Header Ads



தென்கொரியா செல்லவிருந்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமைச்சரும் சீற்றம்


தென்கொரிய தொழில் வாய்ப்பிற்காக இளைஞர்களை ஏற்றிச்செல்லவிருந்த, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 நேற்று (20) சுமார் 12 மணி நேரம் தாமதமாகியுள்ளது.


தென் கொரியாவுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால், கொரிய தொழில் வாய்ப்பிற்காக பணியாளர்களை அனுப்புவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


தென்கொரியாவில் தொழில் வாய்ப்பிற்காக செல்லும் இளைஞர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு செவ்வாய் (20) இரவு இன்சியொன் நகருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-470 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது.


இந்த விமானத்தில் இருந்து 181 பயணிகள் தென்கொரியாவுக்குச் செல்வதற்காக காத்திருந்த நிலையில் அவர்களில் கிட்டத்தட்ட 60 இலங்கை இளைஞர்கள் தொழில் வாய்ப்பிற்காக பயணம் செய்யவிருந்தனர்.


800ஆவது குழு கொரிய தொழில் வாய்ப்பிற்காக புறப்படும் நிலையில், இந்த குழுவை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தயார் செய்திருந்தது.


இருப்பினும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தாமதம் காரணமாக அவர்களை நேற்று கொரியாவிற்கு அனுப்ப வேண்டாம் என கொரிய மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து விமானப் பயணிகள் தற்போது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த மே மாதம் 23 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் தாமதம் காரணமாக அந்த விமானத்தில் கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கை ஊழியர்களை மனிதவளத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.


இதனை தொடர்ந்து இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், ஜூன் 4 ஆம் திகதி தொழிலாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அன்றும் இரண்டு மணித்தியாலங்கள் விமானம் தாமதமாகச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.