Header Ads



குர்ஆன் எரிப்பு - ஸ்வீடன் மீது அதிகரிக்கும் அரபு நாடுகளின் கோபம்


- BBC -


அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொதிப்படைய செய்யும்படியான ஒரு நிகழ்வு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அரங்கேறி உள்ளது.


அந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் வெளியே, முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை ஒரு நபர் கிழித்து போட்டதுடன் அவற்றை தீயிட்டு எரிக்கவும் செய்தார்.


இந்தச் சம்பவத்துக்கு துருக்கி மற்றும் செளதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் (NATO) சேர்வதற்காக ஸ்வீடன் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு துருக்கி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் தலைநகரிலேயே குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டின் மீதான துருக்கியின் கோபத்தை மேலும் கூட்டியுள்ளது.


குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஸ்டாக்ஹோமில் போராட்டம் நடத்த ஸ்வீடன் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


முஸ்லிம்களுக்கு எதிராகவும், குர்திஷ் இன மக்களுக்கு ஆதரவாகவும் ஸ்வீடனில் அவ்வபோது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, அந்நாட்டின் மீது துருக்கி ஏற்கனவே கடும் கோபத்தில் உள்ளது. இதுவே நேட்டோ அமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைய துருக்கியின் ஆதரவு அவசியம் என்ற நிலை இருக்கும் போது, பக்ரீத் திருநாளின் போது ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்வீடன் மீதான துருக்கியின் ஆத்திரத்தை அதிகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.


யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த நாளில் இருந்தே நேட்டோ அமைப்பில் இணைய, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் முயற்சித்து வருகிறது. ஆனால் இதை விரும்பாத துருக்கி, ஸ்வீடனை நேட்டோவில் சேர்ப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் ஃபீடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது’ என்று அமைச்சர் ஹக்கின் ஃபீடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


“ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இந்தச் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள இயலாது” எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்வீடன் நிகழ்வுக்கு அமெரிக்காவின் கண்டனத்தை பதிவு செய்தார்.


இதனிடையே, குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஸ்வீடனுக்கான தமது நாட்டு தூதரை காலவரையின்றி திரும்பப் பெறுவதாக மொரோக்கோ அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும் ஸ்வீடன் தூதருக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.


ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிரபல மசூதிக்கு முன் 200 நபர்கள் நேற்று ஒன்றாக திரண்டிருந்தனர். அவர்கள் வேடிக்கை பார்க்கும்படி, அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர் குர்ஆன் பக்கங்களை கிழித்து, அதை கொண்டு தங்களது காலணிகளை துடைத்தனர். பின்னர் அதனை தீயிட்டு கொளுத்தினர் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர், ‘அல்லாஹு அக்பர்’ என்ற கோஷத்தை எழுப்பியதாகவும், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்ததாகவும் ராய்ட்டர் நிறுவன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா, துருக்கியை தொடர்ந்து சௌதி அரேபியாவும் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெறுக்கத்தக்க இதுபோன்ற தொடர்ச்சியான செயல்களை ஏற்றுக் கொள்ள இயலாது. இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பையும், இனவாதத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்பது தெளிவாகிறது’ என்று சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை ஸ்வீடன் போலீசார் கைது செய்துள்ளனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் இராக்கில் இருந்து தப்பித்து ஸ்வீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.


“கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்த தான் விரும்பினேன்” என்று குர்ஆனை எரித்த தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்துள்ளார்.


“இது எங்களின் ஜனநாயக உரிமை. இவ்வாறு செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால், அவர்களின் கருத்து ஜனநாயகத்துக்கு ஊறுவிளைக்க கூடியது” என்று சல்வான் கூறியிருந்தார்.


குர்ஆனை எரித்து கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய சல்வானின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு ஸ்வீடன் போலீசாருக்கு இருந்தது.


குர்ஆனை எரிக்கும் போராட்டத்திற்கு சல்வான் போலீசாரிடம் அனுமதி கேட்டதுடன், ஸ்வீடனில் குர்ஆனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார் எனவும் ஸ்வீடன் அரசு ஊடகமான டச்சுஸ் வெல் (Deutsche Welle) செய்தி வெளியிட்டிருந்தது.


இதனிடையே, “குர்ஆனை எரித்த சல்வானின் செயல் சட்டப்படி சரியானது தான் என்றாலும் நியாயமற்றது” என்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டியன்சன் தெரிவித்திருந்தார்.


குர்ஆன் எரிப்பு சம்பவத்தின் போது அங்கு கூடியிருந்த சிலரிடம் அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டது.


‘முஸ்லிமாக என்னுள் இருக்கும் உணர்வுகளை யாராலும் பறிக்க முடியாது. சல்வானின் இந்த செயலை மோசமாக கருதுவதோடு, அதற்கு முக்கியத்துவம் தரவும் விரும்பவில்லை’ என்று 32 வயதான அவசன் மெஜோரி என்பவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.


‘சல்வானின் இந்த செயல் வன்முறையை தூண்டவும், முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும் வழி வகுக்கும்’ என்றும் லிபியாவை சேர்ந்த ஹுஸாம் அல் கோமதி என்பவர் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.


குர்ஆனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சமீபகாலமாக ஸ்வீடன் போலீசுக்கு நிறைய விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை போலீசார் நிராகரித்துள்ளனர்.


இந்த விஷயத்தில் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று ஸ்வீடன் நீதிமன்றமும் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது.


நேட்டோ அமைப்பில் சேர்வதற்காக ஸ்வீடன் மேற்கொண்டு வரும் முயற்சியில், தற்போது நிகழ்ந்துள்ள குர்ஆன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பன போன்ற யூகங்களுக்கு இடமில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டியன்சன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.


பக்ரீத் திருநாள் அன்று ஸ்டாக்ஹோமில் குர்ஆன் எரிப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள மசூதியின் நிர்வாகம், இந்த சம்பவத்துக்கு போலீசார் அனுமதி அளித்தது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.


மசூதியின் தலைமை நிர்வாகியான இமாம் முகமது கல்ஃபி இதுகுறித்து கூறும்போது, “ குறைந்தபட்சம் போராட்டம் நடத்தும் இடத்தையாவது மாற்றுங்கள் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்தோம். சட்டப்படி எங்கள் கோரிக்கையை போலீசார் நினைத்திருந்தால் நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை” என்று கல்ஃபி வருத்தம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.