Header Ads



ஹஜ், குர்பான், ஊழல், ஆசிரியர் பற்றாக்குறை என முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டிய இம்ரான் Mp


- ஹஸ்பர் -


இவ்வருட ஹஜ் குழுவினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொண்டுக் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்தார். 


இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நிதியத்தை கையாள்வதற்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பொறிமுறையொன்று கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும் என இம்ரான் எம்.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்


பாராளுமன்றத்தில்  (21) புதன்கிழமை இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


இன்று நீதியமைச்சரினால் மூன்று சட்ட மூலங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த விவாதத்தை நாங்கள் பார்க்கின்றபோது, ஆளும் கட்சி எதிக்கட்சி என்ற அடிப்படையிலேயே பல உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். பெரும்பாலும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இதனை நடைமுறைப்படுத்துகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. 


அந்தவகையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சம்பந்தமான பிரேரணையை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாம் வரவேற்கிறோம். எனினும், இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எமது யோசனைகளை முன்வைத்துள்ளோம். 


இவ்வாறான சட்டங்கள் நாம் கொண்டுவந்தாலும் அவை அமுல்படுத்தப்படுகின்றதா என்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக இருக்கிறது. 


ஊழல் விவகாரத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசப்படுகின்றனர். அரச ஊழியர்கள் தமது கடமைகளை சரிவர செய்வதற்கு இந்த சட்ட மூலம் உதவவேண்டும். இந்த சட்டமூலத்தை விரைவாக அமுலுக்கு கொண்டுவந்து ஊழலற்ற நாடாக எமது நாட்டை கொண்டுவர முதற்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன்.  


ஹஜ் நிதியத்தில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 8 நூற்று 58 ரூபாவும் 83 சதமும் கடந்த மார்ச் 28 ஆம் திகதி மிகுதியாக காணப்பட்டுள்ளது.  இந்த நிதியின் ஊடாகவே இவ்வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்களும் இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது சவூதி அரேபியா சென்றுள்ளனர். 


இதில், ஹஜ் குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு தலா 2 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான விமான டிக்கட், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, குறித்த நான்கு பேரினதும் சவூதி அரேபிய விஜயத்திற்கான செலவுகளுக்கு மொத்தமாக 40 இலட்சம் ரூபா பணம் ஹஜ் நிதியத்திலிருந்து  வழங்கப்பட்டுள்ளது.


நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட இந்த பாரிய நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைளுக்காக சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஹஜ் நிதியத்தின் நிதியினை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. 


எனவே, ஹஜ் நலன்புரி நிதியம் கையாள்வது தொடர்பில் ஒரு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றுக்கு வர வேண்டும்.


அதுமட்டுமல்லாமல் ஹஜ் குழுவின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கூட்டாக இணைந்து புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்து மூல முறைப்பாடொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.


மேலும்,  ஹஜ் நலன்புரிக்கு திணைக்களத்திலுள்ள பெண் உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஆண் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளர். இதேவேளை, இவ்வருட ஹஜ் குழுவிற்கு எதிராக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு முகவர் நிறுவனங்களினால் உயர் நீதிமன்ற்ததில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வருட கடமைக்கான ஏற்பாடுகளின் போது, ஏற்கனவே 2013ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல காரணங்களை முன்வைத்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.


முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்த தருனத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் மார்க்க அனுஷ்டானம் இருக்கின்றது. 


நாடு முழுவதும் மாடுகளுக்கு ஒருவகை தொற்று நோய் பரவியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பான சுகாதார அமைச்சு முறையான எச்சரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. 


அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எவ்விதமான வழிகாட்டல்களும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க தவறியுள்ளது. இது தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் பல தடவை துறைசார் மேற்பார்வை குழுவில் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.


அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் எச்.என்.டீ. தகைமையுள்ள ஆங்கில ஆசிரியர் பதவி வெற்றிடத்தை நிறப்புவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் பரீட்சார்த்திகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, குறித்த பெறுபேற்றை உடனயாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு, இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் இதுவிடயமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்கிறேன் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.