Header Ads



சிறுவன் உயிருடன் எரித்துக் கொலை: அக்காவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களால் ஏற்பட்ட விபரீதம்


- பிபிசி -


ஆந்திர பிரதேசத்தில் 16 வயது சிறுவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


அந்தச் சிறுவன் வீட்டைவிட்டுச் சென்று இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தினமும் காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக அவன் வீட்டை விட்டு கிளம்புவான்.


கடந்த வெள்ளியன்று காலையும் அவன் அப்படித்தான் கிளம்பினான். ஆனால் அதன்பின் அவன் வீடு திரும்பவேயில்லை.


அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன் அமர்நாத், யாரோ சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளான்.


"அவனை யாரோ அடிக்கிறார்கள் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் அவனது உயிரையே எடுத்துவிடும் அளவுக்கு இப்படியொரு கொடூர சம்பவம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் உயிரிழந்த சிறுவன் அமர்நாத்தின் உறவினர் லக்‌ஷ்மி தெரிவித்தார்.


ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அன்று காலை 5 மணியளவில், டியூஷன் சென்றுகொண்டிருந்த சிறுவன் அமர்நாத் வழிமறித்து தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறான்.


தன்னுடைய தந்தை மறைவிற்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தான் அமர்நாத். வீட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள ராஜவொலு மேல்நிலை பள்ளியில் படித்த வந்த சிறுவன், டியூஷனுக்காகவும் தினமும் காலை பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.


கடந்த வெள்ளியன்று காலை வீட்டிலிருந்து கிளம்பிய அமர்நாத்தை, அடுத்த 10 நிமிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ரெட்டி (23) என்னும் இளைஞன் வழிமறித்துள்ளார்.


உயிருடன் இருக்கும்போதே கைகள் கட்டப்பட்டு, உடலில் தார்ப்பாய்கள் சுற்றப்பட்டு, கொடூரமாக எரிக்கப்பட்டிருக்கிறார் சிறுவன் அமர்நாத்.


சிறுவன் அமர்நாத் பேசியுள்ள கடைசி வீடியோவில், தான் தாக்கப்படுவதாகவும், தன் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


"நான் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது என்னை வழிமறித்தனர். சாலையில் என்னை நிறுத்திய அவர்கள் என் வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். என் கைகளைப் பின்னால் வைத்துக் கட்டினர். எனது உடலை தார்பாய் வைத்து சுற்றியதுடன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். என்னைத் தாக்கிய வெங்கடேஸ்வருடன், மற்றொரு 3 நபர்கள் இருந்தனர். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்போது நடந்திருப்பது அவர்களுக்கும் நடக்கவேண்டும். அவர்களை விட்டுவிடாதீர்கள்,” என்பதுதான் சிறுவன் அமர்நாத்தின் கடைசி வார்த்தைகள்.


சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது, அமர்நாத் கொடுத்த வாக்குமூலங்கள் இவை.


மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அமர்நாத்தின் உயிர் பிரிந்திருக்கிறது. குண்டூர் மருத்துவமனையில் அவரது உடலின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.


அமர்நாத்தின் சொந்த ஊரான செருக்குப்பள்ளி கிராமத்திற்கு உடலை எடுத்துச் சென்றபோது, வழியிலேயே உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசி யூனியன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.