிலும் பல ஹுசேன் ஒபாமாக்கள் இருக்கிறார்கள். நாம் வாஷிங்டன் வரையிலும் செல்வதற்கு முன்பாக அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும். அசாம் காவல்துறை அதற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படும்,” என்று பதிவிட்டார்.


அவரது இந்தப் பதிவு சமூக ஊடகங்கள் முதல் அமெரிக்க பத்திரிகைகள் வரை விவாதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது நிதியமைச்சரும் இணைந்துள்ளார்.


அவர் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒபாமாவின் கருத்து குறித்து விமர்சித்ததோடு, அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கினார்.


அப்போது, “அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மத சகிப்புத்தன்மை பற்றிய கருத்துகள் அவர்கள் தரப்பிலிருந்து வருகின்றன. முன்னாள் அதிபர் சில விஷயங்களைக் கூறுகிறார்.


அவருடைய ஆட்சியின்கீழ், சிரியா, ஏமன், சௌதி, இராக் என்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளில் குண்டுகள் வீசப்பட்டன. ஏழு நாடுகளில் போர் போன்ற சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.


இதுபோன்ற நாடுகள் இந்தியா மீது குற்றச்சாட்டுகளைக் கூறும்போது, அதை யார் நம்புவார்கள்?”என்று கூறினார் நிர்மலா சீதாராமன்.


இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்; இந்தியா மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


“இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் “இந்தியாவில் சிறுபான்மை உரிமை குறித்து பேசுபவர்கள்; எத்தனை முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறித்தும் யோசிக்க வேண்டும்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். BBC

1 comment:

  1. இந்தியா என்கிற இழி தேசம் உடைந்து துண்டு துண்டாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது

    ReplyDelete

Powered by Blogger.